Monday, 7 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 24 - ஒத்திப்போட்ட  புத்தி

         
            நேரம் பகல் ஒரு மணியாகப் போகின்றது. கொதிக்கும் சூரியன் வெப்பக் கதிர்களால் குறொம்வெல் காட்டைத் தீய்த்துக் கொண்டிருந்தான். அந்தக் குட்டைக் காடு முழுவதும் துப்பாக்கி ஓசையின் பின் நிசப்தமாகிவிட்டது.

            ஜீவிதா உட்பட யாருமே ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் இன்னும் வாய்  திறக்கவில்லை. என்ன நடந்தது, ஏது நடந்தது என்பது புரியாது திகைத்து அஞ்சி நடுங்கினார்கள்.

            இரண்டு கார்களுக்குமிடையில் உள்ள சிறு வெளியில் இரு வெள்ளைப் பெடியன்களும் குப்புறக் கிடந்தார்கள். அவர்களின் அருகே ஜீவிதாவை நோக்கியபடி அமிர் நிலத்தில் மல்லாக்காகக் கிடந்தான்.

             அங்கு ஆனந்தமாகப் பறந்து வந்த ஒரு வெள்ளைப் பறவை பச்சைக் காரின் பின்னே நின்ற மரத்தில் இருந்ததும், அமிரின் இரத்தம் தோய்ந்த உடையைக் கண்டு பயந்து திரும்பவும் பறந்து மறைந்தது. கத்திக் கொண்டு சென்ற அந்தப் பறவையின் அபாயக் குரல் வெகுதூரம் வரை கேட்டது.

            நிலத்திலே குப்புறக் கிடந்த வெள்ளை நண்பர்கள் ஓரம் திகைத்து நின்ற பெரிய பெட்டை திடுதிப்பென அவ்விடத்தைவிட்டு ஓடத் தொடங்கினாள்.

            “நில்லு. ஓடினால் சுடுவேன். நில்லுஎன்று ஜீவிதா சத்தமிட்டாள்.

            ஓடினாலும் சுடுவாள் என்ற பயத்தில் எதிரே நின்ற மரத்தின் கீழே சின்ன பெட்டையின் முன்னே நின்றாள். சின்னப் பெட்டை அடிமரத்தோடு ஒட்டினாற்போல நின்றாள்.

            தேகத்தோடு ஒட்டிய வெள்ளை பிளவுசும், வெள்ளைத் தொடைகள் தெரியும் கறுப்புக் குட்டை பட்டுப் பாவடையும் அணிந்திருந்த அவர்கள் இருவரும், அழுது குளறி நடுங்கியபடி தங்கள் நண்பர்களைப் பார்த்தனர். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட அவர்களால் நிட்சயிக்க முடியவில்லை.  

            அந்த மரத்தின் பின்னே அவர்களது சிவப்புக் கார் நின்றது. அந்தக் காரை அடைந்துவிட சின்னப் பெட்டை தருணம் பார்ப்பது ஜீவிதாவுக்கோ பெரிய பெட்டைக்கோ தெரியாது. சிணுங்கிக்கொண்டு நின்ற அவளை ஜீவிதா முற்றாகவே மறந்துபோனாள்.

            பெரிய பெட்டை நண்பர்களை உற்றுப் பார்த்தாள்

            'அசையாது குப்புறப் படுங்கள். அசைந்தால் சுட்டுக் கொல்வேன்என்று ஜீவிதா ஆவேசமாகச் சத்தம் போட்டுச் சுட்ட நேரம் தொடக்கம் அவர்கள் அங்கே குப்புறக் கிடக்கிறார்கள். உடைகளில் இரத்தம் பரந்த அடையாளங்கள் தெரியவில்லை. அவர்கள் அசைவதாகவும் பெரிய பெட்டைக்குத் தெரியவில்லை.

            அவர்களின் அருகில் மல்லாக்காகக் கிடந்த அமிரை பெரிய பெட்டை அவதானித்தாள். அவன் வெள்ளை உடைகள் இரத்தத்தில் தோய்ந்து இருந்தன. அவன் கால்கள் அசைவதைக் கண்டாள். அவளுக்கு மனதில் ஒரு தவிப்பு. பெருமூச்சுவிட்டாள். 'அவன் சாகக் கூடாது. அந்த எசியன்காரன் சாகக் கூடாது.” அவள் உள்ளம் தவித்தது.

            தான் கொடுத்த கொட்டனால் அடித்தபடியால்தான் அமிருக்கு அப்படி ஒரு ஆபத்தான நிலை என்பதை எண்ணிப் பார்த்த பெரிய பெண், அதற்காகத் தன்னையே நொந்து கொண்டாள். 'அவன் மரணிக்கக்கூடாதுஎன்று இறைவனிடம் பிரார்த்தனை வேறு செய்தாள்.
           
            திடீர் கோபத்தால் தப்பைச் செய்து விட்டு வருந்தத் தெரிந்த அவளுக்கு, தப்பைச் செய்யாமல் தப்பத் தெரியவில்லை. அவள் குற்றமா? படைப்பின் குற்றமா? மரபணுக்களின் குற்றமா? அதையெல்லாம் ஆராயும் நிலையில் அவள் இல்லை.

            அவளுக்குத் தன் பின்னே நின்ற சிநேகிதியின் சிணுங்கல் கேட்டது. தலையைத் திருப்பாமலே குரல் கொடுத்தாள்.

