Saturday, 19 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 26 - தொகுப்புரை
  
             குறொம்வெல் காட்டில் ஜீவிதா கைது செய்யப்பட்டு ஏழாவது மாதம்;. கொலை செய்ய எத்தனித்தது, துப்பாக்கி வைத்திருந்தது, பயங்கரவாதி என்ற மூன்று குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, ஓல்ட் பெயிலியில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சூடுபறக்க நடந்து கொண்டிருந்தது.

            அமிரும் பூமாவும் சேர்ந்து கிறேற் பிரிட்டனின் மிகச் சிறந்த வழக்கறிஞரை ஒழுங்கு செய்திருந்தனர். ‘கொம்மன்வெல்த்முழுவதிலுமே மிகச் சிறந்த வழக்கறிஞர் என்றும், கூடுதலான கூலி அறவிடுபவர் என்றும் பிரசித்தி பெற்றவர் அந்த வெள்ளை வழக்கறிஞர்.

             அன்று விசாரணையின் இரண்டாவது தினம். ஜீவிதாவின் வழக்கறிஞர் மீண்டும் தொகுப்புரை தொடங்க இன்னும் மூன்று மணி நேரமே இருந்தது. அமிர் நீதிமன்றம் செல்லத் தனது வழமையான வெண்ணிற உடைகளை அணிந்தபின் வரவேற்பறைக்குச் சென்றான். அவனது வருகைக்காக அங்கு எதிர்பார்த்து இருந்த பூமா, அவனது உடையில் புதிய ஒரு விசேடம் இருந்ததை வியப்போடு அவதானித்தாள். அவனது சேட் பையில் அதுவரை காலமும் ஒரே ஒரு றோசா மலரே பின்னி இருந்தது. இன்று அவனின் சேட் பையில் இரண்டு றோசா மலர்கள் காணப்பட்டமை அவளுக்குப் புதுமையாக இருந்தது. அதனைவிட அமிரின் முகத்தில் வினாக் குறிகள் அரசோச்சுவதை அவள் அவதானித்தாள்.

            “என்ன அமிர், காலமை வெள்ளனவே முகம் கோலம் மாறிக் கறுத்து வாடியிருக்கிறது? வழக்குத் தோற்றுப் போகும் என்ற யோசனையோ?" என்று கேட்ட பூமா அன்ரியின் தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த குரங்குப் பொம்மையைப் பார்த்தாள்.

              பூமாவின் கேள்விக்கு மெதுவாகப் பதில் சொன்னான். அவன் குரலில் பயம் தொனித்தது.

வழக்கில் நாம் தோற்றுவிடுவமோ என்ற ஏக்கந்தான்."
நான் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் பிரிட்டனின் மிகச்சிறந்த  குற்றவியல் வழக்கறிஞரை ஒழுங்கு செய்து இருக்கிறோம். அந்த வெள்ளை வழக்கறிஞர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழக்கில் தோற்றதின் பின்னர் எந்த வழக்கிலும் தோற்காத சாதனை படைத்த சிறந்த வழக்கறிஞர். நிட்சயம் வெல்லுவோம் அமிர். வீணாக வருந்தாதீர்கள்." 
பூமா, அதைவிட வேறு ஒரு புதிய பிரச்சினையும் வரும்போல இருக்கிறது."
என்ன பிரச்சினை?"
குறொம்வெல் காட்டில் எனக்கு அடித்த தடியன் வெள்ளைப் பெடியனையும், அடிக்கப் பொல்லுக் கொடுத்த பெரிய வெள்ளைப் பெட்டையையும் நேற்று நீதிமன்றத்தில் கவனித்தனியா?"
ஓம் கவனித்தனான். அடிக்கடி உங்களைப் பார்த்தவர்கள். நானும் கேட்கவிருந்தேன். மறந்து போய்விட்டது."
அது ஏன் தெரியுமா?"
தெரியாது."
வழக்கு எமக்குச் சாதகமாகினால் மீண்டும் ஏதாவது வம்பு செய்யத்தான். நேற்று நான்பாத் றூமுக்குப்போன சமயம் என் பின்னே அந்த பெரிய பெட்டையும் தடியனும் வந்தவர்கள். நான் நிலத்தைப் பார்த்தபடி நழுவி வந்துவிட்டேன்."
எனக்கென்றால் அப்படி ஏதாவது செய்வார்கள் என்று படவில்லை. அந்தத் தடியன் சாட்சி சொன்ன போது 'நான் கொட்டனால் அமிருக்கு அடித்தனான். அமிர் வேதனையில் கத்தினான். அதன் பிறகுதான் ஜீவிதா சுட்டவள்என்று தானே கூறினவன். பொய் சொல்லாமல் உண்மை எல்லே சொன்னவன்."
உனக்கு வெள்ளையளை விளங்காது பூமா. இந்த நாட்டிலே பத்துப் பதினொரு வயதுப் பெண் பிள்ளைகளைக்கூடக் கெடுத்தது போதாதென்று பிறகு கொன்று போட்டு காடு கரம்பையிலே வீசுகிறார்கள். வருடாவருடம் கிரமமாகத் தவறாமல் நடக்கிறது. கொம்பு என்று உயர்த்திப் பிடிக்கிற ஸ்கொற்லன்ட் யாட்கூட ஒன்றும் பண்ண முடியவில்லை. யாழ்ப்பாணத்திலே உப்பிடி நாங்கள் கேள்விப்பட்ட தில்லை. உந்த வெள்ளைச் சாதியை நம்பேலாது. வழக்குத் தோற்றால் நாட்டைவிட்டு ஓடுவதுதான் புத்தி."
அமிர், ஈஸ்ற்ஹம் நகருக்குள் இருந்தால் பயமில்லை. ஈஸ்ற்ஹம் நகரில் வந்தேறு குடிகள்தான் அதிகம். அதிலும் யாழ்பாணத்தவர்தான் அதிகம். பயப்படத் தேவை இல்லை."
அதைப் பிறகு யோசிப்போம். நேரம் 8.30. மணி. புறப்படு பூமா. நேரத்தோடு போய் நீதிமன்றத்தில் முன் வரிசையில் இருப்போம். நேற்றைக்குப் பின் வரிசையில் இருந்துதான் பிரச்சினை வந்தது."

            அவர்கள் நீதிமன்றம் செல்லப் புறப்பட்டபொழுது பிரிடிஷ்லேடிஅங்கு வந்தார்.

