Thursday, 6 March 2025

`பறவைகள்’ நூல் அறிமுகம்


மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.

`பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன.

பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. `எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. `புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.

சிறுவர் சிறுகதைகளில் `கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

`மர்ம மாலை’ என்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது. கனடாவில் பிறந்து வளர்ந்த 18 சிறுவர்களுடன் நூல் ஆசிரியரும் சேர்ந்து தொடரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். மொத்தம் 20 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரின் முதல் - இறுதி அத்தியாயங்களை நூலின் ஆசிரியர் எழுத, ஒவ்வொரு சிறுவர்களும் அந்தத் தொடரை வாசிக்கத் தூண்டும் வகையில் மிக அழகாக எழுதியிருந்தார்கள். நூல் ஆசிரியர் அவர்களை வழிநடத்தி தானும் எழுதியிருப்பது சிறப்பு. இந்தத் தொடரின் இறுதி அத்தியாயமும், நடந்தவை அனைத்தும் கனவு என்று சொல்லவருவது ஏமாற்றமாக உள்ளது.

தொகுப்பில் இடம்பெறும் பெரும்பாலான கட்டுரைகள் ஏதோ ஒரு வகையில் பெண்கள் தொடர்பானவை. அவை விஞ்ஞானத்தில், சமூகத்தில், இலக்கியத்தில் என பெண்கள் அடைந்த முன்னேற்றம் பற்றிச் சொல்கின்றன. முதல் இரண்டு கட்டுரைகளும் விண்வெளி ஆய்வில் பெண்கள் வகிக்கும் பங்கினைச் சொல்கின்றன. அதிகரித்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவாகும் புதிய சொற்களுக்கு, மாற்றீடாக தமிழ்ச்சொற்களைக் கொண்டு வருவதில் உள்ள இடர்ப்பாடுகளை ஆராய்கின்றது `புதியன புகுதலும், பழையன கழிதலும்’ என்ற கட்டுரை. `சமாதானத்திற்கான நோபல் பரிசுபெற்ற பெண்கள்’ என்ற கட்டுரையில் நோபல்பரிசு சார்ந்த பல அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. `என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள் என்று சொன்னாலும், இதுவரை கிடைத்த 853 நோபல் பரிசுகளில் 43 நோபல் பரிசுகள் மட்டுமே பெண்களுக்குக் கிடைத்திருக்கின்றன’ என்ற தகவல் ஏக்கம் தருவதாகவே இருக்கின்றது. `திருக்குறளைத் திருத்த வேண்டும்’, `பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார்’ என்று சுபமங்களா இதழுக்கு நேர்காணல் வழங்கிய ராஜம் கிருஷ்ணன் பற்றிய கட்டுரை ஒன்றும் இதில் உள்ளது.

சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர், கனடாவில் வெளிவரும் தூறல் இதழின் சிறுவர் பகுதி ஆசிரியராக இருந்திருக்கின்றார். அதில் இவர் எழுதிய தலையங்கங்கள் சில புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. அவை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் படிக்கும் சிறார்களுக்கு உதவியாக பல தகவல்களையும் அறிவுரைகளையும் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. `இந்த உலகத்தை எங்கள் முன்னோர்கள் எங்களுக்குத் தந்துவிட்டுப் போகவில்லை, எங்கள் பிள்ளைகளிடம் இருந்துதான் நாங்கள் கடனாகப் பெற்றிருக்கின்றோம்’ என்று வட அமெரிக்கப் பழங்குடி மக்கள் குறிப்பிடுவதுபோல இந்தப் பூமிப்பந்தைக் கவனமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது எங்கள் கடமையாகும் என்கின்ற நூல் ஆசிரியர், அந்தக் கடமையில் இருந்தும் வழுவாதவராகவும் இருக்கின்றார்.

இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு முன்னேறும் காலம் வந்துவிட்டது. அப்படி தன்னை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டவர் மாலினி அரவிந்தன்.

இனிய நந்தவனம் பதிப்பகம்

ஆகஸ்டு 2021

விலை ரூ 150

Tuesday, 4 March 2025

வீமன்காமம் (இது ஒரு புருடாக்கதை) - கங்காருப் பாய்ச்சல்கள் (49)


பஞ்சபாண்டவர்கள் தமது வனவாச காலத்தில், ஒருமுறை எமது ஊரிற்கு வந்திருந்தார்கள். அப்போது அடிக்கடி வீமனைக் காணக் கிடைக்கவில்லையாம்.