லின்டா."
என்ன?"
அழாதே லின்டா. எங்களுடைய சிநேகிதர்களின் உடைகளில் இரத்தம் இல்லை. குப்புறப் படுக்காவிட்டால்தானே சுடுவதாகச் கூச்சல் போட்டாள். அவள் சொன்னதும் படுத்துவிட்டார்களே. சுட்டிருக்கமாட்டாள்என்று மெதுவாகக் குசுகுசுத்தாள்.
            அவளின் முதுகைச் சொரிந்துகால்கை அசைவது தெரிகிறதா?" என்று லின்டா வினாவினாள்.
உன்னுடைய சிநேகிதன் தலையைத் திருப்பி என்னைப் பார்க்கிறான்."
அப்படியா? யேசு பெருமானே கருணைகாட்டுங்கள்!"

றோஸி, என்ன நீ உணர்ச்சி வசப்படுகிறாய்?"
அந்த ஏசியன் சாகவில்லை. கையை ஊன்றி எழும்ப முயல்கிறான்."

            மல்லாக்காகத் தரையில் கிடந்த அமிர் எழும்ப முயன்றான். அவன் தனது அருகில் குப்புறக்கிடந்த வெள்ளைகளைப் பார்த்தான். இரத்த அடையாளம் தேடினான். அப்படி எதுவும் தெரியவில்லை. அவர்கள் நிலை அவனுக்குத் தெளிவுபட வில்லை. அவர்கள் அசையாது கிடந்தது அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. ஜீவிதாவைப் பார்த்தான். அவள் இரு கைகளாலும் பிஸ்டலை கெட்டியாகப் பிடித்திருந்தாள். கொட்டன் கொடுத்த பெரிய பெட்டையைச் சுடவே பிஸ்டலை நீட்டியபடி நிற்கிறாள் என்று அமிர் கருதினான்.

            அமிர் ஜீவிதாவைப் பார்த்தான். அவள் உணர்வுகளை அவளது முகத்தில் அவனால் வாசிக்க முடியவில்லை. அவள் பயந்து ஒடுங்கிவிட்டதை அவனால் உணர முடியவில்லை

            'இப்ப யாழ்ப்பாணப் பெட்டைகளை நம்ப முடியாது. பயிற்சி எடுத்தவளைப்போல பிஸ்டலைப் பிடித்திருக்கிறாள். ஏதாவது இயக்கத்தில் முன்னர் இருந்தவளோ? உவளுக்கு ஏது பிஸ்டல். யார் கொடுத்திருப்பார்கள்? ஏன் இங்கு கொண்டு வந்தாள்? ஏன் கொண்டு வந்தாள்? விசரி ஏன் கொண்டு வந்தாள்?” அமிரின் விசாரணை விடை காணவில்லை.

            யாழ்ப்பாணம், கட்டுவனில் மண்கிண்டிக்குப் பிறந்த ஒருத்தி இங்கிலாந்தில் ஒரு காட்டில் பிஸ்டலோடு தர்பார் நடத்துவதை அவனால் கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியவில்லை.
           
            சிந்திக்க எத்தiயோ நாட்களல்; மாதங்கள் இருந்தன. ஜீவிதா சிந்திக்கவில்லை. இப்பொழுதுதான் சிந்திக்கிறாள். அவள் பட்டுத் தெளிந்து வாழ்க்கையைப் படிக்கிற வகையைச் சேர்ந்தவள்

            அவளால் தன்னையே புரியமுடியவில்லை. அவள் தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள். அவளை அங்கு இழுத்துச் சென்ற உணர்ச்சிகள் வேடிக்கை பார்ப்பதுபோல அவளுக்குப் பட்டது. தான் இத்தனை நாட்கள் மந்திர மாயத்துள் சிக்கி வாழ்ந்தது போல ஒரு மயக்கம். இரண்டு தோணிகளில் தான் நீண்ட நாட்கள் பிரயாணம் செய்ததாக மனதில் ஒரு உறுத்தல்.

            'நான் அந்தக் கறுப்பங்கி நெட்டையின் பொறிக்குள் சிக்கி இருக்கக்கூடாது. என்னை லண்டனுக்கு அனுப்பியது கறுப்பு நரிகளுக்கு எதிரான பகைவர்களைத் துப்பறிந்து மாதாந்த அறிக்கை சமர்ப்பிக்கவே. இப்படிக் கொலைத் தொழிலுக்கு என்னை தலைமைப் பீடம் அனுப்பவில்லை. அந்தக் கறுப்பங்கி நெட்டையனுக்கு நான் முடியாதென்று முற்றாக மறுத்திருக்க வேண்டும். தலைமைப் பீடம் எனக்கு அறிவிக்கட்டும் என்று சொல்லி இருக்கவேண்டும். எனக்கு நெத்திக்கு நேரே சொல்ல முடிவதில்லை. என்னுடைய வழுக்கல் குணம் என் வாழ்வுக்கே முழுக்கு வைத்துவிட்டது. நான் ஒரு கொலைகாரியாகாமல் தப்பியதே நான் போனபிறப்பில் செய்த புண்ணியந்தான்.” தன்னையே நொந்த அவள் அமிரை அவதானித்தாள்.

