Tuesday 8 December 2015

விகுதி மாற்றம் - சிறுகதை

மெல்பர்ண் தெருவோரத்து மரங்கள் பச்சையிழந்து கிழடு தட்டிப் போயிருந்தன. குளிர்ந்து போயிருந்தது மாலை.

வேலையிலிருந்து வீடு வந்த சேரனுக்குப் பசி பொறுக்க முடியவில்லை. நேராக சாப்பாட்டு அறையை நோக்கி ஓடினான். பாரதி சாப்பாட்டை சுடச் சுடப் பரிமாறினாள். சைனீஸ் றெஸ்றோறன்ட் - ஃப்ரைட் றைஸ்தான். இரண்டு கவழம் உள்ளே செல்ல தெம்பு வந்தது. தெம்பு வர, வீறாப்பும் வந்து வீண் பேச்சாகியது.

"ஒண்டு சொல்லுவன். பிறகு சண்டைக்கு வரப்படாது" என்று பீடிகை போட்டான் சேரன்.
"சாப்பிடேக்கை இப்ப ஏன் பிரச்சினையைத் துவங்கிறியள்?" பாரதி சொன் னாளேயொழிய, உள்ளூர அவன் என்ன சொல்லப் போகின்றான் என்பதில் அவள் மனம் ஆவல் கொண்டது.

"என்ரை மனேஜர் போல் நோமிண்டன் சொல்லுறார் - இஞ்சை பெம்பிளப் பிள்ளையளை வளர்க்கிறதுதான் கஷ்டமாம். ஆம்பிளப் பிள்ளையள் பரவாயில்லையாம்."

" சும்மா போங்கோ. எல்லாம் அவரவர் வளர்க்கிறதைப் பொறுத்தது."

"என்ரை அபிப்பிராயம் - கேர்ள்ஸை ஆரம்பத்திலை வளர்க்கிறது சுகம். ரீன் ஏஜ்ஜிற்கு பிறகு கஷ்டம். போய்ஸ் இதுக்கு நேர்மாறு."

"முதலிலை உங்கடை போல் நோமிண்டன் இப்ப எத்தினையாவது மனிசியோடை இருக்கிறார் எண்டதைக் கேட்டு அறியுங்கோ பாப்பம்."
"அதைப் பற்றி எனக்குத் தெரியேல்லை. ஆனா அவற்றை மகள் இப்ப நாலாவது போய்பிரண்டையும் மாத்திப் போட்டாளாம். மகன் இப்பவும் ஒரேயொரு கேர்ள் பிரண்டோடைதான் சகவாசமாம்."

"எல்லாம் விசர்க்கதை!"

பாரதி அவன் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. கையை அலம்பி விட்டு வெளியே போய் விட்டாள்.

வெளியே கடும் குளிராகவிருந்தது. அறையைச் சூடாக்கிக் கொண்டபின் இருவரும் போர்வைக்குள் புகுந்தார்கள். குழந்தை முதலிலேயே படுத்துத் தூங்கி விட்டிருந்தது. ஒரேயொரு பெண் குழந்தை. படுத்தவுடன் சேரனுக்குத் தூக்கம் வந்து விடும். பாரதிக்கு? கம்பிளிக்குள்ளும் உடல் வியர்த்தது. புரண்டு புரண்டு படுத்தாள். மனமும் கூட.

"என்ன நித்திரை கொண்டிட்டியளா?" - "........... "

"இஞ்சாருங்கோ. இஞ்சாருங்கோ?"
"எனக்கு நாளைக்கு வேலைக்குப் போக வேணும்!"
"தெரியும். எங்கட தங்கைச்சி அகிலாவுக்குக் கெதியா மாப்பிள்ளை தேட வேணும். வயசு போகுதல்லே!!"
"அதைச் சொல்லுற நேரமா இது? பேசாமத் தூங்குமன்."

இருவாரம் கடந்து அதிகாலையில் சேரனின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. காலைப் பரபரப்பில் பரக்கப் பரக்க வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் சேரன். சேரனுக்கு இந்த தட்டுதல் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது.

பாரதிதான் கதவைத் திறந்தாள். வாசலில் - கடும் குளிருக்குத் தோதாக - வேட்டி, நஷனல் சகிதம் வேலுப்பிள்ளை.

