Sunday, 15 December 2019

பாம்பும் ஏணியும் – சிறுகதை


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தேனீ) நடத்திய போடி மாலன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) - முதல் பரிசு பெற்ற  கதை.

சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.

’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்?


Friday, 13 December 2019

தொத்து வியாதிகள் - சிறுகதை




அருண்.விஜயராணி

இப்ப நான் உங்களை ஒஸ்ரேலியாவுக்கு கூப்பிட்டது, ஒவ்வொரு நாளும் மூட்டை மூட்டையாக எனக்கு புத்தி சொல்லவோ...?" 

"உந்தக் கண்றாவியளைக் காட்டத்தான் என்னைக் கூப்பிடுகிறாய் என்று தெரிந்திருந்தால் அங்கேயே நின்றிருப்பன்."
 

"பின்னப் பயந்து வாழ்ந்திட்டால் சரி... கொஞ்சம் தலையை நிமிர்த்திவிட்டால்...அது கண்றாவி அப்படித்தானே...?"
 

சுட்டுவிரலை முகத்துக்கு எதிரே நீட்டி புருவத்தை மேலே உயர்த்தி, நிமிர்ந்து நிற்கும் மகளை வியப்புடன் பார்த்தாள் அருளம்மா.
 

மகளா பேசுகிறாள்...? ஒஸ்ரேலியாவுக்கு வந்து எப்படி மாறிவிட்டாள். உடையில் பேச்சில், உறவாடுவதில்...?
 

"அம்மா... எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா... என்று கல்யாணம் முற்றாக்க முன்பு ஒருக்கால் அப்பாவைக் கேட்கச்சொல்லு அம்மா."
 

ஒரு காலத்தில் அப்பாவுக்குப்பயந்து பயந்து தாயின் சேலைத்தலைப்பால் தன் முகத்தை மூடிக்கொண்டு காதோரம் கிசு கிசுத்த சுபாஷினி, பயத்தைப்பற்றி இப்போது எப்படி எடுத்தெறிந்து பேசுகிறாள்.
 

Friday, 15 November 2019

பூசை – சிறுகதை



பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு கரையையும் பாடசாலைக்கு முன்னால் நின்றபடியே பார்க்கக்கூடியதாக இருக்கும். தினமும் அந்த தரிசனத்துடன் தான் எல்லா மாணவர்களும் பள்ளிக்குச் செல்வார்கள்.

கோபாலன் கோவிலுக்கு ஒரு கும்புடு போட்டுவிட்டு பாடசாலைக்குள் செல்கின்றான். நான்காம் வகுப்புப் படிக்கின்றான். நெற்றியிலே திருநீற்றுக் கீற்று, மத்தியிலே சந்தணப்போட்டு. பாடசாலைக்கென்று சீருடை எதுவும் இல்லை. மேலே கோடு போட்ட சட்டையும், அரைக்களிசானுமாக அவனின் கோலம். காலில் செருப்பு இல்லை.

பாடசாலை நேரங்களில் கோவில் மணி, பாடசாலை மணியின் ஓசையிலிருந்து வேறுபட்டுக் கிணுகிணுக்கும். விழாக்காலங்களில் பூசை நேரங்களில் ஏற்படும் ஆரவாரம், சங்கொலி, மணி ஓசை காதுக்கு இதமானவை.

“அடேய் கோபாலா… கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிய வேளையில் பூசை முடிய அன்னதானம் கொடுக்கின்றார்கள்” நாகநாதன் அவன் காதிற்குள் முணுமுணுத்தான்.

Saturday, 2 November 2019

மாலை – குறும்கதை



மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப் புறப்பட்டான்.

ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த திசை நோக்கி ஆனந்தனும் மல்லிகாவும் நடந்தார்கள்

”அம்மா… ஒரு முழம் பூ வாங்கிக்கோம்மா… உங்களுக்கு நல்ல அழகாக இருக்கும்” சொல்லிய திசை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா. பத்து வயது மதிக்கக்கூடிய சிறுபெண்.
அப்படியே உருக்கி வார்த்த அம்மன் விக்கிரகம் போல அழகாக இருந்தாள். மல்லிகாவின் மனம் ஏக்கம் கொண்டது. ஒரு பிள்ளைக்காக எத்தனை வருடங்கள் காத்திருக்கின்றாள். எத்தனை கோவில்கள் ஏறி இறங்கிவிட்டாள். தமக்கான குறையினை அம்மனிடம் முறையிட வந்தவர்களல்லவா அவர்கள்.