            அமிரின் உபாதை வரவர குறைந்தது. உடலை அசைக்க முடிந்தது. வெள்ளைப் பெடியன்களைப் பார்த்தான். குப்புறப் படுத்திருந்தார்கள். அவர்கள் மரணித்து விட்டார்களா அல்லவா என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. தலையை மெதுவாக உயர்த்தி வெள்ளைக் குமர்களைத் தேடினான். பெரிய பெட்டை மரத்தடியில் நிற்பதைக் கண்டான். றோஸி தனது நண்பர்களைப் பார்த்தபடி நின்றாள். அவள் அழுவது போலத் தெரிந்தது

            'சின்னப் பெட்டை எங்கே பேய்விட்டாள்? ஓடித் தப்பிவிட்டாளோ? சிவப்புக் கார் நிற்கிறது. அவள் எங்கே?” என்று அமிர் தன்னைத் தானே குடைந்தான்.

            லின்டா, சின்னப் பெட்டை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நழுவி மரத்தின் பின்னே உள்ள தங்கள் சிவப்புக் காருக்குள் ஏலவே ஏறிவிட்டாள். அவளை இன்னும் யாரும் அவதானிக்க வில்லை. அவள் ......................

            அமிர் எழும்புவதைப் பார்த்தபடி ஜீவிதா தனது பச்சைக் காரின் பொனற்றின் முன் நின்றாள். இன்னும் அவள் பிஸ்டலை இரு கைகளாலும் நீட்டிப் பிடித்தபடியே நின்றாள்.

            "ஏய் லின்டா. ............... ஏய் லின்டா." பெரிய பெட்டை றோஸி மெதுவாகக் குரல் கொடுத்தாள். ஆனால் பதில் இல்லை. அவளுக்குத் தெரியாது தனது முதுகுப்புறம் நின்ற லின்டா அவ்விடத்தைவிட்டு நழுவிச் சென்றுவிட்டாள் என்பது

            லின்டா ஜீவிதாவுக்கு தெரியாமல் மரத்தோடு மறைந்து நின்று மிகக் கவனமாகப் பொலிசுக்குடயல்பண்ணினாள்.

            அமிரின் உடல் வேதனையை ஜீவிதாவின் பிஸ்டலும் செய்கையும் போக்கிவிட்டன. அவன் கைகளை நிலத்தில் ஊன்றி எழுந்து ஜீவிதா நின்ற இடத்தை அடைந்தான். இருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளிகூட இல்லை. அவள் இன்னும் அந்த பிஸ்டலை இரு கைகளாலும் பிடித்தபடி தனது காரின் பொனற்றோடு நின்றாள்.

            அவளை விழுங்கப் போகிறவன் போலக் கண்மடல்களை அகலத் திறந்து வாயை ஆவென்று விரித்து வைத்தபடி பார்த்தான்.

            “ஏது உனக்கு உந்த பிஸ்டல்? ஏன் உதை இங்கே கொண்டு வந்தாய்?"

            ஜீவிதா வாய் திறக்கவில்லை. அது அமிரின் ஆத்திரத்தை அதிகரித்தது.

            “ஏன்டி நாயே உந்த பிஸ்டலைக் கொண்டு வந்தாய்? உனக்கேதடி பிஸ்டல்?"

            ஜீவிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. வாய் திறக்கவில்லை

            “சொல்லடி பெட்டைக் கழுதை. ஏன்டி உந்தச் சனியன் பிஸ்டலைக் கொண்டு வந்தாய்? உனக்கேதடி பிஸ்டல்? சொல்லடி நாயே!"

            அவன் குரல் காடு முழுவதும் எதிரலை அடித்தது. நாலா பக்கத்துப் பற்றைகளிலிருந்தும் குருவிகள் கீச்சிட்டு எழுந்து பறந்தன.

            ஜீவிதா நட்ட கட்டை மாதிரி நின்றது அமிரின் கோபத்தைப் பொங்கி வெடிக்கச் செய்தது. அவன் மண்டையின் உள்ளே கொதித்தது. அவனது கண்கள் அவளைச் சுட்டு எரித்தன.

            ஜீவிதா வாய் திறக்கவில்லை. கையில் இன்னும் பிஸ்டலைப் பிடித்திருந்தாள்.

            சின்னப் பெட்டை லின்டா, தனது கை ரெலிபோனில் ஒரு பொலிஸ் அதிகாரியோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
சரி.சரி. லின்டா உதென்ன வித்pயாசமான சத்தம்?"
அந்த ஏசியன் துப்பாக்கியால் சுட்டவளின் கன்னத்திலே சத்தம் போட்டபடி படார் படாரென அடிக்கிறான்."
சுட்டவள் கையில் துப்பாக்கி இப்பொழுதும் இருக்கிறதா?"
ஆம்."
அதனால் மீண்டும் சுட முயற்சிக்கிறாளா?"
இல்லை."
ஹலோ லிண்டா, ;போ என்ன சத்தம்?"
அந்த ஏசியன், அவன் நல்ல உயரம். ஏதோ தனது பாஷையில் சத்தம் போட்டு ஏசியபடி அவளின் தலையிலே பிடித்து பயித்தியகாரனைப் போல உலுப்புகிறான். "
அவள் என்ன செய்கிறாள்?"
அவள் சிலையைப் போல மௌனமாக நிற்கிறாள்."

            ஜீவிதா கல்லுப் போல நின்றாள். மீண்டும் அமிர் விசர் கொண்டவனைப் போலப் பாய்ந்து கத்தி உறுமி விழுந்து எழுந்து ஓங்கி அவளது முதுகிலும் முகத்திலும் மார்பிலும் மளமளவென்று குத்தினான்.

