Saturday, 13 August 2016

படைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்கியும் அல்ல.


திரு. லெ.முருகபூபதியுடன்  நேர்காணல்

பகுதி 1

01.         'அரசியலைத் தெரிந்து  வைத்துக் கொண்டு  எழுதும்  எழுத்தாளர்களில் நீங்கள்  குறிப்பிடத் தகுந்தவர் -   எனது   இந்தக் கருத்துப்  பற்றி  நீங்கள்  என்ன  சொல்ல  விரும்புகின்றீர்கள் ?

முருகபூபதி :  மனிதர்களிடத்தில்  நாகரீகம்    பரவத்தொடங்கிய  காலம் முதலே  அரசியலும்  அறிமுகமாகிவிட்டது.  அரசியல்தான்  தேசங்களின் தலைவிதி.   மக்கள்  தேர்தலில்  யாருக்கோ   வாக்களிக்கிறார்கள். யாரையாவது  ஆதரிக்கின்றார்கள்.   அத்துடன்,   அரசியல்  கருத்தியல் சார்ந்தது.    எனவே  எவருமே    தனக்கும்  அரசியலுக்கும்  சம்பந்தம்  இல்லை எனச்சொல்லமுடியாது.   நான்  பத்திரிகையாளனாக  உருவாகி படைப்பாளியாக   மாறியவன்.   பத்திரிகையாளனுக்கும்  படைப்பாளிக்கும்  அரசியல்  தெரிந்திருக்கவேண்டும்.    அரசியலைத் தெரிந்துவைத்துக்கொண்டு எழுதும்  எழுத்தாளர்கள்தான்  எம்மத்தியில்  வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கின்றார்கள்.   கம்பருக்கும்  வள்ளுவருக்கும்  இளங்கோவுக்கும் பாரதிக்கும்   அரசியல்  தெரியும்.  எனவே  நான்  விதிவிலக்கல்ல.


02.         நிருபர்,  ஒப்புநோக்காளர்,   துணையாசிரியர்  என்று  ஒரு பத்திரிகையாளராக   பணியைத்   தொடங்கியவர்    நீங்கள்.   பத்திரிகை  உலகம்,  இலக்கிய  உலகம்  இந்த  இரண்டிற்குமிடையேயுள்ள  வேறுபாடுகள்  எவை ?  ஆரம்பத்தில்  இதை  எப்படிச்  சமாளித்தீர்கள்?

முருகபூபதி :  பத்திரிகையாளனாகவும்   படைப்பாளியாகவும்  சமகாலத்தில் இயங்கிவருகின்றேன்.   நிருபராக  பத்திரிகையில்  செய்தி  மற்றும்  செய்தி அறிக்கை   எழுதுவது,  நேர்காணல்களை  பதிவுசெய்வது  முதலான  பணிகள் இருந்தன.    துணை   ஆசிரியராகியதும்   ஏனைய  நிருபர்கள்  எழுதியவற்றை செம்மைப்படுத்துவது  (Editing) , தலைப்பிடுவது   முதலான  பணிகளில் ஈடுபட்டேன்.    வாசகருக்கும்  சமுதாயத்திற்கும்   எது  முக்கியம்  என்பதை உணர்ந்து  அதற்கேற்றவாறு  செய்திகளை   செம்மைப்படுத்துவது  முதலான பணிகள்.
அதனால்  பத்திரிகையாளன்  பணி  ஒருவகையில்  Team work.
படைப்பாளியின்  நிலை   அப்படியல்ல.  அது  ஆக்க  இலக்கியம்  சார்ந்தது.        (  Creative  writing )  அது  ஒருவகையில்  தவம்.  பாத்திரங்களை சிருஷ்டிப்பது.   கதை  சொல்லியாக   படைப்பு மொழியை  உருவாக்குவது. முழுமையாக  தன்னிலை   சார்ந்து  இயங்குவது.  படைப்பாளி  சிறுகதையிலும்   நாவலிலும்  சிருஷ்டிக்கும்  பாத்திரங்களிலெல்லாம்  அவனே    இருப்பான்.    பல்வேறு  குணாதிசயங்களை   இயல்புகளை வெளிப்படுத்துவான்
அதேசமயம்  ஒரு  ஆபத்தும்  இருக்கிறது.  அதனை   நான்  உணர்ந்தேன். தொடர்ச்சியாக   செய்திகளையே   எழுதி  செய்திகளை  செம்மைப்படுத்திய காலப்பகுதியில் , சிறுகதை  எழுதியபொழுது,  சில  சந்தர்ப்பங்களில் நடைச்சித்திரமாகிவிட்டதையும்  அவதானிக்க  முடிந்தது.  அதனால்  மீண்டும்   மீண்டும்  படித்து  திருத்தி  எழுத  நேர்ந்தது.
 வீரகேசரியில்   ஆசிரிய  பீடத்தில்  பணியாற்றிய  காலப்பகுதியில்  எனது ஒரே   ஒரு  சிறுகதைதான்  வீரகேசரி  வாரவெளியீட்டில்  பிரசுரமானது. ஆனால்,  அங்கு  இணைவதற்கு  முன்னர்  நீர்கொழும்பு  பிரதேச  நிருபராக பணியாற்றிய வேளையில்   பத்துக்கும்  மேற்பட்ட  சிறுகதைகளை எழுதியிருக்கின்றேன்.   1972   ஆம்  ஆண்டுதான்  பத்திரிகை   நிருபராகவும் இலக்கியப்பிரதியாளனாகவும்    உருவாகி  வெளியே   எனது  பெயர் அறியப்பட்டது.    குறிப்பிட்ட  1972  ஆம்  ஆண்டில்  மல்லிகைபூரணி, புதுயுகம்  முதலான   இதழ்களில்  எனது  முதல்கட்ட  சிறுகதைகள் வெளிவந்துவிட்டன.
1975    இல்  முதலாவது  சிறுகதைத்தொகுதி  சுமையின்  பங்காளிகள் வெளியானது.    1977    இற்குப்பின்னர்தான்  கொழும்பில்  வீரகேசரி அலுவலகத்துள்   ஒப்புநோக்காளராக (Proof Reader)  பிரவேசித்தேன்.   1972 - 1975   காலப்பகுதியில்  நான்  எழுதிய  சில  சிறுகதைகளை   வீரகேசரியோ, தினகரனோ    ஏற்கவில்லை.    நான்  எழுதிய  சிறுதைகளில்  பிரதேச மொழிவழக்கு   சற்று  தூக்கலாக  இருந்ததே  அதற்குக்காரணம்  என்று குறிப்பிட்ட    ஆசிரிய  பீடங்களில்  சொல்லப்பட்டது.

ஆனால்,  எனது  சில  சிறுகதைகளை   மல்லிகை,  பூரணி,  புதுயுகம் ஆகியவற்றில்    படித்த  எம். சிறிபதி  எழுத்துலக   இளம்  பங்காளி  என்ற தலைப்பில்   எனது  சிறுகதைகளை   சிலாகித்து  தினகரனில்  விமர்சனம் எழுதியிருந்தார்.    ரத்னசபாபதி  அய்யர் ,  அநு. வை. நாகராஜன்  உட்பட சிலர்   மல்லிகை,   பூரணி    முதலானவற்றில்  தமது  கருத்துக்களை எழுதினார்கள்.
எனது   சிறுகதைகளை   புறக்கணித்த  வீரகேசரி,  தினகரன்  பத்திரிகைகள் 1976  ஆம்  ஆண்டு  எனது  முதல்  சிறுகதைத் தொகுப்பிற்கு  சாகித்திய விருது  கிடைத்ததும்  எனது  படத்துடன்  செய்திகளை   வெளியிட்டன.
ஒரு  நூலை   வெளியிட்டு  இரண்டு  வருடங்களின்  பின்னர்தான்  எனக்கு வீரகேசரி   தலைமை   அலுவலகத்தில்    வேலையே   கிடைத்தது

03.         இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் நீங்கள். அதன் செயலாளராகவும் இருந்துள்ளீர்கள். நீங்கள் கடந்துவந்த இந்தப் பாதையில் தற்போதைய உங்களின் நிலை என்ன? இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடர்ந்தும் தீவிரமாக இயங்கி வருகின்றதா?

