Saturday, 20 August 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

 

யூனியன் கல்லூரி - நினைவுகள் பதிவுகள்

4. புதிய மதிலின் காதல் ஓவியம்
                 
                       கற்றல்-கற்பித்தல், இணைப்பாடவிதானச் செயற் பாடுகளுக்கு இசைவில்லாத கல்லூரியின் பௌதிகவளச் சூழல், பூதாகாரமாகக் காட்சியளித்தது. அது மாணவர்-ஆசிரியர்களின் செயற்திறனைப் பாதிக்கக் கூடியதாக விருந்தது. அவ்வகையான ஜலம்கட்டிய புண்போன்ற பிரச்சினைகளுள் ஒன்றுதான் ‘இரண்டாவது விளையாட்டு மைதானம்’ சம்பந்தப்பட்டது.

       ஆண்களுக்கான மலசலகூடம் கல்லூரிப் பிரதான வளாகத்துக்கு வெளியே, மேற்கில் உள்ள ஒழுங்கையைக் கடந்து அமைந்த ‘இரண்டாவது விளையாட்டு மைதான’ ஓரத்தில் இருந்தது. அது பெருமனத்தோடு பொது ஜனங்களையும் தாராளமாக வரவேற்றது. அதற்குச் செல்வதற்கு ஒரு சிறிய படலை. அது போதாதென்று அருகே அமைந்த பெரிய இரட்டைக் ‘கேற்’ வஞ்சகமில்லாமல் எப்பொழுதும் ஓவென்று திறந்தபடியிருந்தது. அந்தச் சூழல் பாடசாலைக்குத் தலையிடியான ஒழுக்கப் பிரச்சினைகளைக் கொடுத்தது. அதற்கு உடனடியாக விடை காணவேண்டியிருந்தது.

      பின்பக்கக் ‘கேற்றைக்’ கல்லூரி ஆசிரியர் குழுவில் இருந்த ஒரு சிலர், செப்பமாகப் பயன் படுத்தினார்கள். யாழ்ப்பாணத்து வெயிலுக்கு ஒரு பொல்லாத அரக்க குணம். தொண்டையை வரட்டி தாகம் ஏற்படுத்தும். பனைகள் நிறைந்த புண்ணிய பூமியாகையால், பனம்பால்தான் தாக சாந்தியாகச் சிலருக்கு அமைந்தது. சில ஆசிரியர்கள் மூன்றாவது நாலாவது பாட வேளைகளில் பின்பக்கக் ‘கேற்’ வழியாக வெளியேறி, ஒழுங்கையில் வடக்கே சற்றுத் தொலைவு நடப்பார்கள். அங்கு விலையாகும் பனம்பாலை அருந்திவிட்டுத் திரும்புவார்கள். மெல்லிதாகப் பனம்பால் தன்வருகையைக் காற்றோடு கலந்து வந்து கீதமிசைக்கும். அதைப்பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை. ஒரு வேளை வகுப்பில் கத்திக் கத்திக் களைத்ததால் ‘பனம்பால்’ அருந்துகிறார்கள் என்று எண்ணி அமைதியடைந்தார்களோ என்னவோ? 

     ஆசிரியர்கள் மட்டுமல்ல, பிரதான வளாகத்தின் பின் ‘கேற்’ மாணவர்களும் திருகுதாளம் பண்ண வசதியாக இருந்தது. அது பிந்தி வரும் மாணவர்களின் நண்பனாகவும், பாடசாலையை அரைகுறையில் விட்டுக் ‘கம்பி நீட்டும்’ மாணவர்களது தோழனாகவும் இருந்தது. சில நாட்களில் பல மாணவர்கள் பாட நேரத்தில் வெளியேறியதும் உண்டு. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இடை நேரத்தில் வெளியே போய்வர வாய்ப்பாக இருந்தது.

     அதிபராகியதும் முதல் வேலையாக ஆண்களுக்குரிய மலசல கூடங்களைப் பிரதான வளாகத்துள் அமைத்தேன். அதற்கெல்லாம் அரசாங்கம் பணந் தந்து உதவவில்லை. உதவி பெறக்கூடிய வழி முறைகளும் இல்லை. தனிப்பட்டவர்கள், நலன்விரும்பிகளைப் பிடித்து வளாகத்தின் உள்ளே மலசலகூடத்தை அமைத்தேன். அத்தோடு பின் பக்கம் இருந்த சின்னப் படலையை நிரந்தரமாகப் பலகை அடித்து மூடினேன். பெரிய ‘கேற்றைக்’ கழற்றிவிட்டு மதில் கட்டுவித்தேன். 

