Monday, 1 August 2016

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சிறுகதை.

களம் ஒன்று : கதை இரண்டு

இரண்டாவது கதை : மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

                    
எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப - ஓவிய - கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து, சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

பொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் அவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையில் இருந்த அவளின் கண்கள் இமை மூடி இருந்தன. மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருந்தாள் அந்தப் பெண்.

வயது இருபதுக்கு மேல் இருக்கலாம் என மதிப்பீடு செய்து கொண்டார். அம்மன் கோவில் விக்கிரகம் மாதிரி அழகாக இருந்தாள். கிழவர் அந்தப் பெண்ணை, தனது பேரனுக்குப்  பொருத்தம் பார்த்துக் கொண்டார்.


- எப்ப திருமணப் பேச்சு எடுத்தாலுமே தட்டிக் கழிக்கின்றானே!
ஒருவேளை மனதில் யாரையாவது விரும்பி வைத்திருக்கின்றானோ?

கிழவரின் மகள், பேரனுக்கு திருமணம் பேசி, போராடி இழைத்து விட்டாள். அவன் திருமணமே வேண்டாம் என்கின்றான்.

தீர்த்தக்  கிணறுவரை  சென்ற  கிழவர், இன்னுமொரு  முறை   நின்று, திரும்பி   நிதானமாக  அந்தப் பெண்ணைப் பார்த்தார். கிழவர் முடிவு செய்து கொண்டார். பக்தி சிரத்தையுடைய பெண் வீட்டிற்கு வந்தால் வீடும் மங்களகரமாக இருக்கும்.

காலம் கனிந்தது. கிழவர் ஒருநாள் அந்தப் பெண்ணிடம் மெதுவாக பேச்சைத் தொடக்கினார்.

- பிள்ளை என்ன செய்கின்றீர்?
- தாத்தா…! நான் யூனிவர்சிற்றி சோதினை எடுத்திட்டு இருக்கிறன்... இனி மறுமொழி வரும்வரையும் லீவு.
கணீரென்ற அவளின் குரலில் மெய் மறந்தார் கிழவர்.

- பிள்ளை... என்று இழுத்தார் கிழவர். அவர் ஏதோ கேட்க நினைக்கின்றார் என்பதை உணர்ந்த அவள்

- என்னுடைய பெயர் ஸ்ரீநிதி .  அப்பா  ஸ்கூல் பிறின்சிபலா வேலை பார்க்கிறார் என்றாள்.

- ஆகா நல்ல இடம். நல்ல இடம் என்று புளகாங்கிதம் அடைந்தார் கிழவர்.

ஐயர் மணியைக் கிலுக்கி மந்திரங்கள் சொன்னார். ஸ்ரீநிதி கண்களைத் திறந்து தரிசனம் பெற்றுக் கொண்டாள். மனதிற்குள் ஏதோ வேண்டிக் கொண்டாள். வரிசையில் நின்று திருநீறு, பிரசாதம் பெற்றுக் கொண்டாள்.

ஒருநாள் கிழவர் மயக்கத்தில் கோவில் வாசலில் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி கோவிலுக்குள் கிடத்தினார்கள். மயக்கம் தீரும் வரும்வரைக்கும் பனை ஓலை விசிறியால் காற்று வீசினாள் ஸ்ரீநிதி.

- தாத்தா வெறுங்காலோடை நடக்காதீங்கோ...!   கல்லு முள்ளு எல்லாம் குத்திப்போடும்.
- தாத்தா காலிற்கு செருப்பு போடுங்களேன்! என்று ஒரு சோடி செருப்பு வாங்கிக் கொடுத்தாள் ஸ்ரீநிதி.

ஒரே சந்தோஸத்தில் போய் சாய்வணைக் கதிரையில் பொன்னுக் கிழவர் சரிந்தார். சரிந்தவர் சரிந்தவர்தான்.
அப்புறம் எழும்பி நடக்க முடியாமல் முடங்கிப் போய்விட்டார். பாரிசவாதம் என்றார்கள் வைத்தியர்கள். கதைப்பதற்குக்கூடக் கஸ்டப்பட்டார். அதன்பின் கோவிலுக்குப் போகும் பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை. உள்ளத்தை கோவிலாக்கி மனவெளியில் பூஜை செய்தார்.

காலம் கடந்தது.

ஒருநாள் இரவு தகப்பனிற்கும் மகனிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிழவர் ஒருகரையில் இருந்து எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தார்.

- நீ திருமணம் செய்யாவிட்டால், உன் தங்கைகளை யோசித்துப் பார்..?

- நீ யாரையோ விரும்பியிருக்கிறாய்... அதுதான்...  உள்ளுக்கொண்டு வைச்சுக்கொண்டு வெளியிலை ஒண்டு கதைக்கிறாய்! அப்பா கத்தினார்.

கடைசியில் மகன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான். கிழவர் விடிந்தபின் தன் எண்ணத்தைச் சொல்ல எண்ணியிருந்தார். ஸ்ரீநிதி மாத்திரம் இந்த வீட்டிற்கு வந்துவிட்டால் குடும்பத்தைக் கோவிலாக்கி விடுவாள்.