முருகபூபதி :   இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திற்கு  நீண்ட வரலாறு   இருக்கிறது.   அதில்  நான்  1973  இல்   இணைந்தேன்.   நான் செயலாளர்  அல்ல.   தேசிய  சபை  உறுப்பினராகச் சேர்ந்து  பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்த  1987  வரையில்  அதன்  கொழும்புக்  கிளையின்  செயலாளராகவும் கடமையாற்றினேன்.   அந்த  அமைப்பின்  எழுத்தாளர்  கூட்டுறவுப்பதிப்பகத்தில்    இணைப்பாளராகவும் -      சங்கத்தின்   பொதுச்செயலாளர்   பிரேம்ஜி  ஞானசுந்தரன்,   தலைமைக்குழுவிலிருந்த   சோமகாந்தன்    ஆகியோரின்  அழைப்பில்  சங்கத்தின்  முழுநேர  ஊழியனாகவும்    கடமையாற்றினேன்.   அப்பொழுது எனக்கு  நிரந்தர  வேலை  ஏதும்  கிடைக்கவில்லை.  சுமார்  நான்கு வருடங்கள்  வருவாய்க்காக   சிரமப்பட்ட  காலம்.
அவர்கள்  இருவரும்  எனக்கு  மாதம்  150  ரூபா  அலவன்ஸ் தந்தார்கள். எனது   பஸ்  போக்குவரத்துக்குத்தான்  உதவியது.
எனினும்  சங்கத்தின்  அர்ப்பணிப்புள்ள  தொண்டனாகவே  இயங்கினேன். மாநாடுகள்,   கருத்தரங்குகள்,  நூல்  வெளியீடுகள்,   கொழும்பில்  மாதாந்த கருத்தரங்குகள்,    சிங்களப்பிரதேசங்களில்  தமிழர்  உரிமையையும்  தேசிய ஒருமைப்பாட்டையும்   வலியுறுத்தும்  கூட்டங்கள்  என  மிகவும் உற்சாகமாகவும்    செயலூக்கத்துடனும்  இயங்கினோம்.   எனது  ஊர் நீர்கொழும்பில்    இலக்கிய  வட்டம்  அமைத்து,   பேராசிரியர்  கைலாசபதி, மல்லிகை   ஜீவா,  கவிஞர்  முருகையன்,  மு. கனகராஜன்,  சோமகாந்தன், தெணியான்,    மொஹிதீன்,  ராஜஸ்ரீகாந்தன்,   திக்குவல்லை  கமால்,  உட்பட பல  முற்போக்கு  எழுத்தாளர்களையும்  'பூரணி ' மகாலிங்கம், மு.நித்தியானந்தன்,   ஸ்ரீபதி,  தகவம்  இராசையா,   வேல்  அமுதன்,  கவிஞர் அம்பி,   அன்னலட்சுமி  இராஜதுரை,   தெளிவத்தை  ஜோசப்,  மேமன்கவி, குப்பிழான்  சண்முகன்,    சில்லையூர்  செல்வராசன்,   கமலினி  செல்வராசன், மு. பஷீர்  முதலானோரையும்   அழைத்து  பேசவைத்திருக்கின்றேன். மல்லிகை    நீர்கொழும்பு  பிரதேச  சிறப்பிதழும்  1972  இல்  வெளியிட்டோம்.
சங்கத்தில்  கடலும்  வானமும்  போன்று  இணைந்திருந்த  அந்தக்காலம் மறக்கமுடியாதது.   அதனை  எனது  வசந்த  காலம்  என்றுதான்  சொல்வேன். நான்   1987  இல்   நாட்டைவிட்டு  வெளியேறியதை  சங்கத்தினர் பேரிழப்பாகவே   கருதினார்கள்.   எனினும்  சங்கத்துடனான  தொடர்பு நீடித்தது.    அவுஸ்திரேலியாவிலிருந்து  சுமார்  11   வருடங்களின்  பின்னர் இலங்கை  சென்றபொழுது  சங்கம்  என்னை  வரவேற்று  உபசரித்தது.   1997   இல்  நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்  சங்கம்  நடத்திய  முழுநாள் கருத்தரங்கிலும்    கலந்துகொண்டேன்.   சங்கம்  மேற்கொண்ட  பல ஆக்கபூர்வமான  பணிகளுக்கு  தொடர்ந்து  ஆதரவும்  ஒத்துழைப்பும் வழங்கினேன்.
சுருக்கமாகச் சொன்னால்   சங்கம்  எனது  மற்றுமொரு  தாய்வீடு.
ஆனால்  -  இன்று  சங்கம்  முற்றாக  இயங்காமல்  தேங்கிவிட்டது.   அதன் முக்கிய   தூண்களாக  விளங்கிய  பலர்  மறைந்துவிட்டார்கள்.    நான்  1987 இல்  புலம்பெயர்ந்த  பின்னரும்  சங்கம்  சிறப்பாகத்தான்  இயங்கியது.
 சங்கத்தின்  பொதுச் செயலாளர்  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  கனடாவுக்கும்  காவலூர்  ராஜதுரை   அவுஸ்திரேலியாவுக்கும்  புலம்பெயர்ந்தனர்.   எச்.எம்.பி. மொஹிதீன்,    இளங்கீரன்,   மு. கனகராஜன்,   ராஜஸ்ரீகாந்தன், சோமகாந்தன்    ஆகியோர்  மறைந்தனர்.   இடையில்  பிரேம்ஜி  இலங்கை சென்று    சங்கத்தை  புனரமைத்து    திக்குவல்லை  கமாலை செயலாளராக்கினார்.
ஆனால்,   நீர்வை பொன்னையன்,  மல்லிகை  ஜீவா,  பேராசிரியர்  சிவத்தம்பி, முகம்மது  சமீம்  முதலான  தலைமைக்குழு  உறுப்பினர்களினால் இணைந்து  இயங்க  முடியாது  போய்விட்டது.   சங்கம்  இயங்கியிருக்க வேண்டும்.    துர்ப்பாக்கியவசமாக  அது  செயல்  இழந்துவிட்டது.
நான்  தொடர்ந்தும்  இலங்கையில்  இருந்திருந்தால்  இயங்கவைத்திருப்பேன்  என்ற  திடமான  நம்பிக்கையும்  எனக்குண்டு.
ஒரு   சங்கத்தை  தொடர்ச்சியாக  இயங்கவைப்பதற்கு  தியாக மனப்பான்மையும்    அர்ப்பணிப்புணர்வும்  செயலூக்கமும்  வேண்டும்.

04.  நீங்கள்    இதுவரை   இருபதிற்கும்  மேற்பட்ட  நூல்களை   எழுதி வெளியிட்டுள்ளீர்கள்.    உங்களின்  முதல்  தொகுப்பான  ‘சுமையின் பங்காளிகள்சிறுகதைத்தொகுதிக்கு   இலங்கையின்  சாகித்தியமண்டலப் பரிசு   கிடைத்தது.   அதன்  பின்னர்  பல  சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தும்ஒரு  தொகுதிக்குத்தன்னும்  சாகித்தியமண்டலப்  பரிசு கிடைக்கவில்லையே...!  அப்போது  அறிமுகப்  படைப்பாளியாக  இருந்த காரணத்தினால்  உங்களுக்கு  அந்தப் பரிசைத்  தந்தார்களா...? அல்லது அதன்பின்னர்  வந்த  தொகுதிகள்  அனைத்துமே   அந்தப் பரிசுக்குத் தகுதியில்லையா...?  இந்த  சாகித்திய மண்டலப்  பரிசு  பற்றிக்  கொஞ்சம் சொல்லுங்கள்.

முருகபூபதி :   இந்தக்கேள்வி  எனக்கு  விநோதமாகப்படுகிறது.  முதல் சிறுகதைத்தொகுதி    சுமையின்  பங்காளிகள்   1975  ஆம்  ஆண்டு  வெளியானது.   வெள்ளீய  எழுத்து  அச்சுக்கள்  கோர்த்து  அச்சிடப்பட்டது. அதில்  சில  கதைகளுக்கு  நானே   அச்சுக்கோர்த்தேன்.   எனது  நண்பர்கள் நடத்திய  நீர்கொழும்பு  சாந்தி   அச்சகத்தில்  வெளியானது.   இன்று அவ்வாறு  நூல்கள்  அச்சிடப்படுவதில்லை.   நாம்  கணினி   யுகத்திற்கு வந்துவிட்டோம்.
அக்காலப்பகுதியில்  கொழும்பில்  தேசிய  சுவடிகள்  திணைக்களம் இருந்தது.   இப்பொழுதும்  இருக்கிறது.
இலங்கையில்  எந்த  மொழியிலும்   வெளியாகும்  நூல்கள்,  இதழ்கள், பத்திரிகைகளின்    பிரதிகளை   இந்தத்திணைக்களத்திற்கு  அனுப்பவேண்டும். இன்றும்  அந்த  நடைமுறை   இருக்கும்  என  நம்புகின்றேன்.
எனது   நூலின்  பிரதிகள்  சில  இந்தத்திணைக்களத்திற்கு  அச்சகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டது.   அவ்வாறு  அனுப்பப்பட்டு  அந்த  ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட   நூல்களை   கலாசாரத் திணைக்களம்  வாங்கும். சாகித்திய   மண்டலத்தில்  தமிழ்ப்பிரிவு,   சிங்களப்பிரிவு  இயங்கும்.    அதில் அங்கம் வகிப்பவர்கள்  நூல்களை   தேர்வுசெய்து,  முதலில்  சில  இலக்கிய விமர்சகர்களின்   பார்வைக்கு  பரிந்துரைக்காக  அனுப்புவார்கள்.   அவர்களின் பரிந்துரையுடன்    சாகித்திய  மண்டல  உறுப்பினர்களும்  கூடி  ஆலோசித்த பின்னரே    பரிசுக்கு  தெரிவுசெய்வார்கள்.
இந்த   நடைமுறைகளையெல்லாம்   சாகித்திய  மண்டலப்பரிசுபெற்றதன் பின்னரே  நான்  தெரிந்துகொண்டேன்.
ஒருநாள்  மாலை   6   மணிக்கு   இலங்கை  வானொலி தமிழ்த்தேசிய சேவையில்  ஒலிபரப்பான    செய்தியில்  எனது  நூலுக்கும்  சாகித்திய  பரிசு கிடைத்திருப்பதாக    சொல்லப்பட்டிருக்கிறது.   ஆனால்  அதனை  நான் செவிமடுக்கவில்லை.    எங்கள்  வீட்டில்  அப்பொழுது  வானொலிப்பெட்டியும் இருக்கவில்லை.    குடும்பம்  பொருளாதார  நெருக்கடியில்  தவித்த  காலம். நண்பர்  செல்வரத்தினம்   ( இவர்  தற்பொழுது  பிரான்ஸில்  இருக்கிறார்.) செய்தி கேட்டதும்  மிகுந்த  மகிழ்ச்சியுடன்  என் வீடு நோக்கி ஓடிவந்து சொன்னார்.   அப்பொழுதும்   நான்   அதனை   நம்பவில்லை.   பின்னர்  இரவு 9 மணிக்கு   அயல்வீட்டு  வானொலியில்  செய்தியை கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
அச்சமயம்  சிறுகதைக்காக  எனக்கும்  நண்பர்  சாந்தனுக்கும்  சாகித்திய பரிசு  கிடைத்தது.   செங்கை ஆழியானுக்கு  பிரளயம்  நாவலுக்கு கிடைத்தது.   அத்துடன்  ஆத்மஜோதி  முத்தையா,   மகாஜனா  கல்லூரி  அதிபர்  சண்முகசுந்தரம்  ஆகியோருக்கும்  அவர்கள்  எழுதிய  நூல்களுக்காக    சாகித்திய  பரிசு  கிடைத்தது.
விருது  என்பது  சிறிய  அங்கீகாரமே.   என்னைப் பொறுத்தவரையில்  எனது முதல்   கதைத்தொகுதியில்  முற்றிலும்  புதிய  பிரதேச  மண்வாசனை இருந்தது.   ஈழத்து  இலக்கியத்திற்கு  அச்சமயம்  புதிய  வரவாகும்.   பரிசு கிடைக்கும்   முன்னரே   அந்தத்தொகுதி    பற்றி  இலங்கை  வானொலி கலைக்கோலம்  நிகழ்ச்சியிலும்  விமர்சிக்கப்பட்டதாக  அறிந்தேன்.  ஆனால் அதனையும்    நான்   கேட்டதில்லை.   அந்தப்பரிசு  எதிர்பாராத  நிகழ்வுதான்.
 1987   இன்  பின்னர்  அவுஸ்திரேலியாவுக்கு  வந்துவிட்டேன்.   இரண்டாவது சிறுகதைத்தொகுதி    சமாந்தரங்கள்.    1989 இல்   வெளியானது.  அடுத்து வெளிச்சம்,    எங்கள்  தேசம்,   நினைவுக்கோலங்கள்  என்பனவும் அவுஸ்திரேலியாவிலிருக்கும்  காலத்தில்  வெளியானவை.   கங்கை  மகள் 2005   இல்  இலங்கையில்  மல்லிகைப்பந்தல்  வெளியீடாக  வந்தது.
ஒரு  படைப்பாளி  எழுதும்  அத்தனை  நூல்களுக்கும்  சாகித்திய  பரிசு வழங்கமுடியுமா...?
சாகித்திய  பரிசுபெற்றால்தான்  சிறந்த  படைப்பு  இல்லையேல்  சிறந்த படைப்பு   அல்ல  எனச்சொல்லத்தான்  முடியுமா...?  எத்தனையோ  சிறந்த படைப்புகளுக்குசிறந்த  படைப்பாளிகளுக்கு  இன்னமும்  இந்த  சாகித்திய பரிசு    கிடைக்கவில்லையே....!  அதனால்    அவர்களை  இலக்கிய  உலகம் புறக்கணித்துவிட்டதா...?
நான்  எழுதத்தொடங்கிய  காலத்தில்  பல  படைப்பாளிகள் அறிமுகமானார்கள்.   ஆனால்,  அறிமுகமான  எல்லாப் படைப்பாளிகளுக்கும் இந்தப்பரிசு   கிடைத்ததா...?  எனவே   நான்  அந்தப்பரிசை  எதிர்பார்த்து எழுதவில்லை.    கிடைத்தவரையில்  மகிழ்ச்சி.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்த  பின்னர்  நான்  எழுதி  வெளியிட்ட  எந்தவொரு   நூலையும்  பரிசுகளுக்காக  அனுப்பவில்லை.
ஆனால்  2001  இல்  வெளியான  எனது  முதல்  நாவல்  பறவைகளுக்கு சாகித்திய பரிசு  2002  இல்  கிடைத்தது.   இலங்கையிலிருந்த  எனது  மனைவி   மாலதி  கொழும்பு  இசுருபாயாவில்  விண்ணப்ப  படிவம்  பெற்று நூலின்    பிரதிகளை   அங்கு  சேர்ப்பித்தார்.
அதற்கு  அவ்வாண்டுக்குரிய  சாகித்திய  விருது  கிடைத்த  செய்தியை  எனது    அம்மா,  ரூபவாஹினி  தொலைக்காட்சியில்  கேட்டுவிட்டு  எனக்குத் தெரிவித்தார்.    இந்நிகழ்வும்  எதிர்பாராதது.    அம்மாவின்  விருப்பத்திற்காக விமானம்   ஏறி,  அம்மாவுடன்  சென்று  பெற்றுக்கொண்டேன்.
முதல்    தடவை  முதலாவது  ஜனாதிபதி  வில்லியம்  கொப்பல்லாவவிடமும்  இரண்டாவது  தடவை    பிரதமர்  ரணில் விக்கிரமசிங்காவிடமும்    பெற்றுக்கொண்டேன்.
இரண்டுமே    எதிர்பாராத  நிகழ்வுகள்தான்.