     அந்தப் பிரச்சினை அதனோடு தீர்ந்தது. ஆனாலும் மூடியடைத்த அந்தக் ‘கேற்றுக்கு’ ஒரு கிளுகிளுப்பான காதல் கதையுண்டு. 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி மன்மதன் போன்ற இளைஞர் ஒருவர் - மதிலைத் தாவிக் கடந்து பாடசாலை வளாகத்துள் இரகசியமாக நுழைந்தார். பகல் பதினொரு மணியிருக்கும். ஏ.எல். வகுப்புப் பௌதிகவியல் பாடத் தவணைப் பரீட்சை, கிணற்றுக்கு வடக்கேயிருந்த மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தனது காதலியைக் கடத்திக் கொண்டு பறந்தவர், நிரந்தரமாக அடைத்த சின்னக் கேற்றை உதைத்து உடைத்துத் தள்ளி விழுத்தி விட்டு, அதனூடாகக் காதலியோடு மாயமாக மறைந்துவிட்டார். அவரும் அதன் முன்னர் எமது கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்தான். அந்த விடயம் பத்திரிகைகளில் வெளி வரவில்லை. வெளிவரக்கூடியதாக நடந்து கொள்ளவில்லை. ஆண்களும் பெண்களும் சரிசமனாக உள்ள கல்லூரி. மிக அவதானம் தேவைப்பட்டது. பொலிசிடம் போகவில்லை. ‘லொக்’ புத்தகத்தில் பதிவு செய்யவில்லை. அந்த நிகழ்வு சலசலப்பில்லாமல் மறைந்து போகப் பார்த்துக் கொண்டேன். காதலியைக் கல்லூரியில் கடத்;திக் கைபிடித்த மன்மதன், இப்பொழுது புனை பெயரில் எழுதுகின்றார். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் பிரபல்யமாகப் பேசப்படுகின்றார். அவரிடம் நிரம்ப விசயம் இருக்கிறது. சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க தம்பதிகள்.

          J
                         
இரண்டாவது பிரச்சினை தளபாடப் பற்றாக்குறை பற்றியது. மாணவர் நின்மதியாக அமர்ந்து படிக்கவேண்டும். இரு மாணவர்கள் ஒரு ஆசனத்தைப் பங்கிடுவது சாதாரண விடயமாகவிருந்தது. அவ்வாறிருந்து ஆசிரியர் பேசுவதை ஓரளவுக்கு அவதானிக்கலாம். இருவரும் எழுத முடியாது. அத்தோடு பிரதான மண்டபத்தில் உள்ள நீண்ட வாங்குகளும் வகுப்புகளில் பாவிக்கப்பட்டன. அந்த மண்டபத்தில் கூட்டம் ஏதும் இருப்பின் அவை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்படும். பூனை குட்டியைக் காவுவது போல மாணவர்கள் அவற்றைக் காவிச் செல்வது வகுப்புகளின் பரிதாப நிலையைக் காட்டியது. வாங்குகள் இல்லாத சமயங்களில் மாணவர் நின்ற நிலையில் படிக்க வேண்டியிருந்தது. அல்லது அவர்கள் வகுப்புகளுக்கு வெளியே அலைந்துகொண்டு திரிந்தார்கள்.


     அதேவேளை பின்னர் நூல்நிலையமாகப் பயன்படுத்திய பெரிய மண்டபம் நிறைந்த உடைந்த தளபாடங்கள் கூரை முட்டும் வரை வீசப்பட்டுக் கிடந்தன. தளபாடப் பதிவுப் புத்தகத்தில் வந்த தளபாடங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. சேதமான தளபாடங்கள் உரிய முறைகளைப் பின்பற்றி, பதிவிலிருந்து என்றுமே அகற்றப்படவில்லை. கல்வித் திணைக்களத்துக்கு அறிவித்து உடைந்த தளபாடங்களைப் பதிவு எண்ணிக்கையில் இருந்து கழித்தேன். அதே சமயம் ஒரு மரவேலைத் தொழிலாளியை இரு மாதங்கள் முழுவதும் நாளாந்த சம்பளத்துக்கு அமர்த்தி உடைந்த தளபாடங்களைப் பயன்படுத்தி, புதிய தளபாடங்கள் செய்யப்பட்டன. தளபாடப் பிரச்சினை இருந்தவிடம் தெரியாமல் மறைந்தது. தொழிலாளிக்கு வசதிக்கட்டணத்திலிருந்து சம்பளம் வழங்கப்பட்டது.

இன்னும் வரும் ...

No comments:

Post a Comment