Friday, 18 October 2019

குரு அரவிந்தனின் `சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல்



(ஆனந்தவிகடனில் பல சிறுகதைகளை எழுதியவரும், ஆனந்தவிகடன் பவளவிழா சிறப்பிதழில் பரிசுபெற்ற ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ என்ற குறுநாவலைத் தந்தவருமான குரு அரவிந்தனின் சமீபத்திய நாவல் `சொல்லடி உன் மனம் கல்லோடி’. இவரின் ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ நாவலுக்கு தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர், ஓவியங்கள் வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.)

குரு அரவிந்தனின் `சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல் வாசித்தேன். மணிமேகலைப் பிரசுரமாக இந்த ஆண்டு (2019) வெளிவந்த இந்த நாவலை வாசிக்கும் தோறும் பாரதியின் `நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற கவிதை வரிகள் தான் நினைவிற்கு வந்து போயின.

மெல்ல மெல்ல வாசகரை உள் இழுக்கும் உத்தி, ஆரம்ப அத்தியாயங்களிலேயே தெரிகின்றது.

Thursday, 10 October 2019

சினிமாவிற்குப் போன கார்


“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த  ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது.

சாந்தன் சுற்றுலாப் பயணிகளை தனது காரில் சுற்றிக் காண்பிப்பவன். கிலோமீட்டருக்கு 15 ரூபாய்கள் வீதமும், ஒரு நாளைக்கு குறைந்தது நானூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்வீர்களாயின் – சாரதிக்கான உதவித்தொகை 300 ரூபாய்களும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். காருக்கான எரிபொருள், மற்றும் அவனுக்கான சாப்பாடு தங்குமிட வசதிகளை அவனே பார்த்துக் கொள்வான். சராசரியாக நாளொன்றிற்கு 5000 ரூபாய்கள் உழைப்பான்

“சார்… இந்தத் திரைப்படம் மூலம் நீங்கள் பேரும் புகழும் அடைந்துவிடுவீர்கள். கிலோமீட்டருக்கு உங்களுக்கு நாங்கள் 50 ரூபாய்கள் வீதம் தருவோம். சாப்பாடு இலவசம். என்ன சொல்கின்றீர்கள்?”

Tuesday, 1 October 2019

பன்முக எழுத்தாளர் தேவகி கருணாகரன்


ஞானம் சஞ்சிகை - அட்டைப்பட அதிதி

பெண் எழுத்தாளர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் எழுதுபவர்கள் மிகக் குறைவு. அத்தகைய பாண்டித்தியம் பெற்றவர் தேவகி கருணாகரன். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். சுண்டிக்குழி மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வி பயின்றவர். தந்தையாரின் தொழில் நிமித்தம் இலங்கையின் பல்வேறு பாகங்களில் வாழ்ந்திருக்கின்றார். அதனால் சிங்களமொழியிலும் ஓரளவிற்குப் பரிச்சயமானவர். தற்போது அவுஸ்திரேலியா - சிட்னியில் வாழ்ந்து வருகின்றார்.

இவரது கணவர் டாக்டர் கருணாகரனின் பணி நிமிர்த்தம் முதலில் நைஜீரியாவிற்கு 1981 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். அங்கே இவர் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்போது 35 வருடங்கள் ஆகிவிட்டன. இவரது கணவர் அவுஸ்திரேலியாவில் Oral & Maxillo Facial Surgery என்கின்ற பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காலங்களில், இவர் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு இலாகாவில் பணிபுரிந்தார். 15 வருடங்கள் உழைப்பின் பின்னர் தற்போது ஓய்வு நிலையில் இருக்கின்றார்.

Wednesday, 11 September 2019

கதைகளில் உத்திகள்


கதைகளில் உத்திகளைக் கொண்ட சிறுகதைத்தொகுப்புகள் என்று பார்க்கும்போது, எஸ்.பொ இன் `வீ’ தொகுப்பும், கதிர்.பாலசுந்தரத்தின் `அந்நிய விருந்தாளி’ தொகுப்பும் நினைவுக்கு வருகின்றன. மேலும் பல தொகுப்புகள் இருக்கலாம். இத்தொகுப்புகளில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உத்திகளைக் கொண்டு எழுதப்பட்டவை.

இந்தப் பதிவு கதிர்.பாலசுந்தரம் எழுதிய `அந்நிய விருந்தாளி’ பற்றியது. இத்தொகுப்பில் 1970களில் எழுதிய 8 கதைகளும், 1980களில் எழுதிய 2 கதைகளும் அடங்கியுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தவை. இதில் வரும் பத்துக் கதைகளும் பத்துவிதமான உத்திகளில் அமைந்திருப்பதைக் காணலாம்.