05.         சிறுகதைப் படைப்பில்    நீங்கள்  அடைந்துள்ள  உச்சங்கள்  எவை   எனச் சொல்வீர்கள்...?

முருகபூபதி :   உச்சங்கள்  என்று  எதனைத்தான்  சொல்வது....? பரிசுகள் உச்சங்களை    தீர்மானிப்பதில்லை.   வாசகர்களிடம்  பெறும்  வரவேற்புத்தான் உச்சம்.    சிறுகதைகளை    படிக்கும்  வாசகனின்  சிந்தனையில்  அது ஊடுருவவேண்டும்.    படித்த  பின்னர்  சில  காலம்  ஏன்  நெடுங்காலம் என்றும்    சொல்லலாம்.    வாசகரின்  மனதில்  ஒரு  சிறுகதை  நின்றால் அதுதான்    உச்சம்.
எனது    சில  கதைகள்   ஆங்கிலத்திலும்  சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.    அவற்றை   மொழிபெயர்த்தவர்கள் பார்வையில்    அவை   உச்சமாக  இருந்திருக்கலாம்.
தொகுப்புகளுக்காக   தேர்வு செய்பவர்கள்  உச்சமான  கதைகளைத்தான் தெரிவு    செய்வார்கள்.    அவ்வாறு  பனியும்  பனையும்  தொகுப்பு  - இலங்கை    சுதந்திரம்  பெற்று  50  ஆண்டு  நிறைவில்  வெளியிடப்பட்ட  தொகுப்பு, செங்கை ஆழியான்  தொகுத்த  நூல்  ஆகியனவற்றிலும்  எனது  சிறுகதைகள்    இடம்பெற்றுள்ளன.    படைப்பதுடன்  படைப்பாளியின்  பணி முடிந்துவிட்டது.    அதன்  பின்னர்  அதனை  வாசகர்தான்  உச்சமா,   தாழ்வா என்பதை    தீர்மானிக்கின்றனர்.

06.         உங்கள்    படைப்புகளில்  வட்டார மொழி  வழக்கின்  தாக்கம் எத்தகையது?

முருகபூபதி :   நான்   பிறந்து  தவழ்ந்து  வாழ்ந்த  பிரதேசம்  நீர்கொழும்பு. எனது   வீட்டின்  அருகே  கடல்.   அலையோசை   கேட்டுக்கொண்டிருக்கும். எமக்காக    நடு இரவில்  ஆழ்கடல்  சென்று  மீன்பிடித்துவரும் கடற்றொழிலாளர்கள்    எனது  நண்பர்கள்.   அவர்களின்  பேச்சுமொழி  வழக்கு இனிமையானது.    சுவாரஸ்யமானது.   அவர்கள்  பேசுவது  தமிழ்தான். அவர்களின்   மொழியை   சரளமாகப்பேசுவேன்.   அவர்களுடன்  உரையாடும் வேளையில்  அவர்களின்  மொழியில்  எனது  பேச்சைக்கேட்டு  மிகவும் மகிழ்ச்சி   அடைவார்கள்.
வெளிநாடுகளில்   எமது  தமிழர்  சம்பந்தப்பட்ட  நிகழ்ச்சிகளுக்கு  வரும் வெள்ளை    இனத்தவர்கள்,  முதலில்  வணக்கம்  எனச்சொன்னதும் எம்மவர்கள்   கைதட்டி  சிரித்து  வரவேற்பதைப் பார்ப்பீர்கள்.   அதுபோன்றது அவர்களின்   மகிழ்ச்சி  என  வைத்துக்கொள்ளுங்கள்.
எனது  முதலாவது  சிறுகதை   கனவுகள்  ஆயிரம்.  நீர்கொழும்பு  மீனவ மக்களின்   பிரதேச  மொழி   வழக்குடன்  வெளியானது.   அதனை   தகழி சிவசங்கரன்  பிள்ளையின்  செம்மீனுடன்  நினைவுபடுத்தி    மீனவ  மக்களின்    கனவுகளையும்   ஒப்பிட்டு  எழுதினார்  ரத்னசபாபதி  அய்யர்.
தமது  பல்கலைக்கழக  ஆய்வேட்டில்  எனது  கதைகளின்  மாந்தர்களின் பேச்சுமொழிவழக்கையும்  பதிவுசெய்தார்  வன்னியகுலம்.
அந்தப்பிறவிகள்    சிறுகதையை   மூதுபுத்து  சிங்கள  நாடகத்திற்கும்  மகாகவி    உருத்திரமூர்த்தியின்  புதியதொரு வீடு  கவிதை   நாடகத்திற்கும்  ஒப்பிட்டனர்.
புலப்பெயர்வு  வாழ்வில்,   தொடர்ந்தும்  அந்தப்  பிரதேசமொழி  வழக்கில் எழுத    முடியாமல்  புதிய  களத்தை  சித்திரிக்க  வேண்டியதாகிவிட்டது.
மீண்டும்  அங்கு  சென்று  சில  மாதங்கள்  தங்கினால்   அம்மக்களின் மொழியில்    எழுத  முடியும்.   நான்  இழந்தது  அதிகம்.

07.         நீங்கள்  இலக்கியப்  பிரவேசம்  செய்ய  காரணமாக  இருந்தவர் டொமினிக்  ஜீவா.  48  வருட காலமாக வெளிவந்தமல்லிகைசஞ்சிகை இடையில்  நின்றுபோய் விட்டது.  நீங்கள்  அதிகம்  நேசிக்கும் எழுத்தாளர்களில்   ஒருவர்  ஜீவா.   மல்லிகை   செயலிழந்தபோது  அதைத் தூக்கிவிட  வேண்டும்  என்ற  எண்ணம்  உங்களுக்கு  வரவில்லையா...? குறைந்தது    இன்னும்  இரண்டு  வருடங்களாவது  அது  வெளிவந்திருந்தால் இலங்கையில்  அது  பெரும்  சாதனையாகப்  பேசப்பட்டிருக்கும்  அல்லவா..?