தம்பி டே, எப்ப வழக்குத் தீர்ப்புச் சொல்லுவினம்?"
நாளைக்கு."
நாளைக்கு நானும் 'கோட்டுக்கு' வாறன். கூட்டிக் கொண்டுபோ."

            பூமாவும் அமிரும் விரைந்து புகையிரத நிலையம் சென்று ரியூப் மூலம் நீதிமன்றத்தை அடைந்தனர். அலுவல் தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.

            இருவரும் நீதிமன்றப் பார்வையாளர் பகுதிக்குச் செல்லும் கதவைத் திறந்து தலையை நீட்டிப் பார்த்தனர். இரண்டு வெள்ளைகள் மட்டும் இருந்தனர். அவர்களும் வயது போனவர்கள். இருவரும் உட்சென்று முன் வரிசையில் அமர்ந்தனர். அந்த அடித்த வெள்ளைகளிடமிருந்து தப்பி விடலாம் என்ற எண்ணம்.

            ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.

            வழக்கறிஞர்கள் தங்கள் சம்பிரதாயக் கறுப்பு உடையில் தனித்தும் கூட்டமாகவும் வரத் தொடங்கினார்கள். அவர்கள் நீதிபதியின் ஆசனத்துக்கு நேர் எதிரே இருந்த மேசையைச் சுற்றி குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கையை நீட்டி, தலையை ஆட்டி, மூக்கைச் சுழித்து, வாயைப் பிளந்து ஆரவாரமாகப் பேசினர். இன்னும் நீதிபதி வரவில்லை.

            “என்ன அமிர் ஏராளமான சட்டத்தரணிகள்; இருக்க இடமில்லாமல் கொட்டுப்படுகிறார்கள்." பூமா வினாவினாள்.
இன்றைக்கு இறுதித் தொகுப்புரை அல்லவா? பிரபல்யமான வழக்கறிஞர். அதனைக் கேட்க வேறு இடங்களில் இருந்தும் வந்து இருக்கிறார்கள்போல. யாழ்ப்பாணத்திலும் உப்படித்தான். ஜி.ஜி.பொன்னம்பலம் வந்தால் போதும். சட்டத்தரணிகள் நீதிமன்றம் நிறைந்து வழிவார்கள்."

            மண்டப அந்தப் பகுதி நிறையப் பார்வையாளர் இருந்தனர். பூமா திரும்பிப் பார்த்தாள். அந்த வெள்ளைப் பெடியளோ பெட்டையளோ அவள் கண்களுக்குப்பட வில்லை. ஆனால் பெரிய பெட்டையும் அவளின் தடியன் பெடியனும் ஏலவே வந்து விட்டார்கள். அவர்கள் வந்ததுமே அமிர் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அது பூமாவுக்குத் தெரியாது.

            ஜீவிதாவைச் சிறைச்சாலைக் காவலாளிகள் முதல் நாள் அழைத்து வந்த வாயிலை அமிரும் பூமாவும்; தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

. அதோ ஜீவிதாவைக் கொண்டு வருகிறார்கள்."

            குற்றவாளிக் கூண்டுள் ஏறியதும், ஜீவிதாவின் கண்கள் அமிரைத் தேடிக் கண்டன. அமிரும் அவளைப் பார்த்தான். பூமாவும் பார்த்தாள். அவள் வாய் முணுமுணுத்தது. 'செவ்விளநீர் வண்ணச் சேலையில் தேவதைமாதிரி இருக்கிறாள். நாளைக்குச் சுதந்திர வானம்பாடி.'

            ஜீவிதாவின் உள்ளத்தில் ஒரு புதிய புயல்.

            பூமா அமிரோடு ஒட்டினாற்போல இருப்பது அவளது இதயத்தில் தைத்தது. பூமாவை அவதானித்தாள். பூமா தனது பச்சைச் சிலைட்டைக் கழற்றிப் பொப் கூந்தலை ஒழுங்கு செய்து மீண்டும் சிலைட்டைப் பொருத்தினாள்.

            ஜீவிதாவின் உள்ளம் பேசியது. 'பூமா ஆளே மாறிவிட்டாள் போலத் தெரிகிறது. முன்னர் சிவப்புச் சிலைட் மட்டுமே அணிபவள். இன்று பச்சைச் சிலைட் அணிந்திருக்கிறாள். அதற்கு ஏற்றது போலப் பச்சை நிறச் சுடிதார் அணிந்திருக்கிறாள். அமிரைப் பார்த்து என்ன மாதிரிச் சிரிக்கிறாள். அமிரைப் பிடித்து விட்டாளோ என்னவோ?'

ஜீவிதாவின் முகத்தில் கரு முகில்கள் முகிழ்த்தன. அதே சந்தேகம் மூன்று மாதங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தைக் கிள்ளிக் கொண்டிருக்கிறது.

            ஜீவிதாவினால் அந்த எண்ணத்தைத் தவிர்க்கவும் முடியவில்லைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. குனிந்து தரையை மூடிய வெள்ளைக் கம்பளத்தைப் பார்த்தபடி அவள் மனவுழைச்சல் உழன்றது.

            'நேற்றைக்கும் இரண்டு பேரும் நெருக்மாக இருந்து சந்தோசமாகக் காதோடு காது வைத்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள். என்னைப் பார்க்கச்; சிறைச் சாலைக்கு வந்த நான்கு தடவையும் பூமாவும் கூடவந்தவள். அப்பொழுதும் இருவரும் நெருக்கமாகத்தான் சந்தோசமாக உறவாடினவர்கள். எங்கே போனாலும் இருவரும் சேர்ந்துதான் போகிறார்கள் போல. ஓரே வீட்டிலும் இருக்கிறார்கள். பூமா கவர்ச்சியாகவும் இளமையாகவும் இருக்கிறாள். அவள் மற்றவர்களின் இதயத்தை இலகுவாகக் கவரத் தெரிந்தவள். நான் அதிர்ஷ்டம் கெட்டவள். நான் அவர்கள்மீது சந்தேகங் கொள்ளக் கூடாது. அவர்களில் தப்புக் கண்டுபிடிக்கக் கூடாது.