Monday, 2 September 2019

நேர்காணல் : எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் / சந்திப்பு : குரு அரவிந்தன்



குரு அரவிந்தன்: வணக்கம் கே. எஸ். சுதாகர்,

அவுஸ்ரேலியாவில் இருந்து கனடா வந்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஏதாவது இலக்கியச் சந்திப்புக்களை இங்கே ஏற்படுத்தி இருக்கிறீர்களா?



கே.எஸ்.சுதாகர் : நண்பர்கள் வ.ந.கிரிதரன், பாலமுரளி (கடல்புத்திரன்), எல்லாளன் ராஜசிங்கம், தேவகாந்தன் என்பவர்களை கிரிதரனின் முயற்சியால் சந்தித்தேன். மற்றும் மூத்த எழுத்தாளர் கதிர்.பாலசுந்தரம், `வெற்றிமணி’ ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (ஜேர்மனி), இன்று தங்களையும் சந்தித்திருக்கின்றேன். ரொறன்ரோவில் பலரும் இருந்ததனால், போக்குவரத்து காரணமாக பிறம்ரனில் தங்கியிருந்த என்னால் சந்திக்க முடியவில்லை. பலரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தும் முடியவில்லை. தொலைபேசி மூலம் நண்பர் அகில் நீண்ட நேரம் என்னுடன் உரையாடியிருந்தார்.


குரு அரவிந்தன்: அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள், இதழ்களின்; பெயர்களைக் குறிப்பிட முடியுமா?


கே.எஸ்.சுதாகர் : மெல்பேர்ணில் இருந்து `எதிரொலி’ என்ற பத்திரிகை, `அக்கினிக்குஞ்சு’ என்ற இணையமும் வெளிவருகின்றன. அதேபோல் சிட்னியில் இருந்து ‘உதயசூரியன்’, `தமிழ் ஓசை’, `தென்றல்’ என்ற சஞ்சிகைகளும், `தமிழ்முரசு’ என்ற இணையமும் வெளிவருகின்றன.

Sunday, 1 September 2019

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி - 2019



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - தேனி மாவட்டம் நடத்தும்

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி

Friday, 30 August 2019

கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி - 2019


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - அறம் கிளை நடத்தும்

கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி

Wednesday, 28 August 2019

வட இந்தியப் பயணம் (9)


 
9. 
மறுநாள் பயணத்தில், பஸ்சினில் இடமிருந்ததால் நாங்களும் பதிவு செய்து கொண்டோம். சுவாமி நாராயணன் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கம். இந்தப்பயணத்தில் ஹுமாயூன் மன்னரின் சமாதி (Humayun’s Tomb), தேசிய அருங்காட்சியகம் (National museum), காந்தி இல்லம்/காந்தி சமிதி (Birla House), சுவாமி நாராயணன் கோவில் (Akshar Dham Temple/Swaminarayan) என்பவை இடம்பெற்றிருந்தன.

Friday, 23 August 2019

வட இந்தியப் பயணம் (8)


8.

மீண்டும் பயணம் தொடர்ந்தது.

டெல்கியில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களாக இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டோம்.

இந்திராகாந்தியின் அதிகாரபூர்வ இருப்பிடமாக இருந்த இந்த இல்லம் தற்போது அவரது ஞாபகங்களைத் தாங்கி நிற்கும் மியூசியமாக உள்ளது. நேரு, இந்திராகாந்தியின் பல அரிய புகைப்படங்கள், இந்திராகாந்தி பாவித்த பொருட்கள், அவர் பாவித்த நூலகம் எனப் பலவற்றை அங்கே பார்க்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் அவரது மெய்ப்பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

 

Friday, 16 August 2019

வட இந்தியப் பயணம் (7)

 

7.

சனிக்கிழமை டெல்கி, புது டெல்கியில் அமைந்திருக்கும் இந்தியாவின் நுழைவாயில் (India Gate), தாமரைக்கோயில் (Lotus Temple), குதுப்மினார் (Qutab Minar), இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்கள், மகாத்மா காந்தி சமாதி (Raj Ghat), பாராளுமன்றம் (Parliament House), குடியரசுத்தலைவர் இல்லம் (Rashtrapati Bhawan), பிர்லா மந்திர் (Birla Mandir), செங்கோட்டை (Red Fort) என்பவற்றைப் பார்வையிட இருந்தோம்.