"வணக்கம். ரெலிபோன் எடுத்திட்டு வராததுக்கு மன்னிச்சுக் கொள்ள வேணும். காரணத்தோடைதான் எடுக்காமல் வந்தனான்" நீட்டிக் கொண்டே போனார் வேலுப்பிள்ளை.

"நீங்கள் ஆர்?"
"உங்கடை அப்பாவின்ரை சிநேகிதன், வேலுப்பிள்ளை. உங்கடை அப்பாதான் அகிலாவுக்கு ஒரு சம்பந்தம் பாக்கச் சொன்னவர். அதுதான் அகிலாவுக்கு ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கிறன். அகிலா எண்டது உங்கடை தங்கைச்சிதானே?"

"ஓம் ஓம். இதிலை வந்து இருங்கோ. இவர் வேலைக்குப் போக ரெடியா கிறார். ஒருக்கா அனுப்பிப் போட்டு வாறன். கொஞ்சம் இருந்து கொள்ளுங்கோ."

உள்ளே பம்பரமாக ஓடினாள் பாரதி. வேலுப்பிள்ளை அந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டை நோட்டம் விட்டார். வீடு சுத்தமாக கன கச்சிதமாக இருந்தது. அவருக்கு ஆரம்பம் பிடித்து விட்டது.

கொஞ்ச நேரத்தில் கையைக் கூப்பிக் கொண்டே உள்ளிருந்து வெளியே வந்தான் சேரன்.

"வேலைக்குப் போக ஆயத்தம். நீங்கள் எல்லாத்தையும் பாரதியோடை கதையுங்கோ. நான் பிறகு உங்களை சந்திக்கிறன்."
"ஓம் தம்பி. ஓம் தம்பி."

ஓடித் தப்பினான் சேரன்.

"நான் நேரை விஷயத்துக்கு வாறன். கலியாண விஷயம். நித்திரைப் பாயோடை வந்து பெம்பிளப் பிள்ளையைப் பாத்தாத்தான் இயற்கை அழகு எப்பிடி யெண்டு தெரியும். அப்பதான் எனக்கு திருப்தி. முதலிலை உங்கடை தங்கச்சியை ஒருக்காப் பாக்க வேணும்."

பாரதி கொடுப்பிற்குள் சிரித்தாள்.

"ஏன் பிள்ளை சிரிக்கிறாய்?"
"இல்லை ஐயா! அகிலா எல்லாருக்கும் முந்தி வேலைக்குப் போயிட்டாள்."
"போயிட்டாளோ?"
"ஓம். நீங்கள் நினைக்கிற மாதிரியில்ல இப்ப உலகம். இப்ப நடு ராத்திரியிலை வந்தாக் கூட பெம்பிளப் பிள்ளையளை சில வீடுகளிலை பாக்க முடியாது. இரவு வேலைக்குப் போயிடுவினம். வேணுமெண்டா அகிலாவின்ரை படமிருக்குக் காட்டட்டே!"

"படத்தை ஒரு மூலையிலை போடு பிள்ளை. கிருஷ்ணபிள்ளை சொன்னவன், தனக்கு இரண்டு பெம்பிளப்பிள்ளையள் எண்டு. அதுதான் முதல் பிளஸ் பொயின்ற். இல்லாட்டிப் பிள்ளை, ஒரு வீட்டைக் காட்டி  ஒன்பது பெம்பிளப் பிள்ளையளைக் கரையேத்திற சங்கதியளும் நாட்டிலை நடக்குது."

"நீங்கள் மாப்பிள்ளையைப் பத்தி ஒண்டும்...."
"இதிலை இன்னுமொண்டு பிள்ளை. மாப்பிளப் பெடியன் உம்முடைய ஹஸ்பனோடை வேலை செய்யிறதா கேள்வி. பெயர் அகல்."

"அகல் - அகிலா. பெயர் நல்ல பொருத்தம்.
 எதுக்கும் அவரைக் கேட்டா தெரியும்."
"கேக்கிறது இருக்கட்டும். தங்கமான பெடியன். சிவத்தக் கலர்.
 சொண்டுக்கு மாத்திரம் பத்து லட்சம் கொடுக்கலாம்."