முருகபூபதி :   இலங்கையில்  மல்லிகையின்  வரலாற்றை  அரசியல்  சமூக பொருளாதார  மாற்றங்களுடன்தான்  பார்க்க வேண்டும்.   முதலில் யாழ்ப்பாணத்திலிருந்தும்  பின்னர்  கொழும்பிலிருந்தும்  மல்லிகை வெளியானது.   ஜீவாவின்  இடப்பெயர்வுக்கு  யாழ்ப்பாணத்தில்  நிலவிய அரசியல்    கொந்தளிப்பும்  காரணம்.   ஒரு  தடவை  அவர்  யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டுவிட்டார்  என்றும்  ஒரு  செய்தி  வெளியாகி,  அவுஸ்திரேலியாவில்   ஒரு  மாநிலத்திலிருந்து  நண்பர்  ஒருவர் ஊர்ஜிதப்படுத்த  என்னுடன்  தொடர்புகொண்டார்.
 நான்  பதறியடித்து,   கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்கும்  தொடர்புகொண்டு உண்மையை    அறிந்தேன்.
மல்லிகை  ஜீவாவை   இறுதியாக  இந்த  (2015  இல்ஆண்டு தொடக்கத்திலும்    சந்தித்துவிட்டு  வந்து,   மல்லிகை  ஜீவாவும் டொமினிக்ஜீவாவும்  என்ற  தலைப்பில்  விரிவான  கட்டுரை எழுதியிருக்கின்றேன்.    நீங்கள்  அதனைப்படித்தீர்களா  என்பது தெரியவில்லை.
மல்லிகை  வெளியானதற்கும்   48   ஆண்டுகளின்  பின்னர்  மல்லிகை வெளிவராமல்  நின்றுவிட்டதற்கும்  ஜீவாவே   காரணம்.   அவர்  கொழும்பு வந்த    பின்னர்  பொருளாதார  ரீதியில்  அவருக்கு  போதிய  ஆதரவு இருந்தது.     வெளிநாடுகளிலிருந்து  செல்லும்  எமது  எழுத்தாளர்கள்  அவரை    சந்தித்து  திரும்புவார்கள்.    கொழும்பு  கதிரேசன்  வீதியில் கணினியில்    மல்லிகை    இதழ்களை  பதிவுசெய்வதற்கு  முழு  நேர  ஊழியர்    இருந்தார்.    மேமன் கவி,    . பாலசிங்கம்,   . ஆப்தீன்  முதலான இலக்கியவாதிகள்   மற்றும்  பூபாலசிங்கம்  புத்தக  நிலைய  அதிபர் ஸ்ரீதரசிங்  உட்பட  பலர்  அவருக்கு  பக்கபலமாக  இருந்தார்கள்.
எதிர்பாராத    விதமாக  ஜீவா    சுகவீனமுற்றார்.   ஜீவா  பொதுவுடமையில் நம்பிக்கைவைத்து    அரசியல்  பிரவேசம்  செய்திருந்தாலும் ,  மல்லிகையை பொறுத்தமட்டில்   அவருக்கு  இந்த  பொதுவுடமையில்  நம்பிக்கை  இல்லை.
கூட்டாக   இணைந்து  இலங்கையில்  வெளியான  சில  இலக்கிய சிற்றிதழ்கள்  கருத்து வேறுபாடு -  குழுவாதங்களினால்  நின்றுவிட்டன.
அச்சகம்    வைத்து  இதழ்கள்  வெளியிட்டவர்களும்  இந்தத்துறையில் தோற்றுப்போனார்கள்.    தமது  சுகவீனத்தை  காரணமாக்கி,  தன்னுடன் தொடர்ந்து   நின்று   இயங்கியவர்களிடம்  ஒப்படைத்து,  மல்லிகையை   அவர் வெளியிட்டிருக்கலாம்.   ஆனால் -  அவருக்கு  இந்தக் கூட்டணிகளில் நம்பிக்கை  இல்லை.
இன்றைய    கணினி  யுகத்தில்  அதனை   இணைய  இதழாக வெளியிட்டிருக்கலாம்.   ஆனால்,  ஜீவாவுக்கு  இணைய  இதழ்கள் -  கணினி முதலானவற்றில்    பரிச்சயம்  இல்லை.
அவர்,   தமது  மகன்  திலீபன்  மல்லிகையை   நடத்துவார்    என்று நம்பியிருந்தார்.
திலீபன்    கொழும்பில்  தமக்குச்சொந்தமான  இரண்டு  பிரபலமான ஒளிப்படப்பிடிப்பு    நிறுவனத்தில்  மிகவும்  பிஸியாக  இருக்கிறார்.
அதனால்    அவராலும்  மல்லிகை    வெளியாவது  சாத்தியமில்லை.
தமிழகத்தின்  தாமரை   இதழை    தோழர்  ஜீவானந்தம்  தொடக்கினார்.    அது   கம்யூனிஸ்ட்  கட்சியின்  இதழ்.   அவர்  மறைவின்  பின்னரும் அவ்வப்பொழுது    வருகிறது.    நிறுவனர்  தோழர்  ஜீவானந்தம்  என்று ஒவ்வொரு    இதழிலும்   பதிவுசெய்துவருகிறார்கள்.
அவ்வாறாகிலும்   நண்பர்களை   வைத்து  ஜீவா  மல்லிகையை வெளியிட்டிருக்கமுடியும்.
இந்த  ஆலோசனைகள்  அவருக்கு  சொல்லப்பட்டது.
ஆனால்,   பயனில்லை.   மல்லிகை  ஒரு  சகாப்தம்.   அவ்வளவுதான்.   ஜீவா பற்றி    ஒரு  நூலும்  பல  கட்டுரைகளும்  ஏற்கனவே   எழுதிவிட்டேன். பழைய  மல்லிகை  இதழ்களை  நீங்கள்  நூலகம்  இணையத்தில் வாசிக்கலாம்.

08. நான் உங்களிடம் கேட்பது அதுவல்ல. |நண்பர்களை   வைத்து  ஜீவா  மல்லிகையை வெளியிட்டிருக்க முடியும்| என்று நீங்கள் சொல்கின்றீர்கள். நண்பர் முருகபூபதி மல்லிகையைத் தொடர்ந்து நடத்துவார் என்று ஜீவா உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாக அறிகின்றேனே!

முருகபூபதி என் மீது  ஜீவா  இதுவிடயத்தில்  நம்பிக்கை  வைத்திருந்தார் என்று    எதனை வைத்துச்சொல்கிறீர்கள்.   அதற்கு  என்ன  ஆதாரம்....? நான் இருப்பது   அவுஸ்திரேலியாவில்.   அவர்  கொழும்பில்.  இந்நிலையில் சாத்தியமேயில்லை.   அவர்  என்னிடத்தில்  நம்பிக்கை கொண்டிருக்கலாம் என்பது   வெறும்  ஊகம்  என்றே  நான்   நினைக்கின்றேன்.   ஆனால் சிலவேளை  நான்   இலங்கையில்  இருந்திருப்பின்  அவர்  என்னுடன் ஆலோசித்திருக்கலாம்.    அவரை  2011  இல் சந்தித்த    பின்னர்  மீண்டும்  2015 தொடக்கத்தில்தான்  சந்தித்தேன்.   மல்லிகை  2012   இல் நின்றிருக்கவேண்டும்.    இறுதியாக  நான்  அவரைச் சந்தித்தபொழுது  நாம் மல்லிகை    பற்றியே  பேசவில்லை.   அவரது  உடல் நலன்  பற்றித்தான் உரையாடினோம்.   ஆனால்,  அவர்  மல்லிகை   வெளியீடு  விடயத்தில் என்னை  நம்பியிருந்தார்  என்பது  நீங்கள்  சொல்லித்தான்  அறிகின்றேன்.

09. அவுஸ்திரேலியா  தமிழ்  அகதிகள்  கழகம், அவுஸ்திரேலியா  தமிழர் ஒன்றியம், இலங்கை   மாணவர்  கல்வி  நிதியம், அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய   கலைச்சங்கம்  என்பவற்றை   ஸ்தாபித்ததில்  நீங்கள்  பெரும் பங்கு கொண்டுள்ளீர்கள்.   அவுஸ்திரேலியாவைத்  தளமாகக்  கொண்டு நீங்கள்    செய்த  இலக்கியம்  சார்ந்த -  சாராத  முயற்சிகள்  எவை...?

