Monday, 8 August 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி - நினைவுகள் பதிவுகள்3. கேந்திர மையத்தில் யூனியன்
     
யூனியன் கல்லூரியின் புவியியல் அமைவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் யூனியன் அன்னை காந்தமையமாக ஆகர்சிக்கும் உன்னத பொலிவு பெற்றுள்ளாள். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை நெடுஞ்சாலையும், அச்சுவேலி - மூளாய் நெடுஞ் சாலையும் குறுக்கறுக்கும் சந்திப்பில் கல்லூரி உள்ளது. மாணவர்கள் பேரூந்தால் இறங்கி 50 மீற்றர்கூட நடக்கத் தேவையில்லை. அத்தோடு தெல்லிப்பழைப் புகையிரத நிலையம் 200 மீற்றருக்கு உட்பட்ட அமைவிலேயே உள்ளது. 20 மீற்றர் தொலைவில் தபாற் கந்தோர். சந்தியில் சகலவிதமான வர்த்தக நிலையங்களும் உள்ளன. பிரதேசச் செயலாளர் அலுவலகமும் சந்தி அருகே உள்ளது. அரசினர் ஆதார வைத்தியசாலை சுமார் 350 மீற்றர் தொலைவில் உள்ளது. இந்தப் புவியியல் அமைவு காரணமாகக் கல்லூரியை அண்டிய கிராம மாணவர்கள் மட்டுமல்லத் தொலைவில் இருந்து வரும் மாணவர்களும் யூனியன் கல்லூரியையே முதற் தெரிவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. புவியியல் அமைவு பெரிதும் வாய்க்கப் பெறாத - மகாஜனக் கல்லூரியையே முதற் தெரிவாக மேற்கொண்டனர். அது ஏன் என்ற விசாரணை என் மனதில் எழுந்து நின்றது.

      1978இல் ஒரே ஒரு புலமைப் பரிசில் பெற்ற மாணவனே அங்கு பயின்றார். அது வீமன்காமத்தைச் சேர்ந்த திரு. கந்தவனம் செல்லத்துரை அவர்களின் மகன் சுகுமாரே. வருடந்தோறும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் தேர்வு அரசினால் நடாத்தப்படும். அதில் யூனியன் கல்லூரி ஆரம்ப பிரிவில் கல்வி கற்றுச் சித்தியடைந்தவர்களே, கல்லூரியை விட்டு வெளியேறிவிடுவர். பெரும்பாலானவர்கள் மகாஜனக் கல்லூரிக்குச் செல்லும் வழமை காணப்பட்டது. வசதிபடைத்தவர்கள் யாழ் நகரில் உள்ள இந்துக் கல்லூரிக்கு அல்லது வேம்படி மகளிர் உயர்நிலைக் கல்லூரிக்குச் செல்வதே வழமையாக இருந்தது. அதனைப் பற்றி எவரும் அலட்டிக் கொண்டதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை.

     ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பெற்றவர்கள் மட்டுமல்ல, வட மாகாண ஆசிரியர் சங்கம் நடாத்திய எட்டாம் வகுப்பில் விசேடமாகச் சித்தி பெற்றவர்கள், சிரேட்ட பாடசாலைத் தராதரப்பரீட்சை, க.பொ.த. (சா.த) பரீட்சை என்பனவற்றில் விசேட சித்தி பெற்றவர்கள்கூட மகாஜனக் கல்லூரிக்குத் தாவிச் செல்லும் வழமையே காணப்பட்டது. அதாவது மகாஜனக் கல்லூரிக்கு மாணவர்களை வழங்கும் (feeding school) பாடசாலையாகவே யூனியன் காணப்பட்டது. சிலர் யாழ் நகரில் உள்ள இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரிகளுக்குச் சென்றதும் உண்டு. என்னிடம் யூனியன் கல்லூரியில் புவியில் பயின்ற, பேச்சுப் போட்டிக்குப் பயிற்சி பெற்ற மாவிட்டபுரத்தைச் சேர்ந்த டாக்டர் வதனியும் ஒருவர். அவர் இப்பொழுது லண்டனில் பணிபுரிகிறார். அவரோடுகூட உயர் வகுப்புக் கல்விக்காக வேம்படியை நாடிச் சென்ற இன்னொருவர், யூனியன் கல்லூரியில் பகுதித் தலைவராகவும், மாணவ முதல்வர்கள் பொறுப்பாளராகவும் இருந்த திரு. செல்லத்துரை சிவகுமாரன் அவர்களது இல்லத்தரசி நந்தாவாகும். இவர்கள் இப்பொழுது கனடாவில் வசிக்கிறார்கள். திரு. சிவகுமாரன் அவர்கள்கூட உயர் கல்விக்காக யாழ் இந்துக் கல்லூரியை நாடியவரே. வேம்படி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையை நாடிச் சென்ற இன்னொருவர், லண்டனில் குடியேறியுள்ள டாக்டர் (திருமதி) விஜயலக்சுமி பரமநாதனாகும். இவர், லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் பிரபல்யமான செயற்குழு உறுப்பினர். இவரும் எனது ஒரு நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும், பழைய மாணவர் சங்கத்தின் சுறுசுறுப்பான உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.ஜேசுபாலன் அவர்களுடைய அண்ணன் திரு.தயாநிதிகூட, யூனியனிலிருந்து  மகாஜனா சென்று, பொறியியல் படிப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டவரே. அவரை நான் புரூணையில் சந்தித்த பொழுது ‘பழைய கதை’ கூறினார். இன்னொருவர் யூனியனில் எனக்கு முன்னதாகப் பிரதி அதிபராகவிருந்த திரு.ஜே.ரி. தம்பிரத்தினம் அவர்களுடைய மகனாவார். அவர் இப்பொழுது கலிபோனியாவில் வசிக்கிறார். இப்படி எத்தனை எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தொலைவில் உள்ள நிறுவனம். புவியியல் அமைவு யூனியன் கல்லூரியைப் போலப் பெரிதாகச் சாதகமாக அமையாத கல்லூரி. மாணவர்கள் சாரி சாரியாக அவசர அவசரமாக, தெல்லிப்பழைச் சந்தியைக் கடந்து நடந்து விரைந்து செல்வதை அவதானித்தேன். இரண்டு பலசரக்குக் கடைகள் என வைத்துக் கொள்வோம். அவை ஒருமைல் இடைவெளியில். ஒன்றைக் கடந்து நடந்து சென்று அடுத்த பலசரக்குக் கடைக்குச் செல்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதே நிலைதான் யூனியன் கல்லூரிக்கும் இருந்தது.

ஒப்பிட்டுப் பேசுவதை யாரும் தவறாக வியாக்கியானம் செய்ய வேண்டாம். நிஜங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். வெற்றியின் மாய மந்திரம் எங்கே மறைந்திருக்கிறது என்று அறிய முயல்கிறேன்.

எனது மகள் டாக்டர் (திருமதி) கயல்விழி யுசீலானந்தன்கூட - யூனியனைக் கடந்து சென்று மகாஜனவில் எட்டாம் வகுப்புவரை படித்தவர்தான். மகளின் விடுகைப் பத்திரம் பெறப் போயிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த ஆசிரியர் திரு.விநாயகரத்தினம் அவர்களின் கண்களை எனது கையில் இருந்த ஒரு பத்திரம் கவர்ந்தது. வடமாகாண ஆசிரியர் சங்கம் நடாத்திய எட்டாம் வகுப்புப் பரீட்சையில் - புவியியல் பாடத்தில் - மகள் அதிவிசேட சித்தி (distinction) பெற்றமையே அவரைக் கவர்ந்திழுத்தது. உடன் அவர் “கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும்” என்று குறிப்பிட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது. எனக்குத் திரு.விநாயகரத்தினம் அவர்கள்மீது அலாதிப் பிரியம். காரணம் அவர் தனது ஆசிரியப் பணியை ஒரு சமூகசேவையாக அர்ப்பணிப்போடு எடுத்துச் சென்றமையே. தூய சேவை உள்ளம் நிறைந்த பெருமைக்குரிய ஆசிரியர். அவர் என்றும் நலமே வாழ வாழ்த்துகின்றேன்.

மகாஜனக் கல்லூரியைப் பற்றி எனக்கு மிகப் பெருமையான எண்ணம் உண்டு. மரியாதை யுண்டு. அதன் உயர்வுக்கு உழைத்த கனவான்களின் திறமையை நான் அலசிப்பார்த்தது உண்டு. அது கொடிகட்டிப் பறந்ததை யாராலும் மறைக்க முடியாது. புவியியல் அமைவு பெரிதாகப் பொருந்தாத பொழுதிலும், எப்படி அவர்களால் அப்படியான  எழுச்சியைக் காண முடிந்தது? அதன் சாதனைகளைக் கண்டு வியந்தேன். அற்புதமான முயற்சியின் எழுச்சி. என்றும் அந்தக் கல்லூரிக்கு எனது இதயத்தில் கௌரவமான தனியிடம் உண்டு. வாழ்க! வளர்க மகாஜனா!
         
எழும்பி ஓடிய முஸ்லிம் பிரமுகர்.