படங்களும் ஜாதகங்களும் பரிமாறிக் கொண்டன. பாரதிக்கும் இந்தச் சம்பந்தம் பிடித்துப் போயிற்று. கணவனுடனும் கதைத்து விட்டுச் சொல்வதாக, வேலுப்பிள்ளையின் இந்த வேட்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் பாரதி.

சாஸ்திர வல்லுநர்கள் எண்பத்தி ஏழு சதவிகிதம் பொருத்தம் என்றார்கள். முருகன் கோவிலில் ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள். மாப்பிள்ளை பெண் போல வளைந்து நெளிந்து நடந்தார். ஒருவேளை அகிலாவைப் பார்த்த வெட்க மாகவும் இருக்கலாம். அடிக்கடி கண்களைச் சிமிட்டிக் கொண்டார். அந்தச் சிமிட்டல் வலை விரித்தது.

அகிலா - ஸ்டிக்கர் பொட்டு. செந்தளிப்பான முகம். காற்றினிலே குதித்தாடும் தலை மயிர்.
அகல் - இடது பக்கக் காதில் ஓர் கடுக்கன். பத்து விரல்களின் நகங்களுக்கும் பத்து விதமான கலரில் கியூட்டெக்ஷ். ஆண்களுக்கும் பெண் களுக்கும் இங்கே பேதமில்லை என்பது போல். இங்கே பிறந்து வளர்ந்தவன். தேசத்துடன் ஒன்றிவிட்டான். சிலவேளைகளில் அகலின் குரல் கூட இங்கே காலை வாரிவிடுகின்றது.

அகிலா அந்த வலையினுள் பொட்டாக விழுந்து கொண்டாள்.

வீடு திரும்பும் போது அகிலா காருக்குள் சிரித்தபடி வந்தாள்.

"ஏனடி சிரிக்கிறாய்?"
"இல்லை. வேலுப்பிள்ளை அண்ணையின்ர சொண்டைக் கவனிச்சியளோ?"

"! நீ அதுக்குப் போயிட்டியா?"
"சொதி வாய்ச் சொண்டு. மாப்பிள்ளையின்ர சொண்டுக்கு நாங்கள் பத்து லட்சம் குடுக்க வேணுமெண்டால், வேலுப்பிள்ளை அண்ணை தன்ரை மனிசிக்கு எவ்வளவு லட்சத்தைக் குடுத்துத் தொலைச்சிருப்பார்?"

சேரன், அகிலாவின் திருமணத்தை கோடை விடுமுறையில் வைப்பதற்கு விரும்பினான். கோடை விடுமுறை கூடுதலான நாட்கள் லீவு. ஆக்களும் வர வசதியாக விருக்கும். ஆனால் அகல் மாசி மாதத்தில் வைக்கலாம் என்று சொல்லி விட்டான். கோடை விடுமுறைக்கு தான் 'வேர்ல்ட் ரூர்' போகப் போவதாகக் கூறிக் கொண்டான். ஏற்கனவே எல்லா ஒழுங்குகளும் செய்து விட்டதனால் அகிலாவைக் கூட்டிப் போக முடியாமலுள்ளது எனக் கவலைப்பட்டான் அகல்.

இந்தியாவிலே 'வெடிங் கார்ட்' அடிக்கப்பட்டது. நாலா பக்கமும் திருமண அழைப்பிதழ்கள் பறந்தன. கிருஷ்ணபிள்ளை நிலத்திலே கால் பரவாமல் அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டு கொழும்பிலே திரிந்தார். திரும்பவும் ஒரு வெளிநாட்டுப் பயணத்திற்கான பந்தாவில் இறங்கினார்.

சேரனுக்கு ஒரு மாத லீவு. அவன் குழந்தை அபிக்கும் இரண்டு மாதம். அகல் 'வேர்ல்ட் ரூர்' போய் விட்டான். அகிலாவுக்கு வருஷம் பூராவும் வேலை. அவள் வேலை அப்பிடி. பஸ்சில் போவாள். யாருடனாவது கூட வேலை செய்யும் பெடியன் களுடன் காரில் திரும்பி வருவாள். பாலன், பிரான்ஸஸ் இப்படி! எவன் சந்திக்கிறானோ அவனுடன் வந்து விடுவாள். கெட்டிக்காரப் பெண்.

