Sunday 7 August 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (15)

இடையில் ஏன் இந்தச் சில எட்டப்பர்கள்!

வேலையிடத்தில் பல பகுதி பகுதிகள் உண்டு. ஒருமுறை நான் இன்னொரு பகுதிக்குச் சென்று அங்கே வேலை செய்ய வேண்டி வந்தது. அங்கு வேலை செய்யும் அஜி என்னும் சிங்கள நண்பருடன் கதைத்துவிட்டு எனது வேலையைத் தொடர்ந்தேன்.

சிலநிமிடங்களில் அங்கு வேலை செய்யும் இன்னொருவர் – அவரும் எமது நிறம் தான் – வந்து அஜி உடன் சிங்களத்தில் கதைத்தார். அவர் தமிழ் மக்களைப் பற்றி – குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்களைப்பற்றி – அவரிடம் முறைப்பாடு சொல்லிக் கொண்டிருந்தார். கேட்பதற்கு சகிக்கவில்லை.

எனக்கு சிங்களம் கதைப்பது ஓரளவிற்கு விளங்கும். கொழும்பு டொக்யாட்டில் (துறைமுகம்) வேலை செய்யும் காலங்களில், மூன்று மாதங்கள் சிங்களம் எழுத பேச படித்திருக்கின்றேன். எழுத்துக்கள் எல்லாம் தெரியும். பேச வராது. அதே போல அஜிக்குத் தமிழ் தெரியும். அவர் கண்டியைச் சேர்ந்தவர். ஒருமுறை தன்னுடைய நண்பர் ஒருவரின் பேக்கரிக்கான விளம்பரப்பலகையை தமிழில் எழுதிவந்து என்னுடன் சரி பார்த்தார்.

நான் திரும்பி அவர்களைப் பார்த்தேன். அஜிக்குப் புரிந்து விட்டது. அவருடன் கதைத்து அவரை அனுப்பிவிட்டு என்னிடம் வந்தார்.

“உமக்கு அவர் கதைத்தது புரிந்ததா?” என்றார்.

“ஆம்” என்றேன்.

“அவர் ஒரு தமிழர்” என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்னர் அவரிடம் சென்று கதைத்துவிட்டு, அவரையும் கூட்டிக் கொண்டு வந்து இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார்.
“என் பெயர் மார்க்கண்டேயன். நீங்கள் ஒரு ஆப்பிரிக்கர் என நான் நினைத்தேன்” என அடுத்த குண்டைப் போட்டார்.

“நல்லாச் சிங்களம் கதைக்கின்றீரே?”

“நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்” என்றார்.

“எட்டப்பன் என்றால் என்னவென்று தெரியுமா?”

“எட்டு அப்பாமாரோ?” என்றாரே பார்க்கலாம்.

நான், என் சிங்கள நண்பர், இடையில் இந்த எட்டப்பர்!

எல்லா இன மக்களிடையேயும் நல்லவர்களும் இருக்கின்றார்கள், கூடாதவர்களும் இருக்கின்றார்கள். அரசியல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது நல்லவரையும் பார்ப்பதில்லை, கூடாதவரையும் பார்ப்பதில்லை. அது தன்னைத்தானே கவனித்துக் கொள்கின்றது.




No comments:

Post a Comment