காலை 5 மணியளவில் எமது ஹோட்டலை அண்மித்து பெரிய ஆரவார ஒலி கேட்டது. அந்த வாத்தியங்களின் இன்னிசையுடன் துயில் கலைந்தது. வெளியே ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்தபோது, திருமணத்திற்கான ஏற்பாட்டுடன் ஒரு மணவாளன் தன் உற்றம் சுற்றம் புடைசூழ வாத்தியக்கருவிகள் முழங்க அழைத்துச் செல்லப் பட்டுக்கொண்டிருந்தார். மனிதர்களின் பின்னே சில நாய்களும் ஊர்வத்தில் கலந்து கொண்டிருந்தன. நல்லதொரு மங்களகரமான காட்சியுடன் அன்று விழித்தோம்.

Tuesday, 6 August 2019

வட இந்தியப் பயணம் (6)



6.

உண்மையைச் சொல்லப் போனால் தாஜ்மகாலைப் பார்த்தவுடன் என் மனதில் ஒரு சிறு ஏமாற்றம். இதுநாள் வரையிலும் நான் தாஜ்மகாலை சினிமாவிலும் புகைப்படமாகவும் தான் பார்த்திருந்தேன். நேரில் பார்க்கும்போது அதன் அழகில் சற்று மாறுதல் இருந்ததுதான் அதற்குக் காரணம். தாஜ்மகாலைச் சென்றடைந்தபோது நேரம் 3 மணியாகிவிட்டது. மாலை 5 இற்குள் திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அன்று ஏனோ தாஜ்மகால் மக்கள் கூட்டத்தினரால் நிரம்பி வழிந்தது. பல புகைப்பட விற்பன்னர்கள் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தார்கள். எமக்கென ஒதுக்கப்பட்டிருந்தவர் மூலம் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

Thursday, 1 August 2019

வட இந்தியப் பயணம் (5)



5.
ஆக்ரா கோட்டையில் (செங்கோட்டை) மொகலாயப்பேரரசர்கள் பாபர், ஹிமாயுன், அக்பர், ஜஹாங்கிர், சாஜகான், ஒளரங்கசீப் போன்றோர் வாழ்ந்தார்கள்.

இங்கேதான் சாஜஹான் இறக்கும் வரையும் (1666) தனது மகன் ஒளரங்கசீப் இனால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டிருந்தார். அங்கேயிருந்தபடியே தான் தனது காதல் மனைவிக்காகக் கட்டிய தாஜ்மகாலைப் பார்த்து கொண்டே இருந்து மரித்துப் போனார் சாஜஹான். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிட்டோம். அங்கிருந்தபடியே தூரத்தில் பனிப்புகார்களுக்கிடையே தெரியும் தாஜ்மகாலையும் பார்த்துக் கொண்டோம்.

Wednesday, 24 July 2019

வட இந்தியப் பயணம் (4)


4.
அடுத்தநாள் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு, 9.30 மணியளவில் ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri) என்னுமிடத்தை அடைந்தோம். ஜெய்ப்பூரைச் சுற்றிக்காட்டிய சுற்றுலா வழிகாட்டி அங்கேயே தங்கிவிட, புதியதொரு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இணைந்து கொண்டார். அவர் முன்னையவரைவிட வயதில் மூத்தவரும், நகைச்சுவை மிக்கவருமாக இருந்தார்.

சுற்றிலும் எங்கும் சூனியமாக இருந்தது. அங்கிருந்து ஏழேழு பேர்கள் போகக்கூடிய  வாகனங்கள் எங்களுக்காகக் காத்திருந்தன. அவற்றை `ஜீப்’ என்று அழைத்தார்கள். ஒவ்வொரு ஜீப்பிற்கான கட்டணத்தையும் ஏழு பேர்களும் பங்கிட்டுக் கொண்டோம். ஜீப் வருடம் பூராகப் பயணம் மேற்கொண்டு கிழண்டிப் போயிருந்தது. இருக்கையில் இருந்து சற்றே எழும்பி, மேலே தொங்கும் கம்பி ஒன்றைப் பற்றிக் கொண்டோம். ஜீப் வளைவுகள், சந்து பொந்துகளைத் தரிசித்தபடி மேல் நோக்கிக் கிழம்பியது. ஆக்ரா கோட்டையை அடைந்தோம்.  இடையில் மனிதக் குடியிருப்புகள், கடைகள் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவாறு இருந்தது. ஒரு ஜீப்பே போகமுடியாத பாதை இடைவெளியில் எப்படிக் கல், மண்ணைக் கொண்டு சென்று அங்கே கோட்டையை அமைத்தார்கள் என்பது வியப்புக்குரியதாக இருந்தது.