முருகபூபதி :   உங்கள்  கேள்வியிலேயே  பதில்  இருக்கிறது. அவுஸ்திரேலியா  தமிழர்  ஒன்றியம்,   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் என்பன    கலை,   இலக்கியம்  சார்ந்த  அமைப்புகள்.   கல்வி  நிதியம்  கல்வி சார்ந்தது.    அகதிகள்  கழகம்  அகதிகள்  நலன்  சார்ந்தது.
எனது  புலப்பெயர்வு  எதிர்பாராதது.   எனது  தம்பிமார்  தொழில்  நிமித்தம் மத்திய   கிழக்கு    நாடுகளுக்கு  சென்றபோதிலும்  நான்   அவ்வாறு  வெளியே  செல்ல  விரும்பியிருக்கவில்லை.   எனக்கு  எனது  நாட்டின்  மீதும்  பிறந்த  ஊரின்  மீதும்  அளவுகடந்த  நேசம்.  ஆனால்,  அரசியல் நெருக்கடியிலிருந்து    நானும்  தப்பவில்லை.  இதுபற்றி  ஏற்கனவே  எனது கட்டுரைகளில்    எழுதிவிட்டேன்.
பத்திரிகையிலிருந்தபொழுது,   போர்க்காலச் செய்திகளையே   எழுதினேன். தினமும்   வடக்கு -  கிழக்கு  மாகாண  நிருபர்களுடன்  தொடர்பில் இருந்தேன்.    இறுதியாக  போர்நெருக்கடி  தொடர்பான  செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக   வடமராட்சிக்கு  பயணித்தேன்.   (இதுபற்றியும் எனது    சொல்ல  மறந்த  கதைகள்  நூலில்    பதிவு செய்துள்ளேன்.)   நீடித்த போர்    பெண்களை  விதவைகளாக்கும் -  குழந்தைகளை  பெற்றவர்களை இழந்த   அனாதைகளாக்கும்.   மக்களை  அகதிகளாக்கும்  என்பதை   நான் புரிந்துகொண்டேன்.    நீடித்த  போர்  தரப்போகும்  வெகுமதிகள்  அவைதான் என்பதை    தெரிந்துகொண்டேன்.
உள்நாட்டுப்போர்    நெருக்கடியை   காரணம்  காண்பித்து  இந்நாட்டில் அகதியாக   இணைவதற்கு  விண்ணப்பித்தபொழுது  எனக்குரிய தார்மீகக்கடமையையும்    உணர்ந்துகொண்டேன்.
பத்திரிகையாளன்,    படைப்பாளி  எப்பொழுதும்  பாதிக்கப்பட்ட  மக்கள் பக்கமே    நிற்கவேண்டும்.    பாதிக்கப்பட்ட  மக்கள்  பற்றி  கவிதை எழுதுவதைவிட  அம்மக்களுக்கு  பயன்தரக்கூடிய  பணியில்  ஈடுபடுவது மேலானது.    அவர்களின்  வாழ்வாதாரம்  முக்கியமானது.
ஏற்கனவே    சொன்னதுபோன்று  குழந்தைகள்  போரிலே   தமது  தந்தையரை இழந்திருந்தனர்.   சிலர்  காணாமல்  போய்விட்டனர்.  அக்குழந்தைகளின் கல்வி    வளர்ச்சிக்கு  உதவி,  அவர்களை  தூக்கிவிட்டால்  அவர்கள்  தமது குடும்பத்தை   தூக்கிவிடுவார்கள்.   அதனால்    நண்பர்கள்  சிலருடைய ஆதரவுடன்    இலங்கை  மாணவர்  கல்வி   நிதியத்தை   1988  இல் உருவாக்கினேன்.    அப்பொழுது  நான்  நிரந்தர  வதிவிட  உரிமையற்று  ஒரு அகதியாகத்தான்  இந்த  நாட்டில்  வாழ்ந்தேன்.   எனது  குழந்தைகளை அழைத்துப்பார்ப்பதற்கு   சுமார்  நான்கு  வருடங்கள்  ஏக்கத்துடன் காத்திருந்தேன்.    என்னைப்போன்று  பல  குடும்பத்தலைவர்கள்  தமது குடும்பத்திற்காக    காத்திருந்தார்கள்.
இங்கிருந்த   தமிழ்  அமைப்புகள்  தமிழ்  ஈழக்கனவுடன்  இயங்கின.  ஆனால்,  வந்த  அகதிகள்,   தமது  வதிவிட  உரிமை    பற்றிய  கனவுடன் வாழ்ந்தனர்.
அவர்களின்   நலன்களை  கவனிப்பதற்காக  உருவாக்கப்பட்டது  தமிழ் அகதிகள்  கழகம்.
இந்தக்கழகம்   இங்கு  வந்த  அகதிகளின்  நலன்  பற்றி  மாத்திரம் சிந்திக்காமல்   தமிழ்நாடு  மண்டபம்  முகாமில்  தங்கியிருந்த  ஈழத்தமிழ் அகதிகளுக்காக    உடைகள்  சேகரித்தும்  அனுப்பியது.   கல்வி  நிதியமும் அகதிகள்  கழகமும்  ஒரே  காலப்பகுதியில்  உருவாகி  சிறப்பாக  இயங்கின. ஆனால் -  எனக்கிருந்த  வேலைச்சுமைகளினால்  நான்  அகதிகள்  கழகத்தின்  பணிகளை    குறைத்து  கல்வி  நிதியப்பணிகளில்  மூழ்கினேன். இன்னமும்   இதிலிருந்து  வெளியே  வரவில்லை.   வரமுடியவில்லை.
அகதிகள்  கழகம்  பல  பயனுள்ள  பணிகளை   முன்னெடுத்தது.  ஆயினும் காலப்போக்கில்  அது  செயல்  இழந்தது.
கல்வி   நிதியத்தை  எனது  இரண்டாவது  சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு  விழாவை   மெல்பனில்  1989  ஆம்   ஆண்டு  நடத்தியபொழுது  அறிமுகப்படுத்தியதுடன்  நூல்  விற்பனையில்  கிடைத்த  பணத்தை நிதியத்திற்கே   வழங்கி  அதனை   வளர்த்தெடுத்தேன்.  அதனை  இன்று  பலர்    முன்மாதிரியாகக்கொண்டிருப்பதையும்  அவதானிக்கின்றேன்.
கல்வி  நிதியம்  நூற்றுக்கும்  மேற்பட்ட  உறுப்பினர்களுடன் பதிவுசெய்யப்பட்ட    தன்னார்வத்தொண்டு  நிறுவனமாக  27  ஆண்டுகாலமாக  தங்கு  தடையின்றி  இயங்கிவருகிறது.
இங்கிருந்த    தமிழ்ச்சங்கம்   தமிழ்  உணர்வோடு  இயங்கினாலும்  கலை, இலக்கியப் பிரக்ஞையற்றவர்களின்   கைகளில்தான்  தங்கியிருந்தது. அவர்கள்    எதனையும்  தமிழ்  ஈழக்கனவுடன்தான்  அணுகினார்கள்.  அது சார்ந்த   பேச்சாளர்களைத்தான்  அழைத்துப்  பேச வைத்தார்கள்.
எமது    தமிழ்க்குழந்தைகளுக்கு  ஏடு  துவக்கி  வித்தியாரம்பம்  செய்யும் நிகழ்ச்சிகளையும்    கலை,  இலக்கிய  விழாக்கள்,  நாவன்மைப்போட்டிகள் நடத்துவதற்கும்    ஒரு  களம்  தேவைப்பட்டது.
அதனால்    உருவானது  தமிழர்  ஒன்றியம்.   இந்த  அமைப்புத்தான் அவுஸ்திரேலியாவில்  முதல்  தடவையாக  கலை   விழாவையும்  பாரதி விழாவையும்    முத்தமிழ்  விழாவையும்  நாவன்மைப் போட்டிகளையும் நடத்தியது.    மெல்பனில்  கலை,  இலக்கியப்பிரக்ஞையை அறிமுகப்படுத்தியது.   ஆனால் -  அதன்பின்னர்  பலரும்  உதிரிகளாக செயல்படத்தொடங்கியதும்   அந்த  அமைப்பும்  செயல்  இழந்துபோனது.
சுமார்    ஐந்து  ஆண்டுகள்  நீடித்த   வெற்றிடத்தை    நிரப்புவதற்கு  காத்திருந்து,   இந்நாட்டில்  வாழும்  கலை,   இலக்கிய , ஊடகவியலாளர்களை    இணைத்து   கருத்துப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக   2001  ஆம்  ஆண்டு  ஜனவரி  மாதம்  அடுத்தடுத்து இரண்டு    நாட்கள்  தமிழ்  எழுத்தாளர்  விழாவை   ஏற்பாடு  செய்தேன்.
பலரும்   ஆர்வமுடன்  கலந்துகொண்டனர்.  சிட்னி,   கன்பராவிலிருந்தும் கலை,    இலக்கியவாதிகள்  வருகைதந்தனர்.  மல்லிகை  அவுஸ்திரேலியா சிறப்பு  மலரும் வெளியிட்டோம்.   இன்று  கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம்  இதழின்   ஆசிரியர்  டொக்டர்  ஞானசேகரனும்  அவரது மனைவியும்    வருகை   தந்தார்கள்.  அவருக்கும்  ஞானம்  என்ற இதழைத்தொடங்குவதற்கு  அவருக்கு  கிட்டிய   மெல்பன்  சந்திப்பு அனுபவங்களும்    தூண்டுகோலாக  இருந்திருக்கும்.   அவர்கள்  இருவரதும் நூல்களின்  வெளியீடும்  மெல்பனில்  நடந்திருக்கிறது.   அவர்  மெல்பன், சிட்னிகன்பரா  மாநில  எழுத்தாளர்  விழாக்களிலும்  கலந்துகொண்டார். ஞானம்  அவுஸ்திரேலியா   சிறப்பிதழும்  வெளியாகியிருக்கிறது. ஞானசேகரன்    அவுஸ்திரேலியா  பற்றிய  பயண  இலக்கிய  நூலும் எழுதியுள்ளார்.
இலக்கியம்   சார்ந்தும்  இலக்கியம்  சாராதும்  இரண்டு  தளங்களில் தொடர்ந்து  இயங்கிவருகின்றேன்.    அதற்குப்பக்கபலமாக  இருந்தவர்கள், இருப்பவர்களை    என்றென்றும்  நன்றியுடன் நினைவுகூர்ந்துகொண்டிருப்பேன்.
படைப்பாளி   தானும்  இயங்கி  மற்றவர்களையும்  இயங்கவைக்கவேண்டும். பதவிகளுக்காக    அமைப்புகள்  உருவாகக்கூடாது.   அமைப்புகளை இயங்கவைப்பதற்குத்தான்    நிருவாகத்திற்கு  பதவிகள்  தேவை.

10. எழுத்துத் துறையைப்  போல  பல  காலமாக  நீங்கள்  பயணித்துச் செல்லும்   இன்னொரு  அமைப்பு  இலங்கை    மாணவர்  கல்வி  நிதியம். இதைப் பற்றிக்  கொஞ்சம்  சொல்லுங்கள்.   இந்த  மா..நி அமைப்பினால்    எட்டப்பட்ட  சாதனைகள்  எவை..?  சந்தித்துக் கொண்ட சங்கடங்கள்    எவை?