            நான் அவர்கள் இருவருக்கும் நிரம்பக் கடமைப் பட்டிருக்கிறேன். நான் அவர்களுக்கு நன்றி கெட்டவளாக இருக்கக் கூடாது. அவர்கள்தான் எனது பரிஸ்ரருக்குப் பணம் செலுத்தியவர்கள். கொஞ்சமா? 19,000 பவுண். இலங்கைப் பணத்தில் இருபத்தொரு இலட்சத்துக்கு மேல். கட்டாயம் வழக்கு வெல்லும் என்று கூறுகிறார்கள். நான் பொறாமைப் படக்கூடாது. அவர்களை நான் பகைத்துப் பார்க்கக் கூடாது.

            அவர்கள்தான் கிரமமாக வந்து சிறைச்சாலையில் என்னைப் பார்த்தவர்கள். நான் அமிரையும் குறை கூற முடியாது. நான் அமிருக்குச் செய்த அநியாயத்தை யாரும் இந்த உலகத்தில் மனதாலும் நினைத்துப் பார்;த்திருக்கவே மாட்டார்கள். குறொம்வெல் காட்டிற்கு அமிரை அழைத்துச் சென்ற அந்த அரக்கத்தனமான செயலுக்குப் பிறகு, அமிரை நினைக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை. நான் ஊர் காட்டுவதாகப் பொய் சொல்லி முதலில் சுவானேஜ் கடற்கரைக்குக் கூட்டிக்கொண்டு போனேன். திரும்பி வந்துவிட்டேன். பிறுகும் அமிரை ஏமாற்றி குறொம்வெல் காட்டிற்குக் கூட்டிச் சென்றேன். ஏதாவது அற்புதம் நடக்கும், மீளலாம் என்று நினைத்தேன். என்ன பேய்த்தனமான எண்ணம்?
            எனக்குத் தெரியும், எனக்கு ஒரு குறைபாடு இருப்பது. தெரிந்தென்ன? அதனை என்னால் தவிர்க்க முடியவில்லையே? அது என்னுடைய சக்திக்கு அப்பால்பட்டதாக உள்ளதே. எத்தனை கோவில் படிகளில் ஏறி இறங்கி இருப்பேன். எத்தனை விரதங்கள் பிடித்திருப்பேன். ஆனாலும் என்குறை காலத்துக்குக் காலம் என் காலை வாருகிறது. கடைசி நேரம்வரை தள்ளிப் போடுகிற குணம் இறுதியிலே என்னுடைய உயிரையே கேள்விக்குறி ஆக்கிவிட்டது.
            நான் வீணாகப் பயந்து நடுங்கி அந்தக் கறுப்பங்கி நெட்டையன் சொன்னதுக்கு ஆட்பட்டிருந்தேன்.  
            நான் ஒரு விசரி. மனிதனின் முகத்தை முறிக்கக் கூடாது என்று நான் கருதக்கூடாது. முறிக்க வேண்டிய இடத்தில் முறிக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டாள் நாலு நாள் பழகினவள்கூட என்னை ஏமாளி ஆக்கிவிடுவாள். நான் அந்தக் கறுப்பங்கி நெட்டைக்கு முதல் நாளே நெத்திக்கு நேரே 'முடியாதுஎன்று சொல்லி இருந்தால் இத்தனை அவலங்களும் வந்திருக்காது. 'பார்க்கலாம் பார்க்கலாம்என்று சொல்லி ஒத்திப்போட்டு வந்தேன். முடிவிலே அவன் என்னை மடக்கிப்போட்டான்.”

            அவ்வேளை ஜீவிதாவின் வழக்கறிஞர் அவளைப் பார்த்தார். 'ஏன் தலையைக் குனிந்தபடி எதிரி நிற்கிறாள்? அவளுக்கு எனது திறமை புரியவில்லைப் போலும். நான்தான் உலகின் மிகப் பெரிய குற்றவியல் வழக்கறிஞன். இருபத்தைந்து வருடங்கள் தோல்வி காணாத வழக்கறிஞன். இன்றைக்கு வழக்கை உடைக்க இரண்டு மணி நேரம்கூட எனக்குத் தேவையில்லை.”

            எதிரியின் வழக்கறிஞர் தனது குறிப்புகளைப் புரட்டினார்.

            பார்வையாளர் பகுதி நிரம்பி வழிந்தது.

            ஊடகவியலாளர்களும் நிரம்பி வழிந்தனர். அவர்கள் ஒரு விடயத்தைச் சுடச்சுட எதிர்பார்த்து வந்து இருந்தனர். இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர் அந்தப் பிரபல்ய வழக்கறிஞர் தோற்கப் போகின்றார் என்ற கருத்தை ஒரு பிரபல தினசரிப் பத்திரிகை வெளியிட்டதே அதற்குக் காரணம்.

            ஜீவிதா இன்னும் தரையின் வெள்ளைக் கம்பளத்தைப் பார்த்தபடியே இருந்தாள். அவளது மன உழைச்சல் தொடர்ந்து வளர்ந்தது.

            'நான் இனிமேல் அமிரை மறந்துவிட வேண்டும். நான் ஒரு கொலை எத்தனக் குற்றம் சுமத்தப்பட்டவள். அப்படியான என்னை அமிர் இன்னும் காதலிக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனிதனை வழிநடத்தும் தரும ஏடுகள்கூட ஒத்துக்கொள்ளா. உலகம் என்னைக் கொலை காரியாகத்தான் பார்க்கும். எவனும் என்னை விவாகம் செய்ய முன்வரமாட்டான். அப்படி யாராவது வந்தாலும் அவனும் ஒரு கொலைக் குற்றவாளியாக அல்லது சமூகத்தால் ஒதுக்கப் பட்டவனாக அல்லது நித்திய குடிகார அயோக்கியனாக அல்லது சொத்தியாகவோ குருடாகவோ குரூர ரூபியாகவோ தான் இருப்பான். குஷ்ட ரோகத்தில் சொறியும் ஒருத்தன்கூட என்னை நினைத்துப் பார்க்க மாட்டான். வேறு யார் வருவான்? யாராவது ஒரு பொல்லுப் பிடிக்கிற கிழவனாவது வைப் பாட்டியாக வைத்துக் கொள்ள வருவாரா? இல்லை அந்தக் கிழம்கூடக் முகத்திலே காறித் துப்பும்.
            அமிரும் பூமாவும் சொல்கிறார்கள் 'நீ பயப்படத் தேவை இல்லை. நாங்கள் உனக்குப் பிடித்துள்ள வழக்கறிஞர் கிறேற் பிரிட்டனிலேயே அதி சிறந்தவர், இருபத்தைந்து வருடங்களாக அவர் எந்த வழக்கிலும் தோற்கவில்லை. வீணாக வருந்தாதே. வழக்கு நிட்சயம் வெல்லும், வெளியே வருவாய் என்று.
ஆனால் நான் வெளியே போய் என்ன பிரயோசனம்? என் வாழ்கை இருண்டுவிட்டது. அவர்கள் இருவரும் சந்தோசமாக வாழட்டும். நான் சிறையிலேயே இருக்க விரும்புகிறேன். நான் என்றும் சிறைக்கு வெளியே வரக் கூடாது. எனக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அல்லது எனக்கு ஜீவாந்தர தண்டனை விதிக்க வேண்டும். பூமா அமிரோடு சந்தோசமாக வாழட்டும். வெழியே போய் வாழ எனக்குத் தகுதி இல்லை.”