            அவள் தரையில் விழுந்து எழுந்து மீண்டும் கல்லுப் போல நின்றாள். இன்னும் அந்த பிஸ்டல் அவள் கையில் இருந்தது.

            அவன் அடித்துக் களைத்து மூச்சு வாங்கினான்

            ஜீவிதா எதுவித சலனுமுமின்றித் தனது மார்பகத்தை மூடிநின்ற குருத்துப் பச்சைச் சேலையின் மறைப்பில் இருந்த சட்டைக்குள் கையைவிட்டு, ஒரு மெல்லிய கறுப்பு நூலை வெளியே இழுத்து எடுத்து அதிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய சைனைற் குப்பியை அமிரின் முகத்தின் எதிரே பிடித்தபடி அவனைப் பார்த்தாள்.

            அவளின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சொரிந்து கொண்டிருந்தன.

            ஜீவிதா சட்டைக்கு வெளியே எடுத்தது, கறுப்பு நரிகள் பகைவனின் கையில் சிக்கினால், இயக்க இரகசியங்களைச் சித்திரவதை மூலம் பகைவன் பெறாமல் இருப்பதற்காகத் தற்கொலை செய்யச் சப்பும் சைனற் குப்பி.

            அமிருக்கு உலகமே சுழல்வது போன்றிருந்தது. கனவோ கற்பனையோ என்றும் புரியவில்லை. மயக்கமோ மூளை மாறாட்டமோ என்பதும் அவனுக்குத் தெளிவாகவில்லை.   அவனால் நம்ப முடியாவிட்டாலும் நம்பியே ஆகவேண்டியிருந்தது. மனதைத் தையிரியப் படுத்திக்கொண்டு,

நீ. நீ. நீ  ........ " என்றான்.
அவள் பேசவில்லை.
நீ நீ ........ கறுப்பு .....?"
அவள் தலையை ஒருமுறை மேலும் கீழும் ஆட்டினாள்.
நீ .... நீ கறுப்பு நரியா?" 


வந்து  ......." ஜீவிதா இழுத்தாள்.
நீ ..... கறுப்பு நரியா? என்னைக் கொலை செய்யவா இங்கு அழைத்து வந்தாய்?"
அவள் ஒன்றுமே பேசவில்லை.

            “நான் தமிழ் அரசுக் கட்சி அரசியல்வாதி. அதனால் களை எடுப்பா ஜீவிதா? பின் ஏன் தாமதம்? என்னைச் சுட்டுக் கொல்லக் கொண்டு வந்த பிஸ்டல்தானே? சுடு ஜீவிதா இனத் துரோகியை. பதுங்கியிருந்து கொன்று புதுப் புறநானூறு படைத்த நீங்கள், காதலனையும் சுட்டுப் புது அகநானூறு படைக்கப் போகிறீர்களா? தமிழன் விடிவின் மூச்சாய் இருந்து உங்களை வளர்த்த பெருந்தலைர் அமிர்தத்தின் கழுத்திலே கத்தி வைத் நீங்கள், என்னை விடுவீர்களா? ஏன் தாமதம் என் ஆருயிர்க் காதலியே? என்னைச் சுடு. என் இதயத் தேனமுதே என்னைச் சுடு. உனக்கு வீரசொர்க்கம் கிடைக்கும்." 

            அவள் கையில் பிஸ்டல். கற்சிலைபோல் நின்றாள்.

            “என்னைச் சுட்டால் தமிழ் ஈழம் கிடைக்குமென்றால், ஏன் தாமதம்? என்னைச் சுடு ஜீவிதா. என்னைச் சுடு ஜீவிதா. களை எடுப்பு, களை எடுப்பு என்று எங்களை மட்டும், தமிழ் அரசுக் கட்சி மிதவாதிகளை மட்டும்துரோகிகள்என்று சொல்லிச் சுட்டுக் கொல்கிறீர்கள். எங்களது இன்ன குறிப்பிட்ட செயலால் தமிழ் ஈழம் தள்ளிப்போகிறது என்று நிரூபித்தால், ஜீவிதா நீங்கள் எம்மைச் சுடத் தேவையில்லை. நாங்களே, எங்கள் தலைகளைக் கொய்து கிழுவங் கதியாலிலே குத்தி யாழ்ப்பாணம் கச்சேரிக் கூரையிலே குத்தி வைப்போம்." என்று கூச்சலிட்டான்.

            மீண்டும் பித்துப் பிடித்தவனைப் போல ஓலமிட்டு இரு கைகளாலும் தனது தலைமயிரைப் பிய்த்து  ஓவென்று கத்தினவனின் கண்கள் வெளியே வந்து அவளை கோரமாக நோக்குவது போலவிருந்தது.

            அவ்வேளை ஒரு சிவப்பு-வெள்ளை வண்ண ஹெலிகொப்டர் ஏறக்குறைய ஆறு சுதுர மைல் பரப்பைக்கொண்ட குரொம்வெல் வனத்தினைச் சுற்றிப் பறந்து எவரும் எல்லையைக் கடந்து தப்பாமல் நோட்டம் பார்க்க, வேறு ஒரு ஹெலிகொப்டர் அவர்களுக்கு நேர் மேலே இரைந்து வட்டமிட்டது. சின்னப் பெட்டை லின்டா, காரின் மறைவில் வானம் நன்கு தெரிந்த ஓரிடத்தில் நின்று தான் அணிந்திருந்த சிவப்புக் கழுத்துக் கைக்குட்டையைக் கழற்றி கைகளில் உயரப்பிடித்து அசைத்துக்கொண்டு நிற்பதை யாரும் கவனிக்கவில்லை.