ஃபத்தேப்பூர் சிக்ரி உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கின்றது. ஜெய்ப்பூரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ தூரம். மன்னர் அக்பரால் கட்டப்பட்ட இம்மாநகரம் 1571 முதல்1585 வரை மொகலாயப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

“மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன் யார்?” என்று கேள்வியெழுப்பினார் சுற்றுலா வழிகாட்டி.

Friday, 19 July 2019

வட இந்தியப் பயணம் (3)


3.
ஆம்பேர் கோட்டை - ராஜா மான் சிங், மிர்ஷா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டது.  மூத்தா என்னும் ஏரிக்கரையின் மீது அமைந்திருக்கும் இந்தக் கோட்டை இந்து – மொகலாயர் பாரம்பரியங்களைப் பறைசாற்றுகின்றது. ஜெய்ப்பூர் நகரம் உருவாகுவதற்கு முன்பே இது கட்டப்பட்டுவிட்டது. இங்கே பல அரண்மனைகள், மண்டபங்கள், கோயில் என்பன உண்டு. இக் கோட்டையில் ஷீல் மகால், ஜெய்கர் கோட்டை, கணேஸ் போல் என்பவற்றைப் பார்த்தோம்.

Friday, 12 July 2019

வட இந்தியப் பயணம் (2)




2.
மறுநாள் புதன்கிழமை. ஜெய்ப்பூர், அக்ரா, மதுரா போவதற்காகப் புறப்பட்டோம். பனிக்கர்ஸ் ரவல்ஸ் அமைந்திருக்கும் இடத்திற்கு முன்பாக காலை ஆறு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். JAIPUR – FATEHPUR SIKIRI – AGRA- MATHURA  இவை அமைந்திருக்கும் பிரதேசத்தை தங்க முக்கோணம் (GOLDEN TRIANGLE) என அவர்கள் அழைக்கின்றார்கள். காலை 5.30 மணியளவில் ஹோட்டலில் இருந்து பொடி நடையாகப் புறப்பட்டோம். இரண்டொரு நாய்கள் படுத்திருந்தபடியே சோம்பலை முறித்துப் பார்த்தன. குரல் எழுப்புவதற்கான வலு இல்லை. ஒருவித மயக்க நிலையில் அவை இருந்தன. சில கேற்றுகள் இன்னமும் மூடப்பட்டிருந்தன. ஒருவாறு 15 நிமிடத்தில் பஸ் புறப்படுவதற்கான இடத்தை அடைந்துவிட்டோம்.


Friday, 5 July 2019

வட இந்தியப் பயணம் (1)


1.

பாங்கொக் / சுவர்ணபூமி எயாப்போட்டின் ஊடாக, மெல்பேர்ணில் இருந்து புறப்பட்ட பயணம், பதின்மூன்றரை நேரப் பறப்பின் பின்னர் டெல்கியை அடைந்தது. டெல்கி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் திரு.பிரதாப் சிங் எமக்காகக் காத்து நின்றார். `தாய்’ விமானத்தில் பயணம் செய்த களைப்பே தெரியவில்லை. நேரம் அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30.

நியூ டெல்கியில், கரோல் பா நகரில் அமைந்துள்ள Wood Castle  Hotel இல் தங்குவதற்கான ஏர்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தோம். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து சுற்றிப் பார்ப்பது எனத் திட்டமிட்டிருந்தோம். எயாப்போட்டில் ரக்‌ஷி ஓட்டுனர்களின் கெடுபிடிகளை ஏற்கனவே அறிந்திருந்ததனால், ஹோட்டல் மூலமாகவே ஒரு சாரதியை ஒழுங்கு செய்திருந்தோம். அவர் தான் திரு பிரதாப் சிங். மூன்று பேர்களுக்கு என ஹோட்டல் பதிவு செய்திருந்ததால், அவர்கள் மூன்று பேர்களின் பொதிகளைச் சுமந்து வருவதற்காக பெரியதொரு வாகனத்தை ஒழுங்கு செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் திரு பிரதாப் சிங்கின் காருக்குள் எல்லாப் பொதிகளையும் வைக்க முடியவில்லை. காரின் மேலே ஒரு பொதி உட்கார்ந்திருந்தது.
எயாப்போட்டில் எல்லாரும் வெள்ளைப் பேப்பர்களில் பெயரை எழுதித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவேளை, எமது வாகனச் சாரதியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திண்டாடினோம். ஒருவர் மாத்திரம் ‘பிங்’ நிறப் பேப்பரில் பெயரை எழுதியபடி தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். 