வீமன் ஊரிலுள்ள கன்னிப்பெண்களையெல்லாம் கலைத்துக் கலைத்து வேட்டையாடத் தொடங்கிவிட்டானாம். அவ்வளவுக்கு அழகும், படு கவர்ச்சியும் கொண்டவர்கள் எமது ஊர்ப் பெண்கள். வீமன் கலைத்துக் கலைத்துக் காமம் கொண்டதனால் எமது ஊருக்கு `வீமன்காமம்’ என்ற பெயர் வருவதாயிற்று.

வீமனின் இம்சை தாங்காத பேரழகி காஞ்சனா, வீமனுக்கு தினமும் டிமிக்கிரி கொடுத்தவண்ணம் இருந்தாள். ஒருநாள் அவளைக் காணவில்லை. கோபம் கொண்ட வீமன் அவளைக் கவர்ந்து வர நாற்புறமும் படை அனுப்பினான்.

அப்போது ஊரின் கிழக்குப்புறம் பெரும் காடாக இருந்தது. அங்கே பெருவாரியாக மயில்கள் இருந்தன. அவை படையினரைத் தோகை விரித்து எதிர்கொண்டன. படையினர் அங்கிருந்த மயில்களை எல்லாம் தமது உணவுக்காக அப்பினார்கள். அதனால் அந்த இடம் மயிலப்பை என்பதாயிற்று.

வடக்கு தெற்குப் புறமாகச் சென்ற படையினர் எதிர்ப்பட்ட மனிதர்களை எல்லாம் கொத்தியும் வெட்டியும் சங்காரம் செய்தனர். மனிதர்கள் கொத்தி எரிக்கப்பட்ட இடம் `கொத்தியால் சுடலை’ எனவும், வெட்டிச் சரிக்கப்பட்ட இடம் – ஆளை வெட்டி – மருவி வந்து `அளவெட்டி’ எனவும் வழங்கப்படலாயிற்று.

எத்திசையிலும் காஞ்சனாவைத் தேடிக் காணக்கிடைக்காததால், சன்னதமாடிய வீமன் மேற்குப்புறமாக தானே படையுடன் கிழம்பினான். ஒரு இரவு முழுவதும் உறங்காமல் மல்லாக்கப்படுத்து (மல்லாக்கம் - மல்லாகம்) அரண்டு புரண்டான்.

காஞ்சனா ஒரு நடனமாது என்பதால், தினமும் அவள் தூக்கிய காலை எங்கே வைப்பாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

மறுநாள் கோபம் கொண்ட வீமன், கண் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். இடையில் எதிர்ப்பட்ட ஒரு ஊரில் இருந்த சாமியார் ஒருவர், `நீவிர் இதுவரை போகாத இடத்திற்கு போய் தேடிப் பாரும்’ என்று கர்வத்துடன் சொன்னார். `குட் பிளான்’ என்று சொன்ன வீமன் அங்கிருந்து ஒரு புதிய ஊருக்குச் சென்றான். சாமியார் இருந்த இடத்திற்கு `குப்பிளான்’ என்ற பெயர் அன்றுமுதல் வழங்கி வருவதாயிற்று. இடையில் ஒரு மூதாட்டி தான் அந்தப்பெண்ணைக் கண்டதாகவும், அவள் இருக்கும் அந்த `ஊர் அங்கினை’ இருக்கு என்று கைகளால் காட்டினாள். உடனே மூதாட்டி இருந்த இடம் ஊரங்குனை ஆயிற்று. சாமியாரும் மூதாட்டியும் சொன்ன திக்கில் சென்ற வீமன் காஞ்சனாவைக் கண்டுகொண்டான். ஊர் அதிரச் சிரித்த வீமன், `கட்டினால் உன்னைத்தான் கட்டுவனடி’ என்றானாம். `அடைந்தால் காஞ்சனாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று கர்ச்சித்த வீமன், அருகே நின்ற பெண் ஒருத்தியின் கழுத்திலிருந்த தாலையைப் பறித்து காஞ்சனாவின் கழுத்தில் கட்டியே விட்டானாம். கட்டுவன் கட்டுவன் என்று வீமன் கங்கணம் கட்டியதால் ஊரிற்கும் `கட்டுவன்’ என்று பெயர் வந்துவிட்டது.