             

            அப்பொழுது "அமைதி" என்ற  நீதிமன்றச் சாஜனின் குரல் அதிகார ஆணை பிறப்பித்தது.

            யாவரும் இருக்கைகளைவிட்டு எழுந்து நின்றனர்.

            பக்கத்துக் கதவு ஒன்றின் வழியாகத் தோன்றிய வெள்ளைடோப்பும்சிவப்புப்பட்டி உடையும் அணிந்த நீதிபதி அமைதியாக நடந்து வந்து ஆசனத்தில் அமர்ந்தார்.

            நீதிபதி முதலில் எதிரிக் கூட்டினுள் செவ்விளநீர் வண்ணச் சேலையில் நின்ற ஜீவிதாவை அவதானித்தார். நெஞ்சில் படர்ந்த கூந்தலை வருடியபடி தலையைக் குனிந்து வெள்ளைக் கம்பளத்தைப் பார்த்தபடி நிற்பதைக் கண்ட அவர் 'வழக்குத் தோற்றுவிடும் என்று அஞ்சுகிறாளோ?” என்று எண்ணினார்.

            ஜீவிதாவின் வழக்கறிஞர் தொகுப்புரையைத் தொடங்கி ஒருமணி நேரமாகிவிட்டது.

            ஜீவிதா மூக்குக்கண்ணாடி அணிந்த தனது வழக்கறிஞரைப் பார்த்தாள். அவர் சம்பிரதாய கறுப்பு உடையில் எதிரியின் கூட்டுக்கும் நீதிபதியின் முன்னுள்ள சட்டத்தரணிகள் மேசைக்கும் இடையில் நின்று இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி அறுத்து உறுத்து உரத்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர் உணர்ச்சி மயமாக வாதாடுவதைப் பார்த்த பொழுது தனது வழக்கு நிட்சயம் வெல்லப் போவதுபோல அவளுக்குத் தோன்றியது.

            ஆனால் அவள் வழக்கு வெல்வதை விரும்பவில்லை. சிறைச் சுவர்களுக்கு வெளியேவர அவள் மனம் மறுத்தது. பூமா தனது சிநேகிதனை மடக்கிவிட்டாள் என்ற மன வேதனை அவளைக் கசக்கிப் பிழிந்தது.   

            நீதிபதி அவர்களின் குரல் கேடடுத் திரும்பிப் பார்த்தாள்.

நீதிபதி :           இலங்கையின் சனத்தொகை என்ன?
. .   :           18 மில்லியன்.(.. எதிரிதரப்பு வழக்கறிஞர்)
நீதிபதி :           தமிழர்களின் வீதம் என்ன?
. .   :           18 சதவீதம்
நீதிபதி :           சிங்களவரி;ன் வீதம்?
. .   :           74 சதவீதம்

நீங்கள் தொகுப்புரையைத் தொடரலாம்."

            "கனம் நீதிபதி அவர்களே, எதிரி ஒரு பயங்கரவாதி அல்ல என்பதை நிரூபிக்க மேலும் சில நியாயங்களைச் சமர்ப்;பிக்க விரும்புகிறேன்.

            சிங்கள பௌத்த பேரினவாதிகள் பாராளுமன்றப் பெரும் பான்மையை ஆயுதமாக்கித் தமிழ்ச் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை அடுத்தடுத்து அபகரித்தார்கள். இது பாராளுமன்றப் பயங்கரவாதம். இந்தப் பாராளுமன்றப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவே ஜீவிதா கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேர்ந்தாள்.

            தமிழர்கள் இலங்கையின் ஒரு புவியியற் பிரதேசத்தில், வடகிழக்கில், வாழும் நீண்ட வரலாற்றை உடையவர்கள். 1948இல் பிரிடிஷ் சாம்ராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு பெரும்பான்மைச் சிங்களவர்கள் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தித் தமிழர்களின் வடகீழ் வாழ் பிரதேசத்தைச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, தமிழர்களை அப்பிரதேசத்தில் சிறுபான்மையாக்க முயன்றனர். 1949 பிரசா உரிமைச் சட்ட மூலம் மலைநாட்டுத் தமிழர்களின் பிரசா உரிமையைப் பறித்துத் தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்தனர். 1956 தனிச் சிங்களச் சட்ட மூலம் தமிழர்களின் மொழி உரிமையைப் பறித்து அதன் மூலம்  தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பலவற்றைப் பிடுங்கி எடுத்தனர்."

            அப்பொழுது நீதிபதி அவர்கள்சுதந்திரத்தின் முன்னர் அரசாங்க மொழி என்ன?" என்று வினாவினார்.

ஆங்கிலம்" என்று எதிரி தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தபின்னர், தனது தொகுப்புரையைத் தொடர்ந்தார்.

“1972 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த ஒரு சட்டம் பல்கலைக் கழகப் பிரவேசப் பரீட்சையில் தமிழர்கள் கூடுதலான புள்ளிகள் பெறவேண்டும் என்று விதித்தது.

            கனம் நீதிபதி அவர்களே, இந்தப் பாராளுமன்ற நடவடிக்கைகளையே நான்  பயங்கரவாதம் என்று கூறுகிறேன். இந்தப் பயங்கரவாதத்தை எதிர்த்தே கூட்டில் நிற்கும் எதிரி கறுப்பு நரிகள் இயக்கத்தில் இணைந்தார். அவர் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராளி."