Monday, 1 July 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (10)


நள்ளிரவு 

அ.ந.கந்தசாமி
 

‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவதற்கா இவ்வளவு தூரம் சந்தோசப்படுகிறான் என்று எண்ணினேன் நான்.என்னுடன் பேசிய ‘அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினிமாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின்ஸ்ரீட்டும், பூந்தோட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒடுங்கிக்கொண்டேன். பழைய கிறீஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தாவுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்.

Monday, 24 June 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (9)


 

குருவின் சதி

தாழையடி சபாரத்தினம்

அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன்.

திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல; அழகன் என்பதையும் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவன் வேறு யாருமல்ல; பாண்டவர்களிலே வீமனுக்கு இளையவனான அர்ச்சுனன் தான்.

காட்டினூடே அவன் கண்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்தன. வேட்டையாடுவதில் அவ்வளவு அக்கறை அவனுக்கு. வேங்கையைக் கூட விரட்டியடிக்கும் நாயொன்று எஜமானுக்கு உதவியாக அங்குமிங்கும் ஓடி ஓடி மோப்பம் பிடித்துத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தது.

Sunday, 16 June 2019

வெற்றிமணியும், சக்தி அச்சகமும்



 
சிறு பிராயத்தில் நான் `சக்தி ’அச்சகத்திற்கு செல்வதுண்டு. அப்போது ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணத்திலும், பின்னர் சுண்ணாகம் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலும் சக்தி அச்சகம் இருந்தது. அச்சுக்கூடம் செல்லும்போது சிலவேளைகளில் சினிமாவும் பார்த்ததுண்டு. அச்சுக்கூடம் போனதும் முதலில் அங்கே என்னென்ன அப்போது அடிக்கின்றார்கள் என்று பார்த்துவிடுவேன். பின்னர் ஒரு கதிரையில் அமர்ந்து ஏற்கனவே அங்கு பிரசுரமாகிய புத்தகங்கள் துண்டுப்பிரசுரங்களைப் படிப்பேன்.

கோர்க்கப்படும் அச்சுக்களைக் பார்க்கும்போது, சில இடங்களில் சொற்களின் நடுவே ஃபிளாங்கான (ஒரு எழுத்தும் இல்லாத) அச்சுக்களைக் காணக்கூடியதாக இருக்கும். எழுத்துக்கூட்டி வாசித்து அந்த எழுத்துக்கள் எவை எனக் கண்டுபிடிப்பது ஒரு விளையாட்டாக இருக்கும். அந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

“அத்தான்… இது ஏன் எழுத்து இல்லாமல் ஃபிளாங்காக இருக்கு?”

Tuesday, 11 June 2019

சுவருக்கும் காதிருக்கும்!

பாபு குடும்பத்தினர் இந்த வருடம் ஈஸ்டர் விடுமுறையின் போது, மெல்பேர்ணில் உள்ள 'லேக் என்றன்ஸ்' (Lake Entrance) போய் வர விரும்பினார்கள். அப்படித் தொலைதூரம் போய் வரும் சந்தர்ப்பங்களில், தங்களது வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி மார்க்கிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.

மார்க், பாபுவின் வீட்டிற்கு இடப்புறமாக இருக்கும் ஒரு வெள்ளை இனத்தவர். வீட்டைச் சுற்றி இருக்கும் மனிதர்களில், அவருடன் மாத்திரமே பழகக் கூடியதாக இருக்கிறது. வலப்புறம் இருப்பவர்கள் இவர்களைக் காணும் தோறும் முகத்தை சிடுமூஞ்சித்தனமாக வைத்திருப்பார்கள். அவர்களை இன்னமும் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பின்வீட்டில் இருப்பவர்களைப் குறுக்கு மதிலை உயர்த்திவிட்டு குடியிருக்கின்றார்கள். வீதிக்கு எதிர்புறமாக ஒரு சீனக்குடும்பம் உள்ளது. அவர்கள் காணும்போது சிரிப்பார்கள். ஏறக்குறைய பாபுவின் குடும்பம் இந்த வீட்டிற்கு வந்து ஐந்து வருடங்களாகின்றன.

பாபுவிற்கு பள்ளிக்கூடம் போகும் வயதில் ஒரு மகளும் மகனும் இருக்கின்றார்கள். வீட்டைவிட்டு வெளியில் போகும் போது 'செக்கியூரிட்டி எலாமை'ப் போட்டுவிட்டுப் போவார்கள். திரும்பி வீட்டிற்கு வரும்போது அந்த 'எலாமை' தான்தான் நிற்பாட்டுவேன் என அவரது மகன் அடம் பிடிப்பான். காரினில் இருந்து இறங்கும்போதே 'சிக்ஸ் சிக்ஸ் நைன் ரூ' (six six nine two) என்று கத்திக் கொண்டே இறங்குவான். அவன் கத்துவதைப் பார்க்க பாபுவின் மனைவிக்குக் கோபம் வரும்.