            ஜீவிதா தனது காரின்பொனற்றோடுஒட்டியபடி நின்றாள். ஹெலி கிளப்பிய காற்றின் வேகத்தில் ஜீவிதாவின் குருத்துப் பச்சைச் சேலைத் தொங்கல் பறந்தது. குலைந்து சிலும்பிக் கிடந்த கருங் கூந்தல் காற்றின் அகோரத்தில் சன்னதமாடியது.

            நேரமாக நேரமாக நடந்து முடிந்த சோக காவியத்தின் சுமை அதிகரித்து அதிகரித்து அமிரின் உள்ளத்தைத் தீயில் போட்டு வதக்கியது. தர்மத்தை அதர்மம் வென்று ஆட்சி செலுத்துவதாகத் தலையில் அடித்து முறையிட்டு, ஆவேசமாகக் கத்திக் கூச்சலிட்டுக் குனிந்து நின்று பூமியின்மேல் ஓங்கி அடியடியென்று அடித்து ஓவென்று காடதிரக் கத்தினான்.
           
            அமிர் உணர்ச்சி வசப்பட்டவன், அவன் எதனையும் முன்பின் யோசிக்காமல் செய்யக்கூடியவன் என்பதைக் கடந்த பல மாதகால நட்பிலிருந்து ஜீவிதா அறிந்து வைத்திருந்தாள். அவளுக்குப் பயமாக இருந்தது.

            “ஜீவிதாஉன்னை இவ்வளவு காலமும் எனது இதயத்தில் வைத்துப் பூசை செய்தேன். இன்று எத்தனை இன்பக் கனவுகளோடும் கற்பனைக் கோட்டைகளோடும் ஓடிவந்தேன். இந்தக் குரொம்வெல் வனத்தையா நந்தவனச் சோலை - அங்கு இன்பச் சமுத்திரத்தில் நீந்தலாம் - புது உலகம் காணலாம் என்று அழைத்து வந்தாய்? கடவுளே. இப்படி ஒரு சோதனையா? சொல் ஜீவிதா ஏன் என்னைச் சுடச் சொன்னார்கள்? எதற்காகச் சுட்டுக் கொல்லச் சொன்னார்கள்?" என்று உணர்ச்சி வசப்பட்டு அவளை இரு கைகளாலும் மீண்டும் பிடித்து உலுப்பி உலுப்பிக் கேட்டான்.

            அவள் வாயிலிருந்து சொற்கள் அரைகுறையாக வந்தன.

            "நீங்கள்  தமிழ் அரசுக் கட்சி  அரசியல்வாதி. நீங்கள் கிறேற் பிரிட்டனில் உள்ள  ஓய்வுபெற்ற தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளை நெதர்லாந்தில் உள்ள ஹேக்நகர உலக நீதிமன்றத்தில் நிறுத்துவிக்கவே லண்டன் வந்திருப்பதாகவும் - அதனைத் தடுக்கவே உங்களை தீர்த்துக் கட்டும்படியும் கட்டளையிட்டான்" என்று கூறிய ஜீவிதா, மீளவும் ஏதோ கூற வாய் திறக்க முன்பே இடை மறித்த அமிர்,

            “போர்க்களத்திலே புனித நோக்கோடு போராடுகிற - போராடிய போராளிகளை எமது கட்சி என்றும் காட்டிக்கொடுத்ததில்லை - காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை, ஜீவிதா. அவர்கள் தங்க ஏட்டிலே வைடூரியத்தால் புதிய புறநானுறு எழுதுபவர்கள். அவர்கள் தமிழ் வரலாற்றின் புனித வீரச் சொத்துக்கள்."

            அவள் காதைத் தீட்டிக் கேட்டாள்.

            "நாம் சொல்லிக் கொடுத்து உலக நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதெல்லாம், தமிழ் ஈழ விடுதலைப் போராளிகள் என்ற போர்வையில் - தம் அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியல்வாதிகள், மற்றும் புத்திஜீவிகள், செல்வந்தர், உயர் சாதியினர், மீதுகொண்ட காழ்ப்புணர்வினால் - அப்பாவிகள் மீது பொய்யான சமூகவிரோத பழிகளைச் சுமத்தி, அவர்களை மிருகங்களிலும் கேவலமாக நடாத்தி சித்திரவதை செய்து கொலை செய்தபின்அவர்களிடம் பிடுங்கிய பணத்திலேயே ஒழித்தோடி வந்து படாடோபமாக லண்டனில் வாழ்பவர்களையே நெதர்லாந்தில் உள்ள ஹேக்நகர நீதிமன்றில் நிறுத்த லண்டன் வந்துள்ளேன்." 

            ஜீவிதாவின் காதுகளில் அவனது வார்த்தைகள் சூறைக் காற்றாகச் சுழன்று இரைந்து கூச்;சலிட்டன. பிஸ்டல் இன்னும் அவள் கையில் இருந்தது.

            அமிர் தொடர்தான்.

            “ஜீவிதா, அந்த கல்நெஞ்சக் கொலைஞர்களின் அடாவடித்தனங்களை அட்டூழியங்களை யாருக்கு ஆயுதமற்ற அப்பாவிகள் முறையிடமுடியும்? பஞ்சமாபாதகச் செயல்களைப் புரிந்துவிட்டு சட்டத்துக்குத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழவிடக்கூடாது என்பதை உலகிற்குச் சுட்டிக் காட்டுவதற்காக, அவர்களை ஹேக்நகரத்தில் உள்ள உலக நீதி மன்றத்தில் நிறுத்துவது தவறா?"