கலியாணத்திற்கு இன்னும் ஒரு மாதந்தான் இருந்தது. கோடையில் மழை என்றுமில்லாதவாறு பெய்தது. அகிலா இன்னமும் வேலையால் வந்து சேரவில்லை. பிந்தும் என்றால் ரெலிபோன் எடுத்துச் சொல்லி விடுவாள். அதுவும் இன்றில்லை. கடும் மழை.
ஹோலின் அழைப்பு மணி கேட்டது.

கதவைத் திறந்த பாரதிக்கு ஆச்சரியம். இரண்டு  அற நனைஞ்ச கோழிகள் ஒரு குடைக்குள் நின்றன. மிக நெருக்கமாக, குளிரின் கூதலுக்கு இதமாக - ஒன்றாக.

"தாங்ஸ் மைக்கல்."  "பாய்." என்ற சொற்கள் பாரதியின் காதினுள் விழுந்தன.

மைக்கல் போகும் போது, அகிலாவின் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டுப் போனான். மழை நீர் சொட்ட உள்ளே வந்தாள் அகிலா.

பாரதிக்கு தலை சுற்றியது. இவளுக்கு என்ன நடந்தது? அகிலா மைக்கலுடன் வந்ததையும், போகும்போது மைக்கல் அகிலாவின் கன்னத்தில் கிள்ளியதையும் நினைக்க நினைக்க பாரதிக்கு நெஞ்சு திக்கென்றது.

இன்னும் ஒரு மாதம் திருமணத்திற்கு இருக்கும் போது, இப்படி கூத்தடிக்கின்றாளே என நினைக்க பாரதிக்கு பயமாக இருந்தது. உலை வாயை மூடலாம். ஊர் வாயை? ஊர்ச் சனம் இதுகளைக் கண்டால் அவ்வளவுந்தான்.

சேரன் வந்ததும் வராததுமாக பாரதி தொடங்கினாள்.
"மாப்பிள்ளை வேலைக்கு வந்திட்டாரா?"
"தெரியேல்லை. வேணுமெண்டா மாப்பிள்ளை வீட்டிற்கு, ரெலிபோன் அடிச்சு கேட்டால் போச்சு."

"நெடுகலும் அடிச்சுக் கேக்கிறது அவ்வளவு மரியாதை இல்லை. நீங்கள் நாளைக்கு ஒருக்கா வேலை இடத்திலை செக் பண்ணுங்கோ."

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகல் வேலை செய்யும் பகுதிக்குப் போய் பார்த்து வருவான் சேரன். ஒரே தொழிற்சாலை - ஆனால் வேறு வேறு பகுதிகள்.
தொழிற்சாலையில் உள்ள நான்கு கொம்பியூட்டர் விற்பன்னர்களில் சேரனும் ஒருவன். தொழில்நுட்ப ரீதியாக எல்லா பகுதிகளுக்கும் சென்று பரீட்சித்து, பழுது பார்த்து வர வேண்டும்.

அகல் வேலை செய்யும் பகுதியின் பெண்கள் ரொயிலற்றுக்கு முன்பாக ஒரே கூட்டமாக இருந்தது. ஒரே ஆரவாரம், கூக்குரல், சண்டை. ஒரு பெண் அங்கு வேலை செய்யும் ஒருவனை 'சேட் கொலரில்' பிடித்திழுத்து நிறுத்தி வைத்திருந்தாள். அவனைச் சுற்றி ஏராளமானவர்கள் விடுப்புப் பார்த்துக் கொண்டி ருந்தனர். அந்தப் பெண்ணின் வாயிற்குள் இருந்து சரமாரியான வார்த்தைகள். ஒரு பெண் பிடித்து வைத்திருக்க, இன்னொரு பெண் அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.

விசாரித்ததில்,

அகல் பெண்களின் ரொயிலற்றுக்குள் புகுந்து விட்டான் என்பது தெரிய வந்தது. ஆச்சரியத்தில் மெய் சிலிர்த்துப் போனான் சேரன்.

குடித்து விட்டுப் போயிருப்பானோ? அவன் ஒரு போதும் குடிப்பதில்லையே!