            அச்சமயம் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் எழுந்து, “கனம் நீபதி அவர்களே, எதிரி தரப்பு வழக்கறிஞர் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றுப் பாடம் நடாத்துகிறார்" என்று கிண்டலாகச் சொன்னார். அவர் தான் கிறேற் பிரிட்டனின் அதிசிறந்த வழக்கறிஞரை மடக்கிவிட்ட மகிழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்திருந்த வழக்கறிஞர்கள்மீது ஒரு வெற்றிப் புன்னகையை ஏவினார்.

வரலாறு தேவையா?" என்று நீதிபதி வினாவினார்.
ஆம். பாவம், அத்திபாரம் இல்லாமல் வீடு கட்டமுடியாது என்பதே தெரியாதவராக இருக்கிறாரே" என்று பதிலளித்த பொழுது பார்வையாளராக இருந்த சட்டத்தரணிகள் ஒருவரை மற்றவர் பார்த்து கண்களால் 'நல்லா வாங்கிக் கட்டினார்என்று கூறிக்கொண்டார்கள்.

எதிரிதரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தைத் தொடர்ந்தார்.

            “சுதந்திரத்தின் பொழுது பிரிட்டன் வழங்கிய சோல்பரி யாப்பில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க 29ம் சரத்து ஒன்று இருந்தது. சிங்களவர் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதனையும் பிடுங்கி எடுத்தனர். இது ஜனநாயகமா? அல்லது பயங்கரவாதமா? இந்தப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவே எதிரி ஜீவிதா துப்பாக்கி தூக்கினார். இழந்த உரிமைகளுக்காகத் துப்பாக்கி தூக்கினால் அது பயங்கரவாதமா? எதிரியைப் பயங்கரவாதி என்று கூறும் அரச தரப்பு வழக்கறிஞர், இழந்த உரிமைகளுக்காகப் போராடுவது பயங்கரவாதம் என்று சொல்கிறாரா?"

            அரச தரப்பு வழக்கறிஞர் வாய் திறக்கவில்லை. அவர் நீதிபதியின் வெள்ளைடோப்பைப்பார்த்துக் கொண்டு இருந்தார்.

            பார்வையாளர்கள் இரு வழக்கறிஞர்களையும் மாறிமாறிப் பார்த்தனர்.

            எதிரிதரப்பு வழக்கறிஞர் தொகுப்புரையைத் தொடர்ந்தார்.
ஒரு பல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாட்டில் இருக்கும் படைகளில் எல்லா இனமக்களும் இருக்கவேண்டும். இலங்கையில் அப்படி இல்லை. ஏனென்றால் படையை ஏவித் தமிழரை அடித்து நாட்டைவிட்டுத் துரத்துவதே அந்த பேரினவாத அரசின் ஒரே நோக்கம்.
            முப்படைகளும் பெரும்பான்மைச் சிங்களவரை மட்டுமே கொண்டது. 1956இல் படையில் 2,200 பேர் மடடுமே இருந்தனர். ஆனால் 1990இல் படைவீரர் மொத்தம் 110,000. யாழ்ப்பாணத்தில் 11 தமிழனுக்கு ஒரு சிங்களச் சிப்பாய் அவனது கோடிப்புறத்pல் துப்பாக்கியோடு நிற்கிறான். அவர்களது போரின் குறிக்கோள் தமிழர்களைக் கொல்வது சித்திரவதை செய்வது, உடைமைகளை அழிப்பது, பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியபின் புதைகுழிகளில் போட்டு மூடுவதே. இதுவே அங்குள்ள படைகளின் கடந்த அரை நூற்றாண்டுச் சரித்திரம். அவர்களுக்கு எதிராகப் போராடும் கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேர்ந்த எதிரி ஜீவிதா பயங்கரவாதியா என்று அரச தரப்பு வழக்கறிஞரைக் கேட்கின்றேன்."

            கேள்வியை எழுப்பிய வழக்கறிஞர் நீதிபதியைப் பார்த்தபின் அரசாங்க தரப்பு வக்கீலைப் பார்த்தார். அவர் முகங் கொடுக்க வில்லை. மண்டபத்தில் எங்கும் ஒரே அமைதி;.

            எதிரிதரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு மேசையில் இருந்த தண்ணீர்க் கிளாசை எடுத்து மளமளவென்று குடித்தார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றி முகத்தை ரிசூவினால் துடைத்தார். பின்னர் அவதானமாகக் காலடி வைத்துக் குற்றவாளிக் கூண்டின் அருகே போய் ஜீவிதாவை உற்றுப் பார்த்தார். பின் தாழ்ந்த குரலில் ஏதோ கேட்டார். திரும்ப மேசைக்கு வந்து தனது ஆவணப் பையில் இருந்து சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு மெதுவாகக் காலடி வைத்து நீதிபதியின் அருகே போய் அதனை நீதிபதியிடம் கொடுத்துவிட்டு வந்து கூட்டில் நின்ற ஜீவிதாவை மீண்டும் பார்த்தார்.

            மீண்டும் அவர் தனது தொகுப்புரையைத் தொடர்ந்தார்.

கனம் நீதிபதி அவர்களே, நான் இப்பொழுது தந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் குறிப்புகளில் உள்ள மனிதப் படுகொலைகள் எதிரியை எவ்வாறு கறுப்பு நரிகள் இயக்கத்தில் இணையத் தூண்டியது என்பதைக் கூறவேண்டியுள்ளது.

            முதலில் நான் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் வெளியிட்ட ஒரு குறிப்பை வாசிக்கிறேன்.

            '1990ஆம் ஆண்டு செப்ரம்பர் 10ஆம் திகதி இரவு பதினொரு மணிக்கு மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான் தமிழ் கிராமத்துள் சிங்கள இராணுவம் புகுந்து நடாத்த்p படுகொலைகள் மனித குலத்துக்கே அவமானம் தருவதுசத்துருக்கொண்டான் இராணுவ முகாமிலிருந்து கிராமத்துள் புகுந்த படைவீரர் 185 கிராம மக்களைக் கைது செய்து தமது படை முகாமுக்கு இழுத்துச் சென்றனர். முதலில் அவர்களது வாய்கள் பிளாஸ்ரரினால் ஒட்டப்பட்டன. பின்னர் அவர்களது கைகளையும் கால்களையும் கட்டினர். தொடர்ந்து கூரிய கத்திகளாலும், கட்டாரிகளாலும் கோடாலிகளாலும் யாவரையும் வெட்டியும் குத்தியும் கொத்தியும் கொன்றனர். அவ்வாறு கொல்லப் பட்டவர்களில் ஒன்றரை வயது சுபோசினி, மூன்று வயது துளசி, ஏழுவயது சித்திரவடிவேலு, ஒன்பது வயது சியாமளா என்போர் அடங்குவர். அவர்களை வழிநடத்திய ஜே. பெரேரா என்ற படை முகாம் அதிகாரி மேலும் ஒருபடி முன்னேறி சுமதி என்ற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்மணியைக் காலில் பிடித்து இழுத்துவந்து, வாங்கில் படுக்க வைத்து, அந்தத் தாயின் வயிற்றைச் சமயலறைக் கத்தியால் கீறி எட்டுமாதக் கருவை வெளியே எடுத்து இரண்டு துண்டாக வெட்டித் தனது கீழ்ப்படிவான படைவீரர்களுக்குத் தனது வீரப்பிரதாபங்களைப் பகிரங்கப் படுத்தி ஓவென்று சிரித்தான்.”