            ஜீவிதாவின் தலையில் வானம் இடிந்து பொல பொலவெனக் கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. அவன் விசர் பிடித்தவன் போல கையை ஓங்கி கார்பொனற்றில்குத்தினான்.

            “லண்டனிலே வைத்து உனக்குக் கட்டளையிட்டது யார், ஜீவிதா? சொல்லு ஜீவிதா சொல்லு" என்று பித்துப் பிடித்தவன் போல் கானகம் எங்கும் எதிரொலிக்கக் கத்தினான்.

            ஜீவிதாவின் முகத்தில் இருந்த கடுமை குறைந்திருந்தது. அமிரின் முகத்தைப் பார்த்துப் பதில் சொல்லும் மன உறுதி அவளிடம் காணப்படவில்லை. தரையைப் பார்த்தபடியே,

            “யு508 நெடுஞ்சாலையில் வரும்பொழுது நீங்கள் சொன்னீர்களே, கைத்தடியைத் தூக்கிப் பிடித்தபடி வீதி ஓரம் நிறுத்தப்பட்ட வெள்ளைக் காரடியில், கறுப்புச் சேட்டும் ரவுசரும் அணிந்த நெட்டையன் ஒருவன் நிற்கிறான் என்று. அவன்தான் கட்ளையிட்டவன்."
என்னைக் கொல்லவா உன்னை லண்டன் அனுப்பினார்கள்?"
இல்லை. இல்லை. நான் நீங்கள் வர ஒரு வருடம் முன்னரே வந்துவிட்டேனே? உளவு வேலை செய்து பகை இயக்கத்தவர்கள் மற்றும் எதிரிகள் பற்றி மாதம் மாதம் அறிக்கை அனுப்பவே என்னை லண்டனுக்கு அனுப்பினார்கள். நீங்கள் வந்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகே திடீரென அந்தக் கறுப்பங்கி நெட்டையன் என்னைச் சந்தித்து, தன்னைப் பொட்டர் அனுப்பி உள்ளதாகக் கூறி, தொடர்ந்து வெருட்டி இறுதியில் சம்மதிக்கச் செய்தான்." அமைதியாக ஜீவிதா பதில் அளித்தாள்.

            “அப்படியானால் எதற்காக என்னை அந்த வெள்ளைகள் அடித்துக் கொலை செய்யவிடாமல் பாதுகாத்தாய்? நீ சுடாமலிருந்தால், நீ என்னைச் சுட்டுக் கொல்லாமலே உன் நோக்கம் வெற்றி அடைந்திருக்கும், கறுப்பு நரிகளின் ஒரு அரசியல் துரோகியும் ஒழிந்திருப்பான். என்னைக் கொன்ற பாவமும் பழியும் உன்னை வருத்தாது."

            ஜீவிதா ஏதோ சொல்ல விரும்பினாள். ஆனால் சொற்கள் தொண்டையில் சிக்கிச் சுழன்று சக்தி இழந்து நின்றன. ஓசை வெளிவரவில்லை. விரிந்த கண்கள் குத்தி நிற்க அமிரை ஆவென்று பார்த்தபடி நின்றாள்.

            மேலே பறந்த ஹெலிகொப்டரின் ஓசை காதைக் குடைந்து குடலைப் பிடுங்கியதுமரக் கிளைகள் சந்நதம் பிடித்வள் போல தலைவிரித்து ஆட்டபோட்டன. அதைப்பற்றி அவர்கள் இருவரும் அக்கறைப்பட வில்லை. அதைவிடப் பெரிய பிரளயத்துள் அவர்கள் திணறிக்கொண்டிருந்தனர்.

            சிவப்புக் காரின் ஓரம் நின்ற லின்டா பொலிசின் கேள்விக்கு ரெலிபோனில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஹலோ லின்டா. நாங்கள் நெடுஞ்சாலையால் திரும்பிக் காட்டுப் பாதைக்கு வந்துவிட்டோம்."
பயமாக இருக்கிறது. விரைவாக வாருங்கள்."
பயப்படவேண்டாம். ஹலோ லின்டா உங்கள் காரைத் தொடர்ந்து ஒரு வெள்ளை டீஆறு கார் வந்ததா?"
என்ன கேட்கிறீர்கள்?"
நான் கேட்பது யு508 நெடுஞ்சாலையைவிட்டு காட்டுப் பாதையில் நீங்கள் வந்தபோது ஒரு வெள்ளைக் கார் உங்களைத் தொடர்ந்து வந்ததா?"
இல்லை."
இங்கே காட்டுப் பாதையில் ஒரு வெள்ளைக் கார் நிற்கிறது. அதன் ஓரம் ஓர் ஆறடி உயர கறுப்பங்கி அணிந்த ஏசியன் நின்றான். அவனை விசாரிக்க நெருங்கிய சமயம் அவன் பிஸ்டலால் தன் காதுக்குள் சுட்டுத் தற்கொலை செய்துவிட்டான்."
ஏன் அவன் எங்களைத் தொடர்ந்து வந்தான்? ஏன் தற்கொலை செய்தான்?"
லின்டா கேட்டாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

            பொலிசாருக்கும் புரியவில்லை அந்தக் கறுப்பங்கி நெட்டையன் ஏன் அங்கு சென்றான் என்பது. அவன் தான் தப்புவதற்கு ஓர் இலகுவான திட்டம் வகுத்திருந்தான். அவனது திட்டப்படி ஜீவிதா அமிரைக் கொல்லுவாள். அவளைத்தான் அந்தக் காட்டில் வைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டுப் போனால்; காதலர் விவகாரம் என்று உலகம் பேசும். கறுப்பு நரிகள்மீது எந்தப் பழியும் விழாது. அதற்கு வாய்ப்பாக அமிரையும் நதியாவையும் தொடுத்து ஈஸ்ற்ஹம் நகர யாழ்ப்பாணத் தமிழர்கள் அளக்கிற கிசுகிசு வாய்ப்பாகவும் நல்ல சாட்சியாகவும் இருந்தது.