முருகபூபதி :   கல்வி  நிதியம்  தொடங்கப்பட்டதன்  காரணத்தை இதற்குமுதல்   சொல்லிவிட்டேன்.   நிதியம்  தொடங்கப்பட்ட  காலத்தில் என்வசம்    பயணிப்பதற்கு  கார்  இருக்கவில்லை.    சனி,  ஞாயிறு  மற்றும் விடுமுறை  காலத்தில்  ஒரு  பேக்கையும்  தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிடுவேன்.    தமிழர்களின்  வீடுகளுக்குச் சென்று   நிதியத்தின் நோக்கம்  பற்றி  எடுத்துரைத்து  அன்பர்களை  திரட்டுவேன்.   பாதிக்கப்பட்ட மாணவர்களின்   விண்ணப்பங்கள்,  பெற்றவர்களின்  மரணச் சான்றிதழ்களை   காண்பித்தபொழுது, "  இலங்கையில்  விதானைமாருக்கு ஐம்பது   ரூபா  கொடுத்தால்  போலி  மரணச்சான்றிதழ்களும்  தருவார்கள் " எனவும்,    பாதிக்கப்பட்ட  குழந்தைகளின்  படங்களில்  அவர்களின்  கழுத்தில் - காதில்  மின்னினால்    வசதிபடைத்தவர்கள்  என்று  சொன்னவர்களும் எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில்    அய்ரோப்பா  மற்றும்  கனடா  அமெரிக்காவிலிருந்தும் அன்பர்கள்   உதவினார்கள்.
" தமிழ்  ஈழம்  விரைவில் அமையும்.   அப்பொழுது  இந்த  நிதியங்கள் அவசியமற்றது.    வீணாக  நேரத்தை  செலவிடுகின்றேன் "  என்று கடிதம் எழுதியவர்களும்  இருக்கிறார்கள்.   எனினும்  எமது  பணிகளை  அவதானித்த நல்லெண்ணம்   படைத்த  பல  அன்பர்கள்  தாமாக  முன்வந்து உதவினார்கள்.
சிட்னியில்    இயங்கிய  தமிழர்களுக்கான  மனித  உரிமை   அமைப்பு  25 ஆயிரம்    அவுஸ்திரேலியன் ($25,000-00)   வெள்ளிகளை  வழங்கியது.  அதனை   வங்கியில்   நிரந்தரவைப்பிலிட்டு  அதிலிருந்து  கிடைக்கப்பெறும் வட்டியிலிருந்தும்  உதவும்  அன்பர்கள்  கிடைக்காத  மாணவர்களுக்கு புலமைப்பரிசில்    வழங்கினோம்.    பின்னர்  எமது  நிதியமும் காலத்துக்காலம்  நிதி  சேகரித்து  தற்பொழுது  மொத்தமாக  35 ஆயிரம் ($35,000-00)   வெள்ளிகளை    நிரந்தர  வைப்பிலிட்டு  அதிலிருந்து கிடைக்கப்பெறும்    வட்டியையும்  மாணவர்களுக்காக  பயன்படுத்துகின்றோம்.
போர்  2009  ஆம்  ஆண்டு  முடிவுற்றதும்  பல   அன்பர்கள்  எமது  நிதியம் ஊடாக  உதவிபெறும்  மாணவர்களை   நேரில்  சென்று  பார்த்துவருகின்றனர்.
நானும்  வருடந்தோறும்  இலங்கையில்  வடக்கு -  கிழக்கு மாகாணங்களுக்குச்சென்று  உதவி  பெறும்  மாணவர்களை  நேருக்கு  நேர் சந்தித்து  தகவல்  அமர்வு -  ஒன்று கூடல்  நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றேன்.
வருடந்தோறும்  கல்வி  நிதியத்தின்  ஆண்டுப் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன.
ஆண்டறிக்கை -  நிதியறிக்கை  பரிசீலிக்கப்படுகின்றன.
இரண்டு   வருடங்களுக்கு  ஒருதடவை   புதிய  பரிபாலன  சபை தெரிவுசெய்யப்படுகிறது.   எவரும்  போட்டி  மனப்பான்மையுடன் பதவிகளுக்கு  வருவதில்லை.  1988  இல்  இந்த  நிதியத்தை  தொடக்கினேன். கடந்த  2014  ஆம்   ஆண்டு  நிதியத்தின்  வெள்ளி விழாவையும் நடத்தினோம்.   ஆனால்,  இதுவரையில்  நான்  இந்த  அமைப்பின் தலைவராகவில்லை.    தொடர்ந்தும்  ஒரு  தொண்டனாகவே இயங்குகின்றேன்.
இதுவரையில்   ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்கள்  இந்நிதியத்தினால் பயனடைந்துள்ளனர்.    பலர்  பல்கலைக்கழகம்  சென்று பட்டதாரிகளாகியுள்ளனர்.    தனியார்  துறைகளில்  அரச  பணிகளில் வேலைவாய்ப்பு    பெற்றுள்ளனர்.   பாடசாலை  அதிபர்களாக  ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.   வெளிநாடுகளுக்கு  சென்றனர்.   ஒரு  மாணவி தற்பொழுது    பிரதிக்கல்விப்பணிப்பாளர்.  ஒரு  மாணவன்  தற்பொழுது வெளிநாட்டு   தூதரகம்  ஒன்றில்  செயலாளர்.  மற்றும்  ஒரு  மாணவர் இலங்கையில் World Vision  இல்  பணியாற்றுகிறார்.  இப்படி  பல  நல்ல செய்திகள்.    கடந்த  ஆண்டு  இறுதியில்  கிழக்கு  பல்கலைக்கழகத்தில் பயின்ற   எமது  நிதியத்தின்  உதவிபெற்ற  இருபது  மாணவர்கள் பட்டதாரிகளாகியுள்ளனர்.    அவர்களை  கடந்த  பெப்ரவரியில்  நேரில் சந்தித்து  பிரியாவிடை   நிகழ்ச்சியையும்  நடத்திவிட்டுத்தான்  திரும்பினேன்.
இதுஇவ்விதமிருக்க  2009   மே   மாதம்  போர்  முடிவுற்ற  நிலையில்  அகதி முகாமிலிருந்து   வவுனியா   பல்கலைக்கழகத்திற்கு  தெரிவான  பத்து மாணவர்களுக்கு  உதவியதுடன்  அவர்களின்  போக்குவரத்துக்காக துவிச்சக்கர  வண்டிகள்  வழங்கினோம்.   இம்மாணவர்களும்  தமது பல்கலைக்கழக  பயற்சி நெறியை   முடித்து  பட்டதாரிகளாகிவிட்டனர். அத்துடன்  350  இற்கும்  மேற்பட்ட  முன்னாள்  போராளி  மாணவர்களை புனர்வாழ்வு    முகாம்களிலிருந்து  விடுவித்து,  அவர்களுக்கும்  கல்வி வழங்கி  பெற்றோர்களுடன்  இணைத்துவிட்டோம்.   இந்தப்பணியில்  நாம் ஈடுபட்டு   ஆக்கபூர்வமாக  செயல்படுவதற்கு  நண்பர்  டொக்டர்  நடேசன் முக்கிய  காரணம்.   அவரது  தூண்டுதலினால்தான்    நிதியம் இந்தப்பணியிலும்    ஈடுபட்டது.
2004  ஆம்  ஆண்டு  இறுதியில்  சுனாமி  கடற்கோள்  அனர்த்தத்தின்  பின்னர்   இரண்டு  பெரிய  கொள்கலன்களில்  உடைகள்,   பாய்கள்,  உலர் உணவுகள்   சேகரித்துக்கொண்டு  இலங்கை  சென்று  வன்னிக்கும் கிழக்கிலங்கைக்கும்   விநியோகித்தோம்.   சுனாமியில்  பெரிதும் பாதிக்கப்பட்ட    கிழக்கு  பல்கலைக்கழக  மாணவர்கள்  பலருக்கு புலமைப்பரிசில்  வழங்கி  அவர்களையும்  பட்டதாரிகளாக்கிவிட்டோம்.
நிதியத்தின்  தோற்றம்  வளர்ச்சி  பயன்பாடு  பற்றிய  விரிவான  நீண்ட கட்டுரையை  கடந்த  2014  ஆம்   ஆண்டு   நடந்த  நிதியத்தின் வெள்ளிவிழாவின்பொழுது   எழுதியிருக்கின்றேன்.
அத்துடன்    எங்கோ   யாரோ   யாருக்காகவோ   என்ற   சிறுகதையையும் முன்னாள்   போராளி   மாணவர்கள்  பற்றியும்  போரில்   பாதிக்கப்பட்ட மாணவர்கள்   பற்றியும்  எழுதியுள்ளேன்.   அச்சிறுகதை   சிங்கள மொழியிலும்   வெளியாகியுள்ளது.

11.         அவுஸ்திரேலியாவில்  உதயம்என்ற  இருமொழி  மாதப்  பத்திரிகை பல  வருடங்களாக  வெளிவந்து,  இலங்கையில்  நடந்த  இறுதி  யுத்தத்தின் பின்னர்  நின்று  போய் விட்டது.  உதயம்ஒரு  புலி  எதிர்ப்புப்  பத்திரிகை. நீங்கள்  துணை   ஆசிரியராக  இலக்கியப்  பிரிவுக்கும்  பொறுப்பாக இருந்தீர்கள்.    டாக்டர்  நடேசன்  தீவிர புலி  எதிர்ப்பாளர்.   அப்படி  புலி எதிர்ப்பாளராக  மாறுவதற்கு  அவருக்கு  ஒரு  காரணம்  இருந்தது. புலிகளால்  எந்தவொரு  பாதிப்பிற்கும்  ஆளாகாத  நீங்கள்  ஏன்  அவருடன் இணைந்து  செயற்பட்டீர்கள்...?