Friday, 7 June 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (8)


ஒருபிடி சோறு

இரசிகமணி கனக.செந்திநாதன்

யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை.

இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்படித் தஞ்சமடைந்த பல பேருக்கும் அன்னமளிக்கும் புண்ணியத்தை பல ‘பணக்காரப் புள்ளிகளுக்கு’ நோய் கொடுப்பதனால் தீர்த்து வைத்தான்!

வெள்ளிக்கிழமை மடம். இந்த மடத்திற்கொரு கெளரவ ஸ்தானம் அந்தக் கோவிலில் உண்டு. எவர் அன்னதானம் பெரிதாக நடாத்தினாலும் அந்தப் பெருமையை அடைவது அந்த மடம்தான்.

Saturday, 1 June 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (7)


 



துறவு

சம்பந்தன்
 (திருஞானசம்பந்தன்)

அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.

இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.

எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.

Monday, 27 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (6)

 

நிலவிலே பேசுவோம்

என்.கே.ரகுநாதன்


மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள்.


அப்பொழுது மணி எட்டு இருக்கும். அவருக்கு பசி, அத்துடன் கூட்டத்திற் பேசியகளைப்பு வேறு.


சாப்பிட்டு முடித்ததும், அறுசுவையுண்டியின் ருசியில் நாவைத்திளைக்கவிட்டபடியே, உள்ளே இருந்த 'ஓர் குலம்' பத்திரிகையைக் கையில்எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். விறாந்தையின் மூலையொன்றில் கிடந்தசாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஜகஜ்ஜோதியாகப்பிரகாசித்துக்கொண்டிருந்த மின்விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப்படிக்கத் தொடங்கினார்.

ஒரு பத்திகூட வாசித்திருக்கமாட்டார். வெளியே வாசற்பக்கமாகச் சிலர் பேசுவதுகேட்டது. பத்திரிகையில் படித்திருந்த பார்வையைத் திருப்பி அங்கே நோக்கினார்.

Friday, 24 May 2019

விழுதல் என்பது எழுகையே (2)


தவம் அகதி முகாமை விட்டுபோய் மூன்றாம் நாள்---ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்திருந்தார். சீலனை தான் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். போகும் வழியில் மீண்டும் அம்மாவுடன் சீலன் கதைத்தான். அடுத்தமுறை ரெலிபோன் கதைக்க வரும்போது தங்கைச்சியையும் கூட்டி வரும்படி சொன்னான். கலாவின் மீதான காதல் தங்கைச்சிக்குத் தெரிந்தே இருந்தது. அம்மாவிற்குத் தெரிந்திருந்தால் எப்போதே கொன்று போட்டிருப்பார்.

தவம் இருக்கும் வீடு ஐந்து நிமிட பஸ் ஓட்டத்தில் இருந்தது. பஸ்சில் போய் வருவதற்கான வழிமுறைகளை தவம் சீலனுக்குக் கற்றுக் கொடுத்தார். கலாவைப்பற்றி சீலனிடம் எதுவும் பேசவில்லை. ஏதாவது தெரிந்தால் அவனாகவே சொல்லுவான் என்பது தவத்திற்குத் தெரியும்.

”எப்ப பாத்தாலும் ஒரே கேள்வி ஒரே பதில். சொல்லிச் சொல்லியே வாழ்க்கை சலிச்சுப் போச்சு. காம்ப் வாழ்க்கை கழிஞ்சதே பெரிய கண்டம் கழிஞ்சமாதிரி. இப்பதான் சுவிஸ் நீரோட்டத்திலை கலந்திருக்கிறன். றெஸ்ற்ரோறண்ட் ஒண்டிலை வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தூரம்தான். தூரத்தைப் பாத்தா ஒண்டும் செய்யேலாது. பத்து மணித்தியால வேலை” சொல்லிக் கொண்டே விசுக்கு விசுக்கென்று நடந்தார் தவம். பச்சைப் புல்வெளியையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே அவரின் பின்னால் விரைந்தான் சீலன்.