            சத்துருக்கொண்டான் படுகொலை நடந்தபோது எதிரி தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஒரு மாணவி. அந்த நிகழ்ச்சி எதிரியை மிகவும் பாதித்தது. அன்று தொடக்கம் எதிரி தமிழ் மக்களின் விடுதலைக்காகத் துப்பாக்கி தூக்கத் தருணம் பார்த்திருந்தார். வாய்ப்புக் கிடைத்ததும் கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்

            மத்திய கிழக்குக் கெடுபிடிக்குள் சிக்கிப் பாலஸ்தீனத்தில் இரண்டு பேர் செத்தாலே மேற்கு நாட்டு ஊடகங்கள் குய்யோ முறையோவென்று கூச்சலிடுகின்றன. ஓடி ஓடிச் சமாதானம் பேசுகின்றன. ஆனால் இலங்கையில் அடுத்தடுத்து நூற்றுக் கணக்கில் தமிழரைச் சிங்களப் படைகள் வெட்டிக் கொன்றாலும் மௌனம் சாதிக்கின்றன. உலக நாடுகளும், உலக தாபனங்களும் இலங்கையில் நடக்கும் மனித படுகொலைகளைக் கண்டும் காணாததுபோலக் கண்மூடிக் கொண்டிருக்கின்ற வேளை மானமுள்ள தமிழர்கள்  அழிவிலிருந்து தம்மைப் பாதுகாக்கத் துப்பாக்கி தூக்குவது பயங்கரவாதமா?

நான் இப்பொழுது அரச தரப்பு வழக்கறிஞரைக் கேட்கின்றேன், தனது இனத்தை  அழிவிலிருந்து காப்பாற்றத் துப்பாக்கி தூக்கிய எதிரி ஜீவிதா பயங்கரவாதியா?"
      பார்வையாளராக இருந்த வழக்கறிஞர்கள் அரசதரப்பு வக்கீலை உற்றுப் பார்த்தனர். அவர் 'பொறு உன்னை அறுக்கிறன்என்று மனதுள் கறுவியபடி தனது குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

தொகுப்புரையைத் தொடரவும்." நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுபான்மைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகச் சாத்வீகமாகப் போராடி, அப்போராட்டம் சூடுபிடித்த வேளைகள் எல்லாம் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரங்களை உண்டாக்கினர். 1956, 1958, 1977, 1979, 1981, 1983 ஆண்டுகளில் இனக்கலவரங்கள் வெடித்தன. தென் இலங்கையில் தமிழரின் இரத்தவெள்ளம் ஓடச்செய்த இக்கலவரங்களில் காடையர்கள், கிறிமினல் குற்றவாளிகள் மட்டுமல்லாமல் படித்தவர்கள், மஞ்சள் காவி அணிந்த பௌத்த குருமார், சிங்கள முப்படைகள் யாவும் ஒன்று சேர்ந்து தமிழர்களை அடித்து வெட்டிக் குத்திச் சாகக் கொன்றனர், உயிரோடு எரித்தனர், பொல்லநறுவையில் கொதிக்கும் தார் பீப்பாக்களுள் பெண்களையும் குழந்தைகளையும் தூக்கி வீசினர், வெலிக்கடைச் சிறைச் சாலையில் உயிரோடு தமிழர்களின் கண்களைத் தோண்டிப் புத்த பெருமானின் பாதங்களில் வைத்தனர், நெஞ்சுகளில் வெந்தணலாக்கிய இரும்புக் கம்பிகளால் சிங்கத்தின் படம் வரைந்தனர். அவர்களது உடைமைகளைக் கொள்ளை அடித்தனர். வீடுவாசல்களைக் கொளுத்தினர். அடித்து விரட்டி அகதிகளாக்கினர்.

            1983 யூலை 26ந் திகதி மட்டும் 2,200 தமிழர்கள் தென் இலங்கை வீதிகளில் படைகளின் கண்களின் எதிரிலேயே துடிக்க துடிக்கக் கொல்லப்பட்டனர்.

            அவ்வாறான இனவெறி பிடித்த சிங்களப் பேரின வெறிக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கினால் அது பயங்கரவாதமா? அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கிய எதிரி ஜீவிதா பயங்கரவாதியா? இல்லை. அவள் ஒரு புனித விடுதலைப் போராளி."

            அப்பொழுது இடை மறித்த நீதிபதிஅரசாங்கமும் தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களுக்கு ஆதரவு கொடுத்தது என்று சொல்கிறீரா?" என்று வினாவினார்.

            “ஆம், கனம் நீதிபதி அவர்களே. அதற்கு ஆதாரமாக 1956இல்  இனக் கலவரம் நடந்த வேளை நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இனக்கலவரம் வேகமாகப் பரவத் தொடங்கியவேளை நிரந்தரச் செயலாளர், பிரதமரிடம், “மேன்மைதங்கிய பிரதமர் அவர்களே, வெறிபிடித்த சிங்கள வெறிக் கும்பல்கள் தமிழர்களைக் கொல்கின்றனர். ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினால்தான் தென் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற முடியும்என்றார்.

            அதற்குப் பிரதமர், 'அவர்கள் கேட்டார்கள். கொடுக்கிறார்கள்என்று பதிலளி;தார்."