     இன்னும் ஓர் இதயத்தைப் பிழிந்த கதை. நான் பிரதி அதிபராகவிருந்த குறுகிய காலத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத கதை. 1978 - அம்பாறை மாவட்டத்தில் வங்காளக் கடற்கரை யோரம் அமைந்த நிந்தவூரிலிருந்து ஒரு முஸ்லிம் பிரமுகர் வந்து என் எதிரே உள்ள கதிரையில் அமர்ந்தார். அழுக்கு மண்டிய சுவர்களையுடைய பத்திக்குள்தான் எனது அலுவலகம். நான் எனக்குத் தெரிந்த சில நிந்தவூர் ஆசிரியர்களையும், பொத்துவில் பாராளுமன்ற முன்னைநாள் உறுப்பினர் ஜனாப் எம்.எம்.முஸ்தபாவையும் பற்றி விசாரித்தேன். ஜனாப் முஸ்தபா அவர்கள் முதன் முதலில் அரசியலில் இறங்கி, தமிழ் அரசுக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட (1956) - நானே கட்சிக்கு அறிமுகஞ் செய்து ‘ரிக்கற்’ பெற்றுக் கொடுத்திருந்தேன். அழகான இளைஞரான ஜனாப் முஸ்தபா அவர்களுடன் - பொத்துவில் வரையான தேர்தல் பிரசார வலத்தில் நான் மட்டுமே கூடவிருந்தேன். காரை ஓட்டியவர் ஒலுவிலைச் சேர்ந்த ஜனாப் அகமதுலெப்பை சீனித்துரை. தேர்தலில் கலந்து திருக்கோவிலில் உரை நிகழ்தியதற்காகக் கல்வி அமைச்சு நேரே தலையிட்டு விசாரணை நடாத்தியது. கல்வி அதிகாரி திரு.வீ.தர்மசங்கரி அவர்களை அதிரடி விசாரணைக்கு அனுப்பி யிருந்தது. அவரே பதிலை எழுதி என்னிடம் கையெழுத்தை மட்டும் வாங்கினார். அதனால் தப்பிக் கொண்டேன். அப்பொழுதே நான் அரசாங்க பாடசாலை ஆசிரியர். அந்தளவுக்கு எனக்கு அந்தப் பிரதேசம் பழக்கமாக இருந்தது. வந்தவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சொந்தக்காரர். நான் விசாரித்த சிலரும் சொந்தக்காரர். அவருக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. அவர் மிக்க மகிழ்ச்சியோடு மகனின் பெயர் விபரம் எல்லாம் தந்து விடுதிக்கும் சேர்த்துக் க.பொ.த. உயர்தரத்துக்கு அனுமதி பெற்றார்.

திடீரென அவர் கேட்டார்:

     “இது மகாஜனக் கல்லூரிதானே?”
     “இல்லை. இது யூனியன் கல்லூரி.”
     “நான் மகாஜனக் கல்லூரி என்று நினைத்துத்தான் இங்கு வந்தனான்.”
     “இப்பொழுது கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நீங்கள் இங்கேயே விடுதியில் சேர்க்கலாம். நான் கூடிய கவனம் எடுக்கிறேன்.”
     “நான் செப்பமாக விசாரித்துத்தான் வந்தனான். மன்னித்துக் கொள்ளுங்கள், ஐயா.”

         அவர் மனம் பதறியது. ஏதோ வழிதவறிப் பொறிக்கிடங்கில் விழுந்தவர் போல அவதியுற்றார். அவசர அவசரமாக இருக்கையை விட்டு எழுந்து, அழுவாரைப் போலக் கேட்டார்:

     “மகாஜனக் கல்லூரி எங்கே உள்ளது?”

     நான் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, கையை நீட்டி அவருக்கு அம்பனைக்குச் செல்லும் வீதியைக் காட்டினேன். அவர் தப்பினேன் பிழைத்தேன் என்று வளாக வீதியில் நாய் ஓட்டத்தில் போய்க் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தபடி நின்ற என் மனம் அழுதது. அந்த முஸ்லிம் பிரமுகரின் அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் என் இதயத்தில் ஆழமாக வேர்பாய்ச்சியது. கல்லூரி எதிர் நோக்கிய பிரச்சினைகளை மனவுறுதியோடு எதிர்கொள்ளத் தொடங்கினேன். வெற்றி வாய்ப்புண்டா இல்லையா என்ற மனவூசலாட்டம் இல்லாமல் உழைத்தேன். உழைப்பின்மீது அத்தனை அபரித நம்பி;கை வைத்திருந்தேன். அதனை யூனியன் கலைமகளின் அற்புதமான கேந்திர அமைவே தந்திருந்து.
                     
     இன்னும் வரும் ....

No comments:

Post a Comment