Saturday, 1 March 2025

வென்வரிப்படங்கள் – கங்காருப் பாய்ச்சல்கள் (48)


எனது நண்பர்கள் சில வருடங்களாக `கோமா’ நிலையில் இருந்து விடுபட்டு, திடீர் திடீரென `WhatsApp’ குறூப்புகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். பாடசாலை, பல்கலைக்கழகம், இளைஞர் சங்கம் எனப் பலவகைப்பட்ட வகை மாதிரிகள். ஊருக்கென்றும் இருக்கின்றன. இத்தனை வருடங்களாக ஆரம்பிக்கப்படாத அமைப்புகள் இப்பொழுது எதற்காக? தாமதத்திற்கான காரணம் நாட்டுப் பிரச்சினைகளா அல்லது முதுமையின் கூக்குரலா?

ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாமல் இருந்தவர்கள் எல்லாம் இன்று இணைந்துவிட்டார்கள். ஒருவர் போடும் படங்களுக்கு/பதிவுகளுக்கு சிலர் மெளனம் சாதிக்கின்றார்கள். ஒருவரை இன்னொருவர் அழைத்து மற்றவர் பற்றிப் புறம் பேசுகின்றார்கள், அவர்கள்தம் குடும்பத்தைக் குலைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இப்பவும் இருக்கின்றார்கள். அப்போதிருந்த இயல்புகளுடன் தான் இப்போதும் இருக்கின்றார்கள். காலம் எந்தவித மாறுதல்களையும் இவர்களிடம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

உலகம் சுருங்கிவிட்டது என்கின்றார்கள். ஒருவர் `குட் மோணிங்’ என்கின்றார். மற்றவர் அதே நேரத்தில் `குட் நைற்’ சொல்கின்றார். நேர காலம் இல்லாமல் தொலைபேசி அழைப்புகள் விடுக்கின்றார்கள்.

ஒரு 50 பேர்கள் கொண்ட குறூப்பிற்குள்ளும் பிரிவுகள். குறூப்பிற்குள் குறூப்புகள். கணிதத்தில் படித்த வென்வரிப்படங்கள் போல.

இப்பொழுது நானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டேன். அது எத்தகையை ஐக்கியம் என்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும்தான் தெரியும்.



சமீபத்தில் நான் ஒன்றை அவதானித்தேன். அறுபது வயதைக் கடந்தவிட்ட என் நண்பர் ஒருவர், தமிழில் வாசிப்பதையோ எழுதுவதையோ விரும்பாதவர், வெறுப்பவர் – தனது நண்பனின் இழப்பிற்காக எழுதிய ஒரு உருக்கமான தமிழ் கடிதம் அது. புலம்பி அழுதிருந்தார். அவர் தன் குடும்ப உறவினர்களையும் உள் இழுத்து, குடும்ப உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்பின்போது அவர் எப்படி உதவி செய்திருந்தார் என்றெல்லாம் உருக்கமாக எழுதி, கடைசியில் தன்னைப்பற்றிய சுயவிம்பத்தையும் காட்டி எழுதியிருந்தார். எல்லா உதவிகளும் செய்த அந்த நண்பருடன், கடைசி காலங்களில் தான் தொடர்பில் இருக்கவில்லையாம்? எப்படி இருக்கின்றது இது? பழமொழிகள் சும்மாவா வந்தன?

தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும், தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்.

Thursday, 20 February 2025

நெஞ்சாங்கூட்டு நினைவுகள்! - எனக்குப் பிடித்த கதை



புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

நான் அறிந்த நாளிலிருந்தே நடுவிலம்மான் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும் அவரது சொந்தப் பெயர் மண்டலாய் என ஐந்தாம் வகுப்புப் படித்த போதே எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஒரு நாள் ஆறுமுகப்பாவின் கடைக்கு கூப்பன் எடுக்க அம்மாவுடன் அவவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சென்ற போது, “மண்டலாய் இப்போது மாடு மேய்க்க மாவில் பக்கம் வாறதில்லையோ?” என்று கூப்பனை வெட்டியவாறே அவர் கேட்க “நடுவிலம்மான் இப்ப கிளைப்பனையடிப் பக்கமாப் போறார் போலை” என அம்மா சொன்னபோதுதான் அவரது இயற்பெயரை நான் அறிந்துகொண்டேன்.