            அமிர் நீண்ட நேரம் செதுக்கிய கற்சிலையாக நின்றான். அவன் வதனம் கோலம் மாறுவதை ஜீவிதா அவதானித்தாள்.

            மனிதம் ஒரு புதுமையானது. மனிதன் கோபத்தில் தாண்டவமாடினால் அது ஒளிந்து மறைந்துகொள்ளும். கோபந் தணிந்தபின்தான் ஒட்டி, எட்டி எட்டிப் பார்த்துத் திரும்பும். பின்னர் தர்மம் தத்துவம் எல்லாம் வாய் நிறையப் பேசும். 'என்ன மனிதம் அப்பா நீ? ஆபத்தில் அரோகரா என்று கைவிட்டுவிடுகிறாயே?” இப்படி எல்லாம் பேசக்கூடிய மனோநிலையில் அமிர் இல்லை

            அவன் முகத்தில் அமைதியும் தெளிவும் ஆட்சிசெய்யத் தொடங்கின. அவன் பேசத் தொடங்கினான்.

ஜீவிதா, அந்த வெள்ளைகள்தான் எனக்கு அடித்தார்கள். அதை உன்னால் பொறுக்க முடியவில்லை. ஏன் என்று யோசித்துப் பார்."

            ஜீவிதா அமிரைப் பார்த்தாள். அவளுக்கு அவன் குணம் தெரியும். மிக விரைவிலேயே நிதானமாகிவிடுவான்.

            அவன் தொடர்ந்து பேசினான்.

            “ஜீவிதா, சென்ற வாரமும் நீ சுவானேஜ் நகர கடற்கரைக்கு என்னை அழைத்துச் சென்று இடைநடுவில் சுகமில்லை என்று சொல்லித் திரும்பினாய். எனக்கு இப்போதுதான் புரிகிறது. சுட்டுக் கொலை செய்ய அழைத்துப் போனாய். உன் மனச் சாட்சி இடந்தரவில்லை. பாதி வழியில் திரும்பிவிட்டாய், இல்லையா?"

            அவன் அச்சொட்டாகச் சொன்னது அவளுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவள் பதில் சொல்லவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.           
            அவன் தொடர்ந்தான்.

            “வெள்ளைகள் வந்திருக்காவிட்டாலும் இம்முறையும் உனக்கு என்னைச் சுட மனவுறுதி வந்திருக்க முடியாது. காதல் புனிதமானது ஜீவிதா. அதற்கு ஓர் அற்புத சக்தி இருக்கிறது. நீ அந்த வெள்ளைகளைச் சுட்டதற்குக் காரணம், நீ என் மீது வைத்திருக்கிற அன்பும் காதலுந்தான். நீ கொலை செய்ய ஏன் ஒத்துக் கொண்டாய்? அது உனக்குப் புரிகிறதா?" இவ்வாறு கேட்டுவிட்டு அமிர் ஜீவிதாவை நோக்கினான்.

            ஜீவிதாவின் முகத்தின் கடுமை நொய்ந்தது. கடந்து வந்த பாதைகளை எண்ணிக் கழிவிரக்கம் அடைந்தாள். இத்தனை நாட்கள் போராடிப் போராடித் தோற்றுப்போன உள்ளம் இறுதியில் ஞானம் பெறத் தொடங்கியது. காலம் கடந்த ஞானம் என்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது.

            பொலிசின் சைரன் ஒலி அமிருக்கு என்ன நடக்கப் போகிறது என்று எச்சரித்தது. அமிர் தான் சொல்ல முற்பட்டதை விரைவில் முடிக்க விரும்பி,

            “ஜீவிதா, நீ எப்படி வன்முறைவாதிகளின் குறட்டுப் பிடிக்குள் சிக்கினாய் என்பதைக் கேள். பொதுவாக அவர்கள், இளைய சமுதாயத்திற்கே உரிய உற்சாக உணர்ச்சிகளை ஆரம்பத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தங்கள் வலையினுள் அவர்களைச் சிக்க வைக்கிறார்கள். இரண்டாவதாக மூளைச் சலவை செய்து அவர்களைத் தங்கள் பித்துப் பிடித்த பக்தர்களாக மாற்றுகிறார்கள். மூன்றாம் கட்டத்தில் துப்பாக்க்pயைக் காட்டி மிரட்டியே அவர்களைக் கொலை களத்துக்கு அனுப்புகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் கட்டளையை நிறை வேற்றாதவர்கள் கொலை செய்யப் படுவார்கள் என்ற மந்திரத்தை விதைத்து வைத்திருக்கிறார்கள்" என்று கூறிவிட்டு ஜீவிதாவைப் பார்த்தான்.