அதன் அர்த்தம் என்ன?" என்று நீதிபதி வினாவினார்.
கனம் நீதிபதி அவர்களே, எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் தங்கள் உரிமைக்காகச் சமஷ்டி அரசு கேட்டுச் சாத்வீகமாகப் போராடினார்கள். அதனையே சிங்களப் பிரதமர் பண்டாரநாயக்கா 'அவர்கள் கேட்டார்கள்என்று குறிப்பிட்டார்."

            "கனம் நீதிபதி அவர்களே, எதிரி ஜீவிதா ஆயுதம் ஏந்திய கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேரக் காரணம், இனவெறி கொண்ட சிங்கள அரசிலிருந்து  விடுபட்டு ஒரு தமிழ் அரசு அமைக்கவே. அதற்காகவே அவள் இந்த நாட்டிற்கு வரமுன்னர் யுத்த களத்தில் சிங்களப் படைகளுடன் மட்டுமே போராடினாள்."

            அவரது பேச்சை இடைமறித்த அரச தரப்பு வழக்கறிஞர்,
            “கனம் நீதிபதி அவர்களே, சென்ற வாரம் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் விடுதலைப் போராளிகளான கில்லாடி கோஷ்டி யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடு பட்டதற்காக உலக நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்" என்று ஒரு போடு போட்டுவிட்டு, தான் பிரபல்யமான வழக்கறிஞரை மடக்கி விட்டதாக நினைத்து, பார்வையாளர்களாக வந்திருந்த சட்டத்தரணிகள் கூட்டத்தின் மீது கண்களை ஏவிக் கண்புருவத்தால் 'எப்படி என் விளையாட்டு?” என்று கேட்டார்.

            “அரச தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு என்ன பதில்?" நீதிபதி கேட்டார்.

            “கனம் நீதிபதி அவர்களே, கில்லாடியும் கூட்டாளிகளும் பயங்கரவாதிகள் என்ற தீர்ப்பு நியாயமானதே. இந்த நாட்டில் தஞ்சங் கேட்க முன்னர் அவர்கள் விடுதலைப் போராளிகள் என்ற நாமத்தைப் பூசிக்கொண்டு, யாழ்ப்பாணத்தில் சொந்தத் தமிழ் உறவுகளுக்கு எதிராகப் புரிந்த பஞ்சமா பாதகங்கள் கொடூரமானவை. அவர்கள் அங்கு அராஜகம் பண்ணினார்கள், சித்திரவதை செய்தார்கள், கொலை செய்தார்கள், கற்பழித்தார்கள், கொள்ளை அடித்தார்கள். அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கே கரி பூசியவர்கள். அவர்கள் சுயநலவாதிகள், போர்ச் சூழலைத் தமது சொந்த நலனுக்குப் பயன் படுத்தியவர்கள், போலிகள்.

            ஜீவிதா ஓர் உண்மையான சுதந்திரப் போராளி. அவளுக்கு யாழ்ப்பாணத்திலோ, தென் இலங்கையிலோ, கிறேற் பிரிட்டனிலோ எவ்வகையான குற்றவியல் பதிவும் இல்லை. அவள் யாழ்ப்பாணத்தில் எவரையும் கொலை செய்து விட்டோ, எவர் வீட்டையாவது கொள்ளை அடித்துவிட்டோ அல்லது கப்பம் வாங்கிய பணத்துடனேயோ இந்த நாட்டுக்கு வந்து தஞ்சம் கேட்கவில்லை. உடைந்த கண்ணாடித் துண்டுகளை வைரத்தோடு ஒப்பிட முனைகிறார் நண்பர் அரச தரப்பு வழக்கறிஞர்."

            எதிரி தரப்பு வழக்கறிஞர் தலையைக் கவிழ்ந்துகொண்டு மனதுள் உறுமினார். 'இன்னும் நான் என் நாகாஸ்திரத்தை ஏவவில்லை. பத்திரிகை சொல்கிறது இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இந்த முறை நீ கோட்டை விடப் போகிறாயாம். தோற்றால் இனிமேல் ஜீவியத்தில் நீதிமன்றப் படிகளில் ஏறுவதில்லை என்று வீராப்பு வேறு பேசுகிறாயாம். கிழடே, பொறு இன்றையோடு நான் உன்னுடைய தொழிலுக்கு முழுக்குப் போடுகிறேன்.”

            “தொகுப்புரையைத் தொடரவும்." நீதிபதி பணித்தார்.

            “கனம் நீதிபதி அவர்களே, ஜீவிதா தனிப்பட்ட மனிதருக்கோ அல்லது அரசியல்வாதி எவருக்குமோ எதிராகத் துப்பாக்கியைத் தூக்க இந்த நாட்டுக்கு வரவில்லை. அவள் கிறேற் பிரிட்டனுக்கு ஒரு செய்தி சேகரிப்பாளராகவே அனுப்பப்பட்டாள். மாதாந்தம் பகை இயக்க நடவடிக்கைகள் பற்றியும், தமது இயக்கம் தொடர்பாக மேற்கு நாடுகளின் போக்குப் பற்றியும் அறிக்கை சமர்ப்பிக்கவே அனுப்பப்பட்டாள்.

            கறுப்பங்கி நெட்டையனே அமிரிரைத் தொடர்ந்து லண்டனுக்கு வந்த நீவிரவாதி. அவன் தந்திரமாக ஜீவிதாவைத் தனது வலைக்குள் சிக்கச் செய்தான். 'நீ ஒரு தீவிரவாதி, தவறான நோக்கத்தோடு செயல்படுகிறாய் என்று காட்டிக் கொடுப்பேன்என்று வெருட்டித் தனது பணியை இலகுவாக முடிக்க முயன்றான். அந்த  நெட்டையனின் திட்டமெல்லாம் ஜீவிதாவைக்கொண்டு அமிரைக் கொலை செய்விப்பதும், உடன் அதே இடத்தில் அவளைத் தான் கொலை செய்வதுமே. அதன் மூலம் காதல் முறிவுகாரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது என்பதை வெளி உலகத்துக்குக் காட்டுவதே. அமிர் இந்தியா சென்று நதியாவை விவாகம் செய்யப் போகிறான் என்ற ஊர்க் குசுகுசுப்பு அவனுக்கு வாய்ப்பாக இருந்தது."