காலையில் பேரன் அன்றைய தினசரியை கிழவருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனான்.

- தம்பி ஒரு கதை... இல்லை இல்லை... நான் அம்மாவிடமே கதைக்கிறேனே! கிழவர் சொல்லி விட்டு நாளேட்டைப் புரட்டினார்.

-கந்தசுவாமி கோவிலுக்கு அனுபவம் மிக்க ஒரு சிற்பி உடனடியாகத் தேவைப்படுகின்றார். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.

திடீரென அந்த விளம்பரம் கிழவரின் கண்ணில் பட்டது. அது பூதாகாரமாகி எழுந்து கிழவரை விழுங்குவது போல் இருந்தது.

- கோவிலில் இருந்த சிற்பிக்கு என்ன நடந்தது? அருமையான மனிதர்! ஏதாகிலும் சுகமில்லாமல் இருக்கலாம்.

கிழவரின் மனம் அதை அறியும் ஆவலில் உந்தியது.

- பிள்ளை மலர்... பத்திரிகை பார்த்தியா? கோயிலுக்கு சிற்பி தேவையாம் எண்டு போட்டிருக்கினம். என்னண்டு விளங்கேல்லை. நானும் கனநாளா கோயிலுக்குப் போகேல்லை. ஒருக்கால் தம்பி சைக்கிளிலை வருவனெண்டால் போயிட்டு வரலாம்.

எல்லாவற்றையும் விட, பேரனுடன் சைக்கிளில் போகும்போது  மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடலாம் என்பது அவர் எண்ணம். பத்து மணியளவில் போனால் பேரனுக்கு ஸ்ரீநிதியையும் காட்டி விடலாம்.

கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் வாசலில் பொன்னுக்கிழவரை சைக்கிளிலிருந்தும் இறக்கி விட்டான் பேரன். சங்கு, மணி ஒலிகள் முழங்க பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மந்திர உச்சாடனங்கள், தேவார பாராயணங்கள் அந்த ஒலிகளுடன் கலக்கின்றன. கிழவரின் மனம் அமைதியடையாமல் இருந்தது.

அருகே இருந்த ஒருவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.

-நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

அவர் கிழவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடரலானார். பின்னாலே திரும்பிப் பார்க்கின்றார். ஸ்ரீநிதி வந்திருந்தால் அவளிடமாவது கேட்டுப் பார்க்கலாம். கிழவரின் கண்கள் அகல விரிந்தன. அங்கே அந்தப்பெண்ணைக் காணக் கிடைக்கவில்லை.

பரீட்சை முடிவுகள் வந்து, பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கலாம் என கிழவர் முடிவு செய்தார்.

பூஜை முடிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாராயணம் தொடங்கி விடும். பொல்லை ஊன்றிக் கொண்டு சிற்ப வேலை செய்து கொண்டிருந்த வயது முதிர்ந்த சிற்பி ஒருவரிடம் சென்றார் கிழவர்.

- வணக்கம். முன்பு இங்கே சீலை வடித்துக் கொண்டிருந்த சிற்பிக்கு என்ன நடந்தது? சிற்பி தேவை எண்டு பேப்பரிலை விளம்பரம் வந்திருந்தது!

புதியவர் இருக்கையை விட்டு எழுந்து, வாயிற்குள் குதப்பிக் கொண்டிருந்த பாக்குச்சீவலை வேலிக்கரையோரமாகச் சென்று துப்பி விட்டு வந்தார்.

-ஐயா பெரியவரே! மூன்று வாரங்களுக்கு முன்னர் பலமான புயல்காற்று வீசியது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?

-ஆம்… தெரியும் என்றார் கதை கேட்கும் ஆவலில் கிழவர்.

-அந்தப் புயல் காற்றில் செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விழுந்து உடைந்துவிட்டன. அதைக் காப்பாற்றுவதற்காகக் போன சிற்பி, சிற்பங்களுக்கிடையே விழுந்து சிக்குப்பட்டுப் போனார். அவரின் கூக்குரல் கேட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் போன ஸ்ரீநிதி என்ற பிள்ளைக்கும் காயங்கள். இரண்டு பேரும் வைத்தியசாலையில் இருந்தார்கள். நல்ல வேளை ஆபத்து ஒன்றும் இல்லை

சொல்லிக் கொண்டே போனார் அவர். தலைமேல் கையை வைத்த பொன்னுக்கிழவர் பொல்லு இடறுப்பட கற்குவியல்கள் மீது சரிந்தார்.

கிழவரைத் தூக்கி கோவில் விறாந்தயில் கிடத்தினார்கள். கிழவரின் நினைவு மெல்லத் திரும்புகின்றது. பேரனது மடிமீது தலையிருக்க, பேரனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் காற்று வீசிக் கொண்டிருக்கின்றாள். அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த கிழவர், ஸ்ரீநிதி என்று முனகிக்கொண்டார்.

xxx
சிவத்தமிழ் 28 (2016)


No comments:

Post a Comment