எங்களது நாச்சார வீட்டின் கடைசி அறையோடு தெற்குப் புறமாக ஒரு ஒத்தாப்பு இறக்கி அக்கொட்டிலிலேயே நடுவிலம்மான் வசித்து வந்தார். டச்சுக் காலத்து வாங்கில் ஒன்றில் முதுகுப்பாட்டிற்கு மாந்தோலும் கால்மாட்டிற்கு சாக்கும் விரித்து அதில்தான் கிடந்தெழும்புவார்.

ஒத்தாப்பு மூலையில் பிய்ந்து போன பழைய கதிரை ஒன்றின் மேல் பென்னாம்பெரிய சூட்கேஸ் ஒன்று வைத்திருப்பார். அதற்குப் பக்கத்தில் முண்டு கொடுத்துக்கொண்டு ஒரு ஸ்ரூல்’ பழி கிடக்கும். அவருக்குரிய ‘தேத்தண்ணி கோப்பியையோ’ அல்லது சோறு போட்ட வட்டிலையோ அதில்தான் வைக்க வேண்டும் என்பது ஐந்தாறு வருஷங்களுக்கு முந்தியே அவர் போட்ட உத்தரவாம். அம்மாதான் ஒருநாள் அவர் ஆறுமுகப்பாவின் கடையடிப் பக்கம் போன பின்பு பரமரகசியம் போல் எனக்குச் சொன்னா.

நடுவிலம்மானுக்கு இடது கால் ஏலாது. இழுத்திழுத்துத்தான் நடப்பார். சின்ன வயதில் சிங்கக் குட்டி மாதிரித் திரிந்தாராம். இடையில் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு கால் இப்படி சூம்பிப் போயிற்றாம். ஆனாலும், தேகத்தை வளைத்து பம்பரமாகத் தொழில்கள் செய்வார்.

ஒவ்வொரு நாளும் கருக்கலோடு எழுந்து அரிசியைக் கழுவி உரலில் போட்டால் போதும். நொடிப் பொழுதில் மாவாக்கி அம்மாவின் கையில் கொடுத்து விடுவார். அவர் அரிசி இடிக்கும் போது இடுப்பில் கை வைத்து நான் பார்த்துக் கொண்டு நிற்பேன். நெற்றியிலும் நெஞ்சிலும் வியர்வை வழிந்தோட மூசிமூசி இடிப்பார். பார்க்கப் பாவமாக இருக்கும். அம்மா, தான் இடிப்பதாகக் கேட்டாலும் உலக்கையை விட மாட்டார். “புட்டுக்கு உலையை வைச்சு மற்ற அலுவல்களைக் கெதியாப் பார். பொடியளுக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” என்பார். ஒவ்வொரு நாளும் விடியப்புறம் அவரது வேலை அதுவாகத்தான் இருக்கும்.

Tuesday, 18 February 2025

கோசலை - எனக்குப் பிடித்த கதை

 
ரஞ்சகுமார்


“குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே”

குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்….மாடுகள் கத்துதெல்லவே!”

குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தெரிந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ்சும் படிந்து பழுப்புநிறமாகத் தெரிந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.

“குலம்!….கொஞ்சம் வைக்கல்…..”

அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.

“நீயே இழுத்துப்போடேன்…எனக்கு ஒரே அலுப்பு”

அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித்தாள்.

சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேளைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான்.

எவ்வளவு அருமையான மகன்!

அவன் ஏன் அப்படிப் போனான்?

Saturday, 1 February 2025

`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்



இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் தற்போது வரட்சியான நிலையிலேயே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் எஸ்.பொன்னுத்துரை, சோ.பத்மநாதன், சி.சிவசேகரம், ரூபராஜ் தேவதாசன் போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ரிஷான் ஷெரீப், கெகிறாவ ஸுலைஹா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் ரிஷான் ஷெரீப் வேகவேகமாக பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றார். கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புகளில் ஒரு ஒளிக்கீற்றாக `கிழக்கினை எதிர்கொண்டு’ என்ற இந்தப் புத்தகம் விளங்குகின்றது. இதன் தலைப்புக் கூட சூழ்நிலைக்கேற்றவாறு அற்புதமாகவே தோன்றுகின்றது.

ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.

பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் மூலம், நமக்கு அவர்களைப்பற்றிய பின்னணியையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. கூடவே `மொழி மாறி வந்த பிரதிகளும் அவை பேசும் அரசியலின் பொதுமையும்’ என்ற தலைப்பில் மேமன்கவி அவர்களின் பின்னுரையும் இடம்பெற்றுள்ளது.

Tuesday, 28 January 2025

பொன்சாய் இலக்கியங்கள் – கங்காருப் பாய்ச்சல்கள் (47)

 

முகநூலில் என் கணக்கை ஆரம்பித்த நாள் முதல் அவதானித்து வரும் ஒரு விடயம் இது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் இரண்டு மூன்று பாடசாலைகளில் (சிலவேளைகளில் கூடவாகவும் இருக்கலாம்) படித்த மாணவர்களின் பள்ளிக்கூட வெறித்தனம் இது. அந்தப் பள்ளிக்கூடங்களில் படித்த எவராவது முகநூலில் `அ’ என்று எழுதும் முன்னே 500 லைக்குகள் போட்டு விடுவார்கள். சிலவேளைகளில் இது ஆயிரத்தையும் தாண்டிவிடும். எழுதியவரோ `அ’வுடன் நிறுத்திக் கொள்வார். அப்பாலே எழுத வேண்டும் என்ற எண்ணம் மறைந்துவிடும். அவர் அந்தப் புளகாங்கிதத்தில் மயங்கிக் கிடப்பார். மயக்கம் தெளிந்து பார்க்கும்போது மற்றவர்கள் உயிரெழுத்தை முடித்து மெய்யெழுத்துக்குப் போயிருப்பார்கள். அவரை முன்னேறவிடாமல் தடை போடுபவர்களே இந்த வெறித்தன ரசிகர்கள் தான். இது யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே பொருந்தும். இந்த உலகத்தில் வாழும் யாவரும் ஏதோ ஒரு பள்ளியில் படித்திருப்பார்கள்தானே என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை. தமிழைத் தம் பாடசாலைகளுக்குள்ளேயே குறுகத் தறித்து, `பொன்சாய்’ மரங்களாக்கி விடுகின்றார்கள் இவர்கள்.

Friday, 24 January 2025

இளமையில் கல்வி சிலையில் எழுத்து – கங்காருப் பாய்ச்சல்கள் (46)

 
பள்ளியில் படிக்கும்போது கட்டுரை, கவிதை, சிறுகதை எழுதச் சொல்லித் தருவார்கள். எழுதும்போது ஊக்கம் குடுத்து வரவேற்கவும் செய்தார்கள்.

வளர்ந்து பெரியவர்களானதும் தொடர்ந்தும் அவற்றை எழுதும்போது - ஏன் எழுதுகின்றீர்கள்? இன்னமும் எழுதுகின்றீர்களா? இப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன.

சிந்தித்துப் பார்த்தால், இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு பயம் தான் காரணம் என்பது தெரிய வருகின்றது. எங்கே தமது பொட்டுக்கேடுகளை எழுதிவிடுவாரோ என்ற ஒரு பயம்.

கொஞ்சம் கண்டித்து வைப்போம். குட்டுப் போட்டு வைப்போம் என சிந்திக்கின்றார்கள்.

நேர்மையாக வாழ்பவரை எவருக்குத்தான் பிடிக்கின்றது? அவர்களுக்கு முன்னேறிச் செல்பவர்களையும் பிடிப்பதில்லை, ஒருவருக்கு பல திறமைகள் இருப்பதையும் விரும்புவதில்லை.

என்னையும் மீறி – என் கதைகளில் சில உண்மைப் பாத்திரங்களும் வந்துவிடுவதுண்டு. நான் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. நான் இதைப் பின்னர் மறந்து விடுவேன். சில வேளைகளில் சில மனிதர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் முகத்தைத் கோணிக்கொண்டு செல்வது அதனால் தானோ என்னவோ? அவர்களால் எப்படி மறக்க முடியும்? ஆயுள் உள்ளவரை அவர்களால் மறக்க முடியாது அல்லவா? திரும்பவும் ‘தாங்கள்தான் அவர்கள்’ என்று ஞாபகப்படுத்தி விடுவார்கள்.

சில உண்மைச் சம்பவங்களை சிறுகதைகளாக்கி பரிசும் பெற்றிருக்கின்றேன். `தோப்பூர் மகாராஜா’, `அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை’, `கேள்விகளால் ஆனதுகதைகள் அப்பிடிப்பட்டவை தான்.