யார் அந்த நதியா?" நீதிபதி கேட்டார்.
அவள் முன்னர் லண்டனில் வசித்தவள். கில்லாடியின் மனைவி. அவனை வேண்டாம் என்று தூக்கி எறிந்து போட்டு ஓடியவள். இப்பொழுது இலங்கையில்."
அங்கே ஏன் போனாள்?"
கறுப்பு நரிகள் என்ற விடுதலை இயக்கத்தில் சேர்வதற்கு.”
அது ஒரு பயங்கரமான விடுதலை இயக்கமாயிற்றே. இரண்டாயிரத்து எண்ணூறு வீரரை ஒரே நாளில் கொன்று முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றிய கெரில்லா இயக்கமாயிற்றே? என்ன நோக்கத்துக்காக அதில் சேர்ந்தாள்?”
இனவெறி பிடித்த சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போராடி தமிழ் ஈழ அரசை நிறுவ.”
துப்பாக்கி ஏந்திப் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்துடன் போராடப் போனாள் என்று சொல்கிறீரா?”
ஆம். அந்த நதியா இப்பொழுது உயிருடன் இல்லை?”
அவளுக்கு என்ன நடந்தது.?”
அவள் தற்கொலைப் போராளி. யாழ்ப்பாண குடாநாட்டில் கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள,; சந்தைகள் மீது குண்டுகள் போடுவித்து மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த ஒரு சிங்கள மந்திரியைக் கொல்ல கொழும்புக்கு அனுப்பப்பட்டாள்.”
பிறகு.”
டாக்டர் போல வெள்ளைஓவர் கோட்அணிந்துஸ்ரெதெஸ் கோப்கழுத்தில் தொங்க, ஆங்கிலத்தில் அழகாக உரையாடி வீட்டுக் காவலரணைக் கடந்து சென்று, தனது வீட்டு வாசலில் காரில் ஏறிக்கொண்டிருந்த அமைச்சரை அணுகினாள் - தனது உடலோடு கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்து மந்திரியையும் கொன்று தானும் பலியாகிவிட்டாள். வீடு தரை மட்டமாகி இருந்தது. அவளின் தலை மட்டும் சற்றுத் தொலைவில் ஒரு புத்தர் சிலையின் காலடியில் காணப்பட்டது.”
எப்போ நடந்தது?”
இரு தினங்களுக்கு முன்னர். கொழும்பில். பாராளுமன்றம் செல்லும் பாதையில்.”
சரி, நீர் தொடரலாம்."

கனம் நீதிபதி அவர்களே, நான் எனது தொகுப்புரையை முடிக்க முன்னர் ஆறு முக்கிய குறிப்புகளைச் சமர்ப்பிக்க அனுமதி கோருகிறேன்."

அனுமதி வழங்கப்படுகிறது."

ஒன்று: ஜீவிதா அமிரைச் சுவானேஜ் கடற்கரைக் கென்று அழைத்துச் சென்ற சமயம் அவளிடம் அதே பிஸ்டல் இருந்தது. ஆனால் அவள் அமிருக்கு எதுவித தீங்கும் செய்ய விரும்பவில்லை

இரண்டு: குறொம்வெல் காட்டில் ஜீவிதாவிடம் பிஸ்டல் இருந்தது. அவள் யாரையும் அதனால் சுடவில்லை. அமிரை விடுவிக்கவே ஆகாயத்தை நோக்கிச் சுட்டாள். அவள் அவ்வாறு சுட்டிருக்காவிட்டால், கனம் நீதிபதி அவர்களே, என்ன நடந்திருக்கும்? அமிரை அடித்துக் கொன்றிருப்பார்கள். இரண்டு வெள்ளைப் பையன்களும், கொட்டன் கொடுத்த பெரிய பெட்டை றோஸியும் எதிரிக் கூட்டில் கொலைக் குற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருப்பார்கள்.

மூன்று: ஜீவிதா அமிரைக் கொலை செய்ய விரும்பி இருந்தால். வெள்ளைகள் அமிரை அடித்துக்கொல்ல விட்டிருப்பாள். அவளுக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை.

நாலு: அவள் ஒரு தீவிரவாதியாக இருந்திருந்தால், பொலிசாரைக் கண்டதும் சைனைற் குப்பியைக் கடித்துத் தற்கொலை செய்திருப்பாள்.

ஐந்து:   எதிரியின் உளவியல் குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன். அவளால் இறுதிக் கட்டம் வரும்வரை எதனையும் தீர்மானிக்க முடிவதில்லை.

ஆறு:    எதிரி ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்பிவிட்டாள் என்பதையும் கவனத்தில் எடுக்கும்படியும் வேண்டிக் கொள்கின்றேன்."

            எதிரி தரப்பு வழக்கறிஞர் வெல்லப்போகிறார் என்ற நம்பிக்கையில் யாவரது கண்களும் அவரது முகத்தை உற்றுப்பார்த்தன.  

            அச்சமயம் அரச தரப்பு வழக்கறிஞர் எழுந்தார்.

ஏதாவது சொல்ல விரும்புகிறீரா?" நீதிபதி கேட்டார்.
ஆம் கனம் நீதிபதி அவர்களே."
சொல்லவும்."

கறுப்பங்கி நெட்டையன் கொலைசெய்யும்படி அச்சுறுத்துகிறான் என்று எதிரி ஏன் பொலிசில் முறைப்பாடு செய்ய வில்லை?"

            நீதிபதி இரு வழக்கறிஞர்களையும் மாறி மாறிப் பார்த்தார். பார்வையாளராக வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் சொல்லிவைத்தது போல எதிரிதரப்பு வழக்கறிஞரின் முகத்தை மீண்டும் பார்த்தனர்.

அரச தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறீர்?" நீதிபதி கேட்டார்.

            எதிரி தரப்பு வழக்கறிஞர் பக்கவாட்டில் தலையை ஆட்டிவிட்டு மெதுவாகக் கதிரையில் அமர்ந்தார்.

            சற்று முன்னர் தண்டிக்கப்பட வேண்டு மென்று விரும்பிய ஜீவிதா, திடீரென மனம் மாறித் தான் தண்டிக்கப்படாமல் வெளியே வரவேண்டும் என்று துடித்தாள். ஜீவிதாவின் முகம் இருண்டு கறுத்தது. அவ்வேளை,


நாளைக்குத் தீர்ப்பளிக்கப்படும். கோடு ஒத்தி வைக்கப் படுகிறது" என்ற நீதிபதியின் குரல் மண்டபத்தை நிறைத்தது.

அடுத்த அதிகாரத்துடன் நிறைவு பெறும்.....

No comments:

Post a comment