            “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அமிர். தமிழ் ஈழத்துக்காக உயிர் கொடுத்துப் போராடவே கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். நான் சில மாதங்களாக ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்கியிருந்தேன். நான் ஏன் கறுப்பங்கி நெட்டையனின் சூழ்ச்சிக்கு இரையாகினேன் என்பது எனக்கே சரியாகப் புரியவில்லை. நான் மடைச்சி. நெத்திக்கு நேரே முடியாதென்று மறுத்திருக்க வேண்டும். என்னுடைய குறையே அது தான். மனிதனை முறித்து நெற்றிக்கு நேரே கதைக்கத் தெரியாது. இறுதியில் பார்ப்போம் என்று காலத்தைக் கடத்தி மடைத்தனம் செய்துவிட்டேன். இறுதியில்; எனக்கு அந்தக் குறைபாட்டால்  ‘கொலைகாரிபட்டந்தான் வரும் என்று கற்பனையிலுமே நான் எதிர் பார்க்கவில்லை" என்று கூறியவள் சலனமின்றி அமிரைப் பார்த்தபடி நின்றாள்.

            பொலிஸ் வண்டிகளின்சைரன்அபாய ஒலி வர வர அதிகரித்துத் தங்களை அணுகிவிட்டதை உணர்ந்த ஜீவிதா கையில் இருந்த துப்பாக்கியை நழுவவிட்டாள்.

            தன் கழுத்தில் தொங்கிய சிறிய சைனைட் குப்பியைக் கையில் தூக்கி வாய்க்கு அருகில் பிடித்து   . . . . . . . . . .

            பெரிய பெட்டை றோஸி திரும்பிப் பார்த்தாள். ஒரு பொலிஸ் வாகனம் பற்றைகளுக்கிடையால் வருவது தெரிந்தது. அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது

            மேலே ஆகாயத்தில் அந்தக் ஹெலிகொப்டர் தாழப் பறந்தவண்ணம் இருந்தது. குரொம்வெல் கானகத்தின் சிறிய மரக்கிளைகள் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் பேயாட்டம் போட்டன. சிறுசிறு சுள்ளிகள் முறிந்து விழுந்தவண்ணம் இருந்தன.  

            ஜீவிதாவின் வாயருகில் உள்ள சைனைட் குப்பியைப்  பார்த்துக்  கலவரப்படாமல் அமிர் அமைதியாகக் கேட்டான்,
இன்னும் வன்முறையில் உனக்கு நம்பிக்கை இருக்கிதா?"
இல்லை."
ஜனநாக நீரோட்டத்தின் கதவு எப்போதும் எல்லோருக்கும் திறந்தே இருக்கும், ஜீவிதா."
எனக்குமா?"
துப்பாக்கியைத் தூக்கி வீசிவிட்டு வருபவர்கள் அனைவருக்கும். நீ ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்ப வேண்டும். அதுவே என் விருப்பம், ஜீவிதா?"

            அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து கண்ணீர் விட்டாள். கதிரவனின் ஆட்சி கருமுகில்களைக் கிழித்துக் கொண்டிருந்தது. கடற் புறாக்கள் கூட்டம் ஒன்று மேலே பாழடைந்த குரொம்வெல் மாளிகையின் நேர் மேலே வானத்தில் வட்டம் இட்டுக்கொண்டிருந்தது. அவள் மௌனம் திடீரெனக் கலைந்தது.

            “ஆம்" என்று கூறியவள் அருள் புரிய வந்த ஆண்டவனைப் பார்ப்பது போல அமிரைப் பார்த்தாள்.

            “எங்கள் அரசியல் ஜனநாயக அரசியல். அங்கு எவரும் சைனைட் சப்பித் தற்கொலை செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. ஜனநாயக நீரோட்டத்தின் புதிய வாரிசாக உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன், ஜீவிதா" என்று கூறியபடி அமிர் சைனைற் குப்பியைப் பறித்து அருகில் இருந்த பற்றைக்குள் வீசினான்.

            அச்சமயம் அவளது காதுகளில் பொலிஸின் சைரன் அபாய ஓசை இடிமுழக்கமிட்டது.

            நிறுத்தப்பட்ட பொலிஸ் வாகனங்களிலிருந்து குதித்த பொலிசார் கிடுகிடு ஒலி எழுப்பியபடி ஓடிச் சென்றனர்

            போலிசாரைக் கண்டதும் நிலத்திலே குப்புறக் கிடந்த வெள்ளைப் பெடியள் இருவரும் துள்ளி எழுந்தனர். சின்னப் பெட்டை லின்டா, சிகப்பு கழுத்துச் சால்வையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி ஓடிச் சென்று, தனது காதலன் ஒல்லியைக் கட்டிப்பிடித்து முத்தமாரி பொழிந்தாள்.


            தன்னை நெருங்கி வந்த பொலிசாரைக் கண்டு ஜீவிதா மிரளவில்லை. தனதுபோட்பச்சைக்கார்பொனற்றோடுஒட்டியபடி சீமெந்துப் பொம்மை போல நின்றாள். ஜீவிதா ஓடித் தப்பாமல் பார்த்துக்கொள்ள நூற்றுக் கணக்கான பொலிசார் அவர்களது இரு கார்களையும் அவர்களையும் சூழ வட்டமிட்டு நின்றனர். பல துப்பாக்கிகள் அவள் தப்ப முயன்றால் வெடிப்பதற்கு ஆயத்தமாக இருந்தன

இன்னும் வரும் ... 

No comments:

Post a Comment