“வேலைக்குப் போன இடத்திலைதான் உன்னைப் போல ஒரு நண்பன் கிடைச்சான். சின்னப் பெடியன்தான். இப்ப அவன்ரை வீட்டிலைதான் இருக்கிறன். அவன்ரை அப்பாவும் தங்கைச்சியும் அங்கை கூட இருக்கினம்.”

Wednesday, 22 May 2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2018/19 முடிவுகள்:


பரிசு பெற்றவர்கள்


1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000
(சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை - 600092)

2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் - 30,000
(டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை)

3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு - தலா இலங்கை ரூபாய்கள் - 20,000

(ஒரு முழு நாவல்)
(இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு)

(உறவின் தேடல்)
(விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)

Tuesday, 21 May 2019

விழுதல் என்பது எழுகையே (1)

நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட சீலன் நேரம் போனது தெரியாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். இருட்டிவிட்டதால் பூங்காவில் இருந்தவர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

”என்ன தம்பி... பத்மகலாவைப் பார்க்கிலை தேடுகிறீரோ?” என்றபடியே தோளில் கை பதித்தார் தவம். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட தவம், சீலனின் கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டுகொண்டார். சாந்தியின் தற்கொலையை தவம் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சாந்தியைப் பற்றி சீலன் வாய் திறக்கவில்லை. சில சம்பவங்களை எப்பவும் மூடித்தான் வைக்கவேண்டும். உலையிலே மூடி கொதித்துக் கூத்தாடும்போது, மூடியைத் திறந்து ஆவியை வெளியேற்றிவிட்டு மீண்டும் மூடித்தானே வைக்கின்றோம்.

சீலனின் நினைவுகளைத் திசைதிருப்ப நினைத்தார் தவம்.

“அது ஏன் தமிழன்கள் தங்கட பெயரை இரண்டு இரண்டா வைச்சிருக்கிறான்கள்?” சீலனைப் பார்த்துக் கேட்டார் தவம். தவம் சொன்னது தன்னையும் பத்மகலாவையும்தான் என்பதை சீலன் புரிந்து கொண்டான். வலிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டே “உங்கடை முழுப்பேர் என்ன?” என்றான். “சொல்லமாட்டேனே!” என்றார் தவராசா என்ற தவம்.

Sunday, 12 May 2019

பிராண நிறக் கனவு – நூல் அறிமுகம்


அண்டனூர் சுரா எழுதிய `பிராண நிறக் கனவு’ சிறுகதைத்தொகுப்பு வாசித்தேன். பன்முகமேடை வெளியீடாக வந்திருக்கும் இச் சிறுகதைத்தொகுப்பிற்கு திரு லெ.முருகபூபதி அணிந்துரை வழங்கியுள்ளார். அனிதாவிற்கு சமர்ப்பணமாயிருக்கும் இத்தொகுதியின், ஒவ்வொரு கதைகளும் வாசகனுக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கின்றன.

மிடற்றுத்தாகம், பிராண நிறக் கனவு, தாழ்ச்சி மகள், ஆணிவேரும் சில சல்லிகளும் – இவை தொகுப்பில் அற்புதமான கதைகள்.

உண்மைச் சம்பவங்களின் -  பத்திரிகைகளில் நாம் வாசித்த உண்மைச் செய்திகளை சுவைபடச் சொல்லியிருக்கின்றார். மாமிசத்துண்டு, பிராண நிறக் கனவு, தீயடி அரவம், இரவும் இருட்டிற்று என்பவை அப்படித்தான் சொல்கின்றன.

Friday, 10 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (5)




கற்பு 

வரதர்

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.


''மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?'' என்று கேட்டார் ஐயர்.

''ஓமோம், ஆரப்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன் என்ன விசேஷம்?''

''கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை....''

''யார் எழுதியது?''

''எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.''

Sunday, 5 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (4)


 





பாற்கஞ்சி 

சி.வைத்திலிங்கம்
 

'ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி...' 

'சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.' 

'இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே'
 

'கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது' என்றுசொல்லி அழத் தொடங்கினான்.
 

'அப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா. வயல்லே கூழ் கொண்டு போகணும். என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஆம்... என் கண்ணோல்லியோ?'
 

'நிச்சயமாய்ச் சொல்றயாம்மா? நாளைக்கு பாற்கஞ்சி தருவாயா?'
 

Wednesday, 1 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (3)







தோணி

வ.அ.இராசரத்தினம்

கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு. 

எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்­ர் எடுப்பதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல்லாம் நானும் கூடப் போயிருக்கிறேன்.
 

Friday, 26 April 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (2)




வண்டிச்சவாரி

அ.செ.முருகானந்தன்

இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.