முருகபூபதி :   இந்தக்கேள்வியும்    விநோதமானது.   இக்கேள்வியின்  தொனி நீங்கள்    புலிகளின்  ஆதரவாளர்  என  அர்த்தப்படுகிறதே.   உங்கள் பார்வையில்  உதயம்  பத்திரிகை  ஒரு  புலி  எதிர்ப்பு  ஊடகமாக  இருந்தால் அதில்  நீங்கள்  ஏன்  சுருதி   என்ற    பெயரில்  எழுதினீர்கள்...?-   என்று  நான் பதில்   கேள்வி  கேட்க முடியும்.
உதயம்  உருவானதன்  பின்னணி  பற்றி  நான்  சற்று விளக்கவேண்டியிருக்கிறது.
1996   இற்கு  முன்னர்  1987  இற்குப்பின்னர்   சுமார்  ஒன்பது ஆண்டுகாலத்தில்  மெல்பனிலிருந்து  வெளிவந்த  இதழ்கள்:   மக்கள்  குரல் (கையெழுத்து  இதழ்)    மரபு,    அக்கினிக்குஞ்சு.   இரு மொழிப்பத்திரிகை தமிழ் உலகம்   (Tamil World)  ஆனால் -  அவை  காலப்போக்கில் நின்றுவிட்டன.    இணையத்தளங்களும்  இல்லாதிருந்த  அக்காலப்பகுதியில் ஏற்பட்ட    வெற்றிடத்தை   எவ்வாறு  நிரப்பலாம்...?  அவுஸ்திரேலியாவில் தமிழ்   இதழின்  அவசியம்  குறித்து  விரிவான  ஆலோசனைக்கூட்டம் மெல்பன்  மொனாஷ்  பல்கலைக்கழகத்தில்  நடந்தது.   நண்பர்  மாவை நித்தியானந்தன்   நெறிப்படுத்தலில்  நண்பர்  நடேசனின்  ஏற்பாட்டில் நடந்த    அந்தக்கூட்டத்தில்  ஏற்கனவே   மெல்பனில்  தமிழ்  இதழ்கள், பத்திரிகை    நடத்தி  கைவிட்டவர்களும்  தமிழ்  கற்பிக்கின்ற  ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்,    கலைஞர்கள்,  புத்திஜீவிகளும்  கலந்துகொண்டு  நீண்ட நேரம்   கலந்துரையாடி  ஆலோசித்தனர்.
பின்னர்  Tamil News Pty Ltd   என்னும்  பெயரில்  நண்பர்  நடேசன்  ஒரு கம்பனியை    பதிவுசெய்தார்.   அதில்  பலர்  பங்குப்பணம்  செலுத்தி இணைந்தனர்.
அவ்வாறு    பங்குப்பணம்  செலுத்துவதாக  முதலில்  வாக்குறுதி  வழங்கிய சிலர்  சொன்னவாறு  வழங்கவில்லை.   எனினும்  சிலரது  உதவியுடன் உதயம்   மாத   இதழ்  வெளியானது.   அதுவரையில்  நடேசன்  எதுவும் எழுதியதில்லை.   ஆனால்,  அவர்  தீவிர  வாசகர்.   தமிழ்,  ஆங்கில  நூல்களை    படித்துக்கொண்டிருந்தவர்.   தானும்  எழுதிப்பார்ப்போம்  என்ற எண்ணத்துடன்  அவர்  எழுதிய  முதல்  கட்டுரைதான்  நடுக்காட்டில்  பிரேத  பரிசோதனை.   காட்டில்  யானைத் தந்தத்திற்காக  சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட  ஒரு  யானைக்காக  நடந்த  விசாரணையில் - இலங்கை  பதவியாவில்  மிருக  வைத்தியராக  பணியாற்றியபொழுது பெற்ற  தொழில்  சார்ந்த  அனுபவங்கள்  பற்றி  அவர்  எழுதிய  முதல் ஆக்கம்.
நடேசனுக்கு   உதயம்  இதழ்  தமிழில்  எழுத்துப்பயிற்சியை  வழங்கியது. உதயம்  இதழில்  புலிகள்  நடத்தும்  மாவீரர்  நிகழ்ச்சி  சம்பந்தமான செய்திகளும்  படங்களுடன்  வந்திருக்கின்றன.   புலிகளின்  வீரதீரச்செயல்கள்  பற்றிய  செய்திகளும்  வந்துள்ளன.   புலிகளின் செயல்களை    விமர்சிக்கும்  எழுத்துக்களும்  வந்துள்ளன.
என்னைப்பற்றிய   நேர்காணலில்  மற்றும்  ஒருவர் பற்றி  அவரது  பெயர் குறிப்பிட்டு  கேள்வியை  தாங்கள்  முன்வைப்பதனால்  நானும்  அவர்  பற்றி எழுத  நேர்ந்துள்ளது.
நடேசன்   பேராதனை   பல்கலைக்கழகத்தில்  பயிலும்  காலத்திலேயே அரசியல்   பணிகளிலும்  ஈடுபட்டவர்.
தமிழர்   விடுதலைக்கூட்டணி  ஒரு  தேர்தலில்  சிறுபான்மை  சமூகத்தின் பிரதிநிதியாக  உடுப்பிட்டி  தொகுதியில்  இராசலிங்கம்  அவர்களை நிறுத்தியபொழுது    அவருக்காக  மாத்திரம்  பிரசாரம்  செய்வதற்காக  தமது நண்பர்களை    அழைத்துக்கொண்டு  வடமராட்சிக்குச் சென்றவர்.
1983   வன்செயல்களின்  பின்னர்  தமிழகம்  சென்று  அங்கே இலங்கையிலிருந்து    அகதிகளாக  வந்த  எம்மவர்களுக்காக  மருத்துவ சிகிச்சை     முகாம்கள்  அமைத்து  பணியாற்றியவர்.  அவரது  மனைவி சியாமளாவும்  ஒரு  மருத்துவர்.    அங்கு  அச்சமயம்  முகாமிட்டிருந்த புலிகள்    இயக்கம்  உட்பட  அனைத்து  ஆயுதம்  ஏந்திய  இயக்கங்களுடனும் அவற்றின்   தலைவர்களுடனும்  இணைந்து   வேலை செய்தவர்.   ஆனால் எந்தவொரு   இயக்கத்திலும்  அங்கத்துவம்  பெறவும்  இல்லை - ஆயுதம்   ஏந்தி   களத்தில்  குதிக்கவும்  இல்லை.   முடிந்தவரையில்  இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த  முயன்று,  முடியாத  பட்சத்தில்  அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்.    நான்  மேலே  குறிப்பிட்ட  தமிழ்  அகதிகள்  கழகத்தை உருவாக்குவதிலும்   நடேசன்  முக்கிய  பங்காற்றினார்.
புலிகள்   எமது  தாயகத்திலும்  தமிழ்  நாட்டிலும்  இதர  இயக்கங்களை அழித்தனர்.   தமிழ்  தலைவர்களை  கொன்றனர்.  தமிழ்  மக்களின்  ஏகபோக சத்தி  தாமே  என்று  துப்பாக்கி  முனையில்  அச்சுறுத்தி  அடக்கினர். அத்தகைய  இயக்கம்,  பேரினவாத  அரசுகளின்  ஆயுத  முற்றுகைக்கு ஏட்டிக்குப்போட்டியாக  அப்பாவி  சிங்கள  முஸ்லிம்  மக்களையும் கொன்றனர்.    யாழ்ப்பாணத்தில்  கல்லூரி  அதிபர்கள்,  மருத்துவ  பேராசிரியர் ரஜனி   திராணகம  மற்றும்  பல்கலைக்கழக  மாணவர்கள்  விஜிதரன், விமலேஸ்வரன்   உட்பட  பல  பெறுமதியான  மனிதர்களையும்  செல்வி என்ற    இலக்கியப் படைப்பாளியையும்  ஈவிரக்கமின்றி  கொன்றனர். முஸ்லிம்   மக்களை  யாழ்ப்பாணத்திலிருந்து  24  மணி  நேர  அவகாசத்தில்  வெளியேற்றினர்.  கிழக்கில்  மசூதிகளில் தொழுதுகொண்டிருந்த  முஸ்லிம்களை  கொன்றழித்தனர்.  யாழ்ப்பாணம் கந்தன்கருணை   இல்லத்தில்  அறுபதிற்கும்   மேற்பட்ட  மாற்று இயக்கப்போராளிகளை  கொன்று    குவித்தனர்.
இவ்வளவும்  புலிகளின்  பாஸிசம்  அன்றி  வேறு   என்னவென்று சொல்லமுடியும்.
நல்லூரில்  சாத்வீகமான  முறையில்  உண்ணாவிரதம்  இருந்த தமிழ்த்தலைவர்களை   அச்சுறுத்தி  அவர்களின்  நோக்கத்தை  குழப்பினர். பல்கலைக்கழக  மாணவர்கள்  வெளிமாவட்ட  பல்கலைக்கழகத்திற்கு பாதுகாப்பு    காரணங்களுக்காக  செல்லமாட்டோம்  என்று  ஜே.ஆரின் அரசுக்கு   எதிராக  உண்ணாவிரதம்  இருந்தபொழுது  அவர்களை  இரவோடு இரவாக    கடத்திச்சென்று  தமிழ்நாட்டுக்கு  படகில்  ஏற்றி  அனுப்பினர். பின்னர்  அதில்  இருந்த  ஒரு  மாணவியையே   புலிகளின்  தலைவர் திருமணம்   செய்துகொண்டார்.
தற்கொலைப்போராளிகளை    உருவாக்கி  இளம்  தலைமுறையின் உடல்களை    சிதறடித்தவர்கள்.   கழுத்திலே  சயனைற்  குப்பிகளுடன்  இளம் தலைமுறையை  நடமாட  விட்டுவிட்டு  இறுதியில்  சரணாகதி  அடைந்து அழிந்த   வரலாறுதான்   புலிகளின்  சரித்திரம்.
இவ்வளவும்   புலிகளின்  வரலாற்றில்  சுருக்கமான  தகவல்களே.
மனித  நேயமும்  நோயுற்றவர்களுக்கு  சிகிச்சை அளிக்கும்  மனோபாவமும்   உள்ள  ஒருவர்  புலிகளை  விமர்சித்ததில்  எந்தத்தவறும் இல்லை.
அவர்    இப்படித்தான்  இருக்கவேண்டும்.  இப்படித்தான்  பேச  வேண்டும்...  எழுத  வேண்டும்... எனச்சொல்வதற்கு  எவருக்கும்  உரிமை  இல்லை.
உதயம்   பத்திரிகையில்  மாத்திரம்  நான்  ஆசிரியர்  குழுவில்  இருந்தவன் இல்லை.   இலங்கையில்  மக்கள்  விடுதலை   முன்னணியின் (JVP)  செஞ்சக்தி,    இலங்கை   ஆசிரியர்  சங்கத்தின்  ஆசிரியர் குரல்  மற்றும் வீரகேசரி    ஆசிரியர்  குழுவிலும்  இருந்துள்ளேன்.
எனது  உதவியை  உதயம்  கோரியபொழுது  நானும்  அதில்  இணைந்து நிறைய    எழுதினேன்.   வீரகேசரி  பத்திரிகையில்  பிரதம  ஆசிரியர்களாகவும் செய்தி    ஆசிரியர்களாகவும்  இருந்த  பலரதும்  அரசியல் கொள்கையிலிருந்து     நான்  வேறுபட்டிருந்தேன்.   அதுபோன்று  நடேசனின் அரசியல்   கருத்தியல்களிலிருந்தும்  நான்  வேறுபட்டவன்.
நான்   வீரகேசரியில்  பணியாற்றியதனால்  ஒரு  முற்போக்குவதி  எப்படி   முதலாளித்துவ  சக்திகளின்  பத்திரிகையில்  பணியாற்ற   முடியும்..? என்று ஒரு புலம்பெயர்ந்த  எழுத்தாளர்  முன்னர்  ஒருதடவை    தமது  கட்டுரையில் மொக்கையான     கேள்வி  எழுப்பியிருந்தார்.   அதுபோன்று  கைலாசபதி தினகரன்  ஆசிரியராக   இருந்தமையினால்,  ஒரு  சோஷலிஸவாதி  எப்படி ஏரிக்கரை  (Lake  House)  முதலாளி   வர்க்கப்பத்திரிகையில்  இணைந்தார் என்றும்    கேள்வி கேட்டவர்கள்  இருக்கிறார்கள்.   அதுபோலத்தான்  உங்கள் கேள்வியும்.
புலிகளினால்   பாதிக்கப்படாத  நான்  எவ்வாறு  ஒரு  புலி  எதிர்ப்பாளருடன் இணைய   முடிந்தது...?  எனக்கேட்கிறீர்கள்.
எனது   பிள்ளைக்கு  காய்ச்சல்  வந்தால்  எனக்கு  காய்ச்சல் வரவில்லைத்தானே   என்று  எனது  பிள்ளையை  நான்  கவனிக்காமல் இருக்கமுடியுமா...?
புலிகள்  இயக்கம்  மட்டுமல்ல  ஆயுதம்  ஏந்திய  அனைத்து  தீவிரவாத  தமிழ்    இயக்கங்களும்  1987 - 1989  காலப்பகுதியில்  தென்னிலங்கையில் ஆயுத   முனையில்  பல  கொலைகளைப் புரிந்த  மக்கள்  விடுதலை முன்னணியும்    விமர்சனத்திற்குரியவை.   மக்கள்  விடுதலை  முன்னணி 1983    இல்  தடைசெய்யப்பட்டபொழுது  அதன்  தலைவர்கள் தலைமறைவானார்கள்.    என்னையும்  தலைமறைவாகச் சொன்னார்கள். அந்தத்தலைமறைவு   அதிதீவிர  தாக்குதல்களுக்குத்தான்  வழிகோலும் என்பதனால்  நான்  அதற்கு  உடன்படவில்லை.   நாட்டை   விட்டே வெளியேற    நேர்ந்தது.  வீரகேசரியில்  பணியாற்றிய  காலத்திலேயே   இந்த ஆயுதம்   ஏந்திய  இயக்கங்களில்  எனக்கு  நம்பிக்கை  இருக்கவில்லை. இந்த   இயக்கங்கள்  தமிழ்  மக்களை  தற்கொலைப்பாதைக்குத்தான் .இட்டுச்செல்லும்  என்பது  எனது  தீர்க்கதரிசனம்.
அதேசமயம்   இலங்கையில்  மாறி  மாறி  பதவிக்கு  வந்த  ஐக்கிய  தேசியக்கட்சி,    ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி  ஆகியனவற்றையும் விமர்சித்து   வந்துள்ளேன்.    யாழ்ப்பாணம்  பொது நூலகம்  எரிக்கப்பட்டவுடன்   அங்குசென்று   பார்த்துவிட்டு  வந்து  கண்டனக்கூட்டங்களில் கலந்துகொண்டேன்.     1977    இல்  அரசியல்  கைதிகளை   விடுவிக்கும் போராட்டங்களில்   மனித  உரிமை   ஆர்வலர்களுடன்  இணைந்தேன். உதயம்   பத்திரிகை    இலங்கையில்  போர்  முடிவடைந்தமையால் நிறுத்தப்பட்டது  என்ற  தங்கள்  கருத்து  ஏற்புடையது  அல்ல.  இணைய இதழ்களின்  வருகை   அதிகரித்தது.   மக்களிடம்  வாசிக்கும்  பழக்கம் குறைந்தது.    அனைவரும்  கணினியில்  தரவிரக்கம்  செய்து  படிக்க பழக்கப்பட்டுவிட்டனர்.
இன்று    மெல்பனில்  உதயம்  பத்திரிகை  மட்டுமல்ல - அது  தொடங்கப்பட்டு வெளியானதன்  பின்னர்  வெளிவரத் தொடங்கிய  புலிகளின்  பத்திரிகை ஈழமுரசுவும்  நின்றுவிட்டதே.
அவுஸ்திரேலியாவில்   தமிழ்  இதழ்கள்  என்ற   எனது  நீண்ட  கட்டுரையை எனது   இலக்கிய மடல்  நூலில்  பார்க்கலாம்.
போர்   முடிந்து  ஆறுவருடங்கள்  கடந்துவிட்டன.   புலிகளினால் உருவாக்கப்பட்ட    தமிழ்த்தேசிய  கூட்டமைப்பும்  புலிகளை நிராகரித்துவிட்டது.    புலி   ஆதரவு - புலி  எதிர்ப்பு  என்று  மொக்கையாகவே தொடர்ந்தும்  சிந்திப்பதைவிடுத்து,    புலிகளினாலும்  ஆயுதப்படைகளினாலும்  பெரிதும்  பாதிக்கப்பட்ட  மக்களுக்கும்,  புலிகளை நம்பிச்சென்று    சிறைகளில்  வாடுபவர்களுக்கும் ,   முன்னாள்   போராளிகள், மாவீரர்    குடும்பங்களின்  வாழ்வாதாரத்துக்கும்  குரல்  கொடுப்பதும் அவர்களின்  நலன்களுக்கு  உதவுவதுமே  இன்று  முக்கியமானது எனக்கருதுகின்றேன்.

