Friday, 5 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - கதிர் பாலசுந்தரம்முன்னுரை

 விடுதலைப் போருக்குள் தங்களை மறைத்து வைத்துக் கொண்டு தர்பார் நடத்தியவர்கள் பற்றிய இந்த நவீனம் இலங்கையின் வடபால் அமைந்த யாழ்ப்பாண தீபகற்பத்து சமகால அரசியல் வரலாற்றை ஒட்டியதகும்.

தமிழ்த் தலைவர்கள் ஒருமித்து வடகிழக்குத் தமிழர்களுக்கு ஒரு தனித்தாயகம் பெற முயற்சிப் பணிகளை வட்டுக்கோட்டையில் ஆரம்பித்ததை அடுத்து, சிங்கள அரசு தனது சிங்களச் சிப்பாய்களை ஏகபோகமாகக் கொண்ட முப்படைகளையும் ஏவி  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
 தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மூத்த தலைவர்களின் அஹிம்சை முயற்சி தோல்வி கண்டதை அடுத்து இளைஞர்கள் ஆயுதமேந்தினர். இவர்கள் பல்வேறு குழுக்களாகினர். 
               
 ஆயுதக் குழுக்களுள் சில அல்லது ஆயுதக் குழுக்களின் சிலர் விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் வகையில் தம் இரத்தத்தின் இரத்த உறவுகளையே துன்புறுத்தி சித்திரவதைசெய்து களவெடுத்து கொள்ளையடித்து கொன்று கொடுமைப்படுத்தி கொடிய அராஜகம் பண்ணினர்.   

யுத்தத்தினால் உருக்குலைந்த யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவரிடமும் குறைந்தது மனதை உருக்கும் ஒவ்வொரு கதையாவது இருக்கிறது. அந்தச் சோக கீதங்கள் இந்த அரசியல் நாவலில் ஓங்கி ஒலிக்கின்றன.

விடுதலைப் போராளிகள் என்ற முத்திரையைத் துஸ்பிரயோகம் செய்து, தாயகத்தில் பஞ்சமா பாதகங்கள் புரிந்த பலர் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மகனை வெட்டிக் கொலை செய்தவனை, அக்காவைச் சுட்டுக்கொன்றவனை, வீட்டைக் கொள்ளை அடித்தவனை, கப்பம் பிடுங்கியவனை அவர்கள் உறவுகள் லண்டன் வீதிகளிலே சகசமாய்க் காண்கின்றனர். அவர்கள் குமுறுகிறார்கள் இவர்களுக்கு தண்டனை இல்லையா என்று. 
   
இந்த நாவல் வட இலங்கையின் சாய்ந்து கெட்ட சரித்திரத்திரத்தை மட்டும் ஒப்புவிக்கவில்லை. எவ்வளவுக்கு மனிதவிழுமியங்கள் கடித்துச் சப்பிக் குதறப்பட்டுள்ளன என்பதனையும், மனித சி;ந்தனைகள் எவ்வளவுக்கு வக்கிரபுத்திக்கு அடிமையாகியுள்ளன என்பதனையும், துப்பாக்கிக் கலாச்சாரம் மக்களை எவ்வளவுக்கு செம்மரி மந்தைகளாக்கி உள்ளது என்பதனையும் பேசுவதற்கு அப்பால் ……

இந்த நாவலின் பிரதான இலட்சியம் போரளிகளின் விடுதலைப் போர்ப் பங்களிப்பை இரத்தினச் சுருக்கமாகப் பதிவாக்குதலாகும். வழிதவறிய போராளிகள் தவிர்ந்த களத்தில் நின்ற போராளிகள் விடுதலைப் போரைப் புனித கைங்கரியமாக பயபக்தியோடு உயிரைத் தியாகம் வைத்து முன்னெடுத்தவர்கள். அவர்களது மேலான புனிதமிகு தியாகங்களையும் பதிவு செய்யும் தமிழ் ஈழத்துப் புறநானூறாக மறைவில் ஐந்து முகங்கள் நாவல் மலர்கின்றது

நாவலின் கதாநாயகி சொல்வதைக் கேளுங்கள்: மக்களுக்கு சேவை செய்யத் தங்களைக் கடவுள் பணித்துள்ளார் என்று மதவாதிகள் யாராவது சொன்னால், அது அவர்களுக்கும் அவர்களுடைய கடவுளுக்கும் இடையிலான விடயம். அப்படியல்ல நாங்கள். நாங்கள் விடுதலைப் போராளிகள். தலைமை எங்களை என்ன சேவைக்காக அழைத்தாலும் அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதே எமது திருப்பணி. தலைவர்தான் எமது கடவுள். அவர் இடும் கட்டளையை தராசில் வைத்து முள் எந்தப் பக்கம் சாய்கிறது என்று கூர்ந்து பார்ப்பது எமது வேலை அல்ல. கடமையைச் செய்யத்தான் எமக்குத் தெரியும். எமக்குத் தீர்ப்பு வழங்கத் தெரியாது. ஏன் எதற்கு என்று வழக்காடுவது எமது பணி அல்ல. அது எமது புனித விடுதலைப் போர் இலட்சியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும்.” 

மறைந்து போன 2000 ஆண்டு காலத்தில் இந்த நாவல் மறைவில் வளர்ந்த வேளை, ஈழத் தமிழ் எழுத்தாளன் வாய் திறந்து பேச முடியாத காரிருள் சூழ்ந்த அவலம் குடிகொண்ட காலம். விளைவு, இந்த நாவலில் களத்தில் சதுராடிய இயக்கங்களுக்கு விலங்கு-சடப்பொருள் வேசம் போட்டுள்ளேன் ---
குப்பைத்தொட்டி, கறுப்புநரி,
கழுதைப்புலி, கோட்டான்,
மரநாய்களைச் சந்திக்கப்போகிறீர்கள்.


கதிர் பாலசுந்தரம்  

No comments:

Post a Comment