தொழிற்சாலை சட்டதிட்டங்களின்படி, தொழிற்சாலை வளவிற்குள் குடிப்பது, புகை பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தன. சிலவேளை இதற்காக வேலையும் பறி போகலாம்.

தூரத்தில் மனேஜர் விஷயமறிந்து  வந்து கொண்டிருந்தார். விசாரணைக்காக அகலை தனது அறைக்குக் கூட்டிக் கொண்டு போனார்.

ஆளுக்கு ஆள் மௌனமாகப் பதுங்கி இருந்தனர். இரண்டு பேர் மனதிலும் ஒரே விஷயம்தான் நெருடிக்கொண்டிருந்தது.

பாரதிதான் பேச்சைத் தொடங்கினாள்.
"இஞ்சாருங்கோப்பா! மாப்பிள்ளை பகுதி இதைப் பற்றி ஒண்டும் எங்களுக்குச் சொல்லேல்லைத்தானே! அப்பாவும் ஃபிளைற் ஏறிட்டார். இன்னும் பத்து நாள் தான் வெடிங்கிற்கு கிடக்கு. அகிலாவும் தனக்குப் பூரண சம்மதம் எண்டு சொல்லிப் போட்டாள். நீங்கள் ஒருக்கா அகல் வீட்டுக்கு ரெலிபோன் எடுத்துப் பாருங்கோ? "

"என்னண்டு எடுக்கிறது? வேலுப்பிள்ளை அண்ணைதான் இந்த சம்பந்தத்தைக் கொண்டு வந்து பொருத்தினவர். அவருக்கு நீதான் போன் எடுத்துக் கதையுமன்."

வேலுப்பிள்ளைக்குத் தொலைபேசி இலக்கங்களை அழுத்த செய்தி பறந்தது.

"ஹலோ! ஹலோ!! வேலுப்பிள்ளை அண்ணை இருக்கிறாரோ?"
"ஆர் பாரதியே? நானும் உமக்கு ஒருக்கா போன் எடுக்க வேணுமெண்டு தான் நினைச்சனான். மாப்பிள்ளை தேடுறது பிள்ளை இந்த நாளையிலை சகதியிலை கால்வைக்கிறது மாதிரித்தான் கிடக்கு. மாப்பிள்ளையைப்பற்றி ஒண்டு நான் முதலிலேயே சொல்ல வேணும். பிறகு வேலுப்பிள்ளை அண்ணை சிண்டு முடிஞ்சிட்டார் எண்டு சொல்லப்படாது."

"ஏன் அண்ணை அப்பிடித் திடீரெண்டு சொல்லுறியள்?"
"இப்ப கொஞ்சம் முதல், அகல் எனக்கு போன் எடுத்தவன் பிள்ளை. அலட்டு அலட்டெண்டு விசர்க் கதையள் கதைக்கிறான். எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல."

"அகல் என்ன சொன்னதெண்டு சொல்லுங்கோவன்?"
"சொல்லக் கூடிய கதையெண்டா சொல்லலாம் பிள்ளை."

"பரவாயில்ல சொல்லுங்கோ அண்ணை."
"அகல் தான் இப்பவொரு பெம்பிளையா மாறிட்டானாம்.!"

"என்ன? என்ன சொல்லுறியள்? அகல் பெம்பிளையா மாறிட்டானோ?"
"ஓம். ஓம் பிள்ளை. அகல் இனிக் கலியாணம் செய்யுறதெண்டா ஆம்பிளையைத்தானாம் கலியாணம் செய்வன். இவ்வளவு நாளும் 'கேய்யாக' இருந்தவனாம். இப்ப முழுசா பெம்பிளையா மாறிவிட்டானாம் பிள்ளை."

"அதனாலே தான் அண்டைக்கு பெம்பிள்ளைகளுடைய ரொயிலற்றுக்குப் போயிருக்கிறான்" பாரதி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்ததைப் பார்த்த பின், சேரன் சொன்னான்.

"அப்ப உங்களுக்கும் விஷயம் தெரியும்."

அவர்கள் ஒருவரோடொருவர் வாக்குவாதப் படத் தொடங்கினர்.


திசைகள் இணையம்,

தை 2004

No comments:

Post a Comment