12. எல்லா இயக்கங்களும்தான் மாறி மாறி சுட்டுக் கொன்றொழித்தனர். எண்ணிக்கை வேண்டுமானால் இயக்கங்களுக்கு இயக்கம் வேறுபடலாம். நீங்கள் புலிகள் இயக்கம் கொன்றவர்களை மாத்திரம் பட்டியலிட்டுள்ளீர்கள். மற்ற இயக்கங்கள், அரசு செய்தவற்றை விட்டுவிட்டீர்கள்.
உண்மையான போர் என்பது ஒரு யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கின்றது என்று சொல்லுவார்கள். உங்கள் பதிலும் அதைத்தான் சொல்கின்றது. அந்த நிலையில் ‘உதயம்பத்திரிகையை நீங்கள் நிறுத்தியது சரியானதுதானா என்பதுதான் எனது கேள்வி?

முருகபூபதி:   நீங்கள்  புலிகளைப்பற்றித்தான்  கேட்டீர்கள். (அதாவது  புலி  ஆதரவு - எதிர்ப்பு  என்ற  தொனியிலிருந்து) அதனால்  புலிகள்  பற்றிச் சொல்ல  நேரிட்டது. என்னைப்பொறுத்தவரையில்   நீங்கள்   குறிப்பிடும்  நான் இலங்கையில்   அறிந்த  ஆயுதம்  ஏந்திய  அனைத்து இயக்கங்களுமே  ஒரே    குட்டையில்  ஊறிய  மட்டைகள்தான். நிரூபிப்பதற்கு  பெரிய  பட்டியல்    இருக்கிறதுஒரு   புத்தகமே எழுத   முடியும்.   அரசுகள்  செய்த  அநியாயங்கள்  பற்றியும் சொல்வதற்கு    நிறைய   இருக்கிறது.   அதற்குத்தனியாக  ஒரு நேர்காணலை   தொடருங்கள்.    பதில்  சொல்லத்தயார்இலக்கியவாதியை    பட்டியல்வாதியாக்கிவிடாதீர்கள்.


உதயம்    பத்திரிகையில்  ஊதியம்  இன்றி  நான் பணியாற்றினேன்.    ஆனால்,  அதனை   மூலதனமிட்டு நடத்தியவர்    நடேசன். அவரிடம்தான்   நீங்கள்  ஏன் நிறுத்தினீர்கள்...?  என்ற  கேள்வியை    கேட்டு  தெளிவு  பெறல் வேண்டும்.    போர்   முடிந்தபின்னர்  நாம்  மேற்கொண்ட  பணிகள் உங்களுக்கும்    தெரியும்மக்களின்  வாழ்வாதாரத்திற்கான  போர் இன்னமும்   தொடருகின்றது.   போர்  முடிவுக்கு  வந்த  பின்னர் வருடந்தோறும்   இலங்கை   சென்று   பாதிக்கப்பட்டவர்களை குறிப்பாக   குழந்தைகளை   விதவைத்தாய்மாரை பார்த்துவருகின்றேன்.    பல  பணிகளில்  ஈடுபடுகின்றேன். முன்னாள்  போராளி   குடும்பங்களையும்  சந்தித்தேன். என்னுடைய   சொல்ல  மறந்த  கதைகள்  நூலை   ஒரு  தடவை படியுங்கள்.    நான்  மட்டுமல்ல  பலரும் தன்னார்வத்தொண்டர்களாக   அங்கு  சென்று  இயங்குகின்றனர்.

இன்னும் வரும் ...

2 comments:

 1. இந்த நேர்காணல் பற்றி முகநூலில் வந்த சில கருத்துகள்:

  புதிய போக்கில் அமையும் நேர்காணல் ஆக்க இலக்கிய ஆர்வலன் நிரம்ப செய்திகளை அறிந்து கொள்ள உதவும் அதேவேளை இலக்கிய வரலாற்றை பதிவு செய்யும் பொக்கிசமாகவும் அமைகின்றது. தங்கள் முயற்சி வளர் பிறையாய் தொடர வாழ்த்துக்கள்.

  - கதிர்.பாலசுந்தரம் (July 10th 2016)


  இந் நேர்காணல் ஓர் கால பெட்டகம்,வாழ்த்துக்கள்
  - Nadarajah vijayentheran / U.K (july 10th 2016)


  A long interview ~ fully worth reading.
  - Sanmugam Muttulingam (july 23rd 2016)

  Very good interview. I was working with him at Veerakesari editorial desk. He is a very soft person and talented.
  - Balachandran Muthaiah / Toranto canada (23rd July 2016)

  ReplyDelete
 2. அருமையான நேர்காணல்
  தொடருங்கள